எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அனுராதபுர மாவட்டம் சார்பாக ஒன்பது உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 264 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
இவர்கள் பன்னிரெண்டு அரசியல் கட்சிகள் மற்றும் பத்து சுயேச்சைக் குழுக்கள் சார்பாகவும் போட்டியிடவுள்ளனர்.
இவ்வரசியல் கட்சிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் 6 பேரும், சுயேச்சைக் குழுக்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் 14 பேரும் மொத்தமாக 20 முஸ்லிம் வேட்பாளர்கள் இருந்து வருகின்றனர்.
அனுராதபுர மாவட்டத்தில் ஹொரவ்பொத்தான, மிஹிந்தல, கெகிராவ, கலாவெவ, மதவாச்சி ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளில் தலா ஒவ்வொருவர் வீதம் ஐந்து பேரும் அனுராதபுரம் கிழக்கு, அனுராதபுரம் மேற்கு ஆகிய இரண்டு தேர்தல் தொகுதிகளில் தலா இருவர் வீதம் நான்கு பேரும் மொத்தமாக ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை அனுராதபுர மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் சுமார் 5 இலட்சத்தி 22 ஆயிரம் பேர் மொத்த வாக்காளர்களாக உள்ளனர். இவர்களில் அறுபதாயிரத்தை அண்மித்த முஸ்லீம் வாக்காளர்களும் இருந்து வருகின்றனர்.
களம் இறங்கியிருக்கும் முஸ்லிம் வேட்பாளர்களில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மான், முன்னாள் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் பீ. சஹிது முன்னாள் ஹொரவ்பொத்தான பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.எம் இஸ்மாயில், எஸ்.எம் சலீம், எம். சம்சுதீன் மற்றும் எல்.டீ நஸ்ருல்லா ஆகியோர் அரசியல் கட்சிகள் ஊடாக களமிறங்கிய உள்ளனர்.
இந்த நிலையில் கட்சிகளுக்கப்பால், சமூக ரீதியில் ஒருவரையாவது, நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு அனுப்பக் கிடைக்குமாயின், அது அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் 67 வருடங்களின் பின்னர் 2015 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட பெரும் சாதனையை பலப்படுத்துவதாகும். அச் சாதனையை பலப்படுத்தவோ தக்க வைத்துக் கொள்ளவோ வேண்டுமாயின் முஸ்லிம் வாக்காளர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்துச் செயற்படல் வேண்டும். அரசியல் ரீதியிலான பலம் அதிகரிக்கப்படும் பட்சத்திலேயே எமது மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளதென்பதை, அனைவரும் உணர வேண்டும்.
அனுராதபுர மாவட்டத்தில் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு முதல் எமது சமூகம் சார் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்து வந்துள்ளார். அவர் நமது சமூகத்திற்காகவும் அந்நிய சமூகத்திற்காகவும் முழுமையான சேவைகளை இயன்றளவில் செய்துள்ளார்.
அவரின் காலப் பகுதியில் எமது சமூகத்திற்கு ஏற்பட்டிருந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுத்ததுடன் சமூகத்திற்கு பாதுகாவலராக இருந்து வந்துள்ளதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறப் போகும் தேர்தலில் சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டுமென்ற உணர்வுப் பூர்வமான குறிக்கோளில் இருக்கும் வேட்பாளர்கள் இருக்கவே செய்கின்றனர்.
இத்தகையவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியளவிலேயே உள்ளனர். ஏனையோர் சமூக வாக்குகளை சிதறடிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் வாக்குகளை பெறுவோராகவும் உள்ளனர். சமூகப் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்வதே அத்தகையவர்களின் குறிக்கோளாக உள்ளன. இத்தகையவர்களை முஸ்லிம் வாக்காளர்கள் இனம் காணவேண்டும். யார் ஒப்பந்த வேட்பாளர்கள், யார் சமூகப் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்வோர், யார் உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் சேவையாற்றக்கூடியவர்கள் என்ற வகையில் இனம் கண்டு, செயற்பட வேண்டிய பாரிய கடப்பாடுகளும், பொறுப்புக்களும், முஸ்லிம் சமூக வாக்காளர்களுக்கு இருந்து வருகின்றன.
இக்கடப்பாடுகளையும், பொறுப்பினையும் மேற்கொள்வதில் தவறு விட்டுவிடக் கூடாது. அத்துடன் முஸ்லிம் வாக்காளர்களில் கணிசமானவர்கள் முஸ்லிம் வேட்பாளர்கள் மீது அதிர்ப்த்தி கொண்டு, பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் நிலையும் இருந்து வரும் கசப்பான உண்மையையும் இங்கு கூற வேண்டியுள்ளது.
மேலும் அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் 2015 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட பிரநிதித்துவத்தை இம்முறை இழப்போமாயின் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையீனத்தை வெளிக்காட்டுவதாக அமைவதோடு முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும் பெரும் பின்னடைவாகுமென்பதையும் முஸ்லீம் சமூகம் உணர வேண்டும்.
எனவே ஆகஸ்ட் 5 ஆம் திகதி சிந்தித்து வாக்களித்து நம்மிலிருந்து நமக்காக ஒருவரை பாராளுமன்றம் அனுப்பி நமது உரிமைகளையும் இருப்பையும் பாதுகாத்து கொள்வோம்.
-முஹம்மட் ஹாசில்
No comments:
Post a Comment