சர்வதேச ஊடக சுதந்திர தினம் வருடாந்தம் மே 3 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வருட ஊடக சுதந்திர தினத்தின் கருப்பொருள் “அச்சம் அல்லது பக்கச்சார்பு அற்ற ஊடகவியல்” என்பதாகும்.
இம் முறை இத் தினமானது உலகளாவிய கொவிட் 19 நெருக்கடி காலத்தில் அனுஷ்டிக்கப்படுவதானது, ஊடக சுதந்திரத்தை உலகம் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் என்பதை மீள வலியுறுத்துவதாக அமைந்துள்ள அதே நேரம், போலிச் செய்திகளை முறியடிப்பதற்கான ஊடகங்களின் வகிபங்கை மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
ஒருபுறம் ஊடக சுதந்திரம் பொறுப்பற்ற வகையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற அதேவேளை, மறுபுறும் ஊடக சுதந்;திரத்தை மறுக்கும் வகையிலான செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை கவலைக்குரியதாகும். குறிப்பாக கொவிட் 19 வைரஸ் பரவலை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான போலிச் செய்திகள் பரப்பப்படுவதானது குறித்த வைரஸை முறியடிப்பதற்கான போராட்டத்தை மேலும் கடினமாக்கியுள்ளதாக அண்மையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரொஸ் அடானம் சுட்டிக்காட்டியிருந்ததையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம். அந்தவகையில் இலங்கையில் உள்ள பிரதான ஊடகங்கள், போலிச் செய்திகளை முறியடிப்பதற்கான தமது பணியில் மேலும் முனைப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
இதேவேளை அண்மைக்காலமாக இலங்கையில் சில தனியார் ஊடகங்களும் சமூக வலைத்தள பக்கங்களும் ஊடக சுதந்திரத்தை வலுவாக து~;பிரயோகம் செய்து சிறுபான்மை இனங்களுக்கு எதிரான தப்பபிப்பிராயத்தை வளர்ப்பதில் கட்டுக்கடங்காது செயற்படுகின்றமை பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக கொவிட் 19 விவகாரத்தை அறிக்கையிடும்போது முற்று முழுதாக சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சினது வழிகாட்டல்களையும் ஊடக ஒழுக்கக் கோவையையும் மீறி இவ்வூடங்கள் தன்னிச்சையாக செயற்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இவ்வாறான ஊடகங்கள் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று இன்றைய தினத்தில் வலியுறுத்த விரும்புகிறோம்.
மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் வன்முறை மற்றும் அடிப்படைவாதத்துக்கு எதிராக தமது கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரம்ஸி ராஸிக் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறும் ஏனைய பிரதான ஊடக அமைப்புகளுடன் இணைந்து நாமும் வேண்டுகோள்விடுக்க விரும்புகிறோம்.
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட உலகளாவிய ஊடக சுதந்திர சுட்டியில் 180 நாடுகளுக்குள் இலங்கைக்கு 127 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளமை இன்றைய தினத்தில் கூர்ந்து நோக்கத்தக்கதாகும். அந்த வகையில் இலங்கையானது ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் மேலும் முன்னேற்றமடைய வேண்டியுள்ளது என்பதையே இது வலியுறுத்துகிறது. யுத்த காலத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஊடக சுதந்திரம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் கண்டுள்ள போதிலும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தம்மைத்தாமே சுய தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்கின்ற போக்கினை சமகாலத்தில் அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் ஊடகவியலாளர்கள் கொண்டுள்ள அச்சத்தை நீக்கி சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சூழலை உறுதிப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும்.
உலக ஊடக சுதந்திர தினத்தின் இவ்வருட கருப்பொருள் குறிப்பிடுவதைப் போன்று அச்சமும் பக்கச்சார்பும் அற்ற ஊடகத்துறையைக் கட்டியெழுப்ப சகலரையும் கைகோர்க்குமாறும் அன்புடன் அழைப்பு விடுக்கிறோம்
என். எம். அமீன்
தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
No comments:
Post a Comment