ஒவ்வொரு உலக நிகழ்விலும் நல்லதும் கெட்டதும் இருந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்கள் கற்றுக் கொள்வதற்கும், தெரிந்து தெளிவதற்கும் பல்வேறு விடயங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.
மனித அறிவு படிப்படியாகவே வளர்க்கிறது என்று ஏற்றுக்கொள்வோருக்கும் இல்லை முதல் மனிதன் இறங்கிய போதே முழு அறிவுள்ள மனிதர்கள் உருவாகி விட்டார்கள் என்று கூறி பட்டனும், பக்கற்றும் வைத்து ஆதம் (அலை) அணிந்த ஜுப்பாவை பேஸ்புக்கில் காயப் போட்டு, சுப்ஹானல்லாஹ் சொல்வோருக்குமிடையில் இதன் அர்த்த – திருத்தங்கள் பற்றி விவாதிக்கும் உலகிலேயே நாம் இருக்கிறோம்.
புரிதல் வேறுபாடுகளின் அடிப்படையிலும் அது மூலமாகத் தோன்றும் கருத்தியல் மோதல்களிலுமே இந்த உலகம் இயங்கி;க் கொண்டிருக்கும் நிலையில் அதனூடாகவே சமூகங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை முஸ்லிம் சமூகம் இதற்கு எந்த விதத்திலும் விதிவிலக்கில்லை.
நல்ல வேளையாக ஆதம் (அலை) காலத்தில் ஐபேட் இருக்கவில்லை, அண்ணல் நபி முஹம்மத் (ஸல்) காலத்தில் இன்டர்நெட்டும் ஸ்மார்ட் போனும் இருக்கவில்லை. யாவற்றையும் நன்கறிந்த இறைவன் அதற்கேற்பவே மனிதனின் அறிவு விருத்தியையும் திட்டமிட்டுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!
இப்போதைய கொரோனா சூழ்நிலையிலிருந்து மீண்டதும் உலக சமூகவியல் ஒழுங்கில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இலங்கையில் அது அத்தனை பெரிய தாக்கத்தை உருவாக்கப் போவதில்லை அல்லது அதற்கு ஆட்சியாளர்கள் வழிவிடப் போவதில்லையென்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. ஆயினும், ஆட்சியாளர்கள் இச்சந்தர்ப்பதையடுத்து இலங்கையின் சமூகக் கட்டமைப்பில் தமக்குத் தேவையான மாற்றங்களை செய்தே ஆவார்கள் என்பது எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்று.
ஒரு நாடு – ஒரே சட்டம் என்பது வெறும் கோசமன்றி அரசின் அடிப்படைத் திட்டம். இலங்கைத் தீவு பல்லின மக்களைக் கொண்ட நாடாக இருக்கின்ற போதிலும் சிங்கள மக்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இறுதியாக மேற்கொள்ளப்பட்ட 2012ம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி இது நாட்டின் 74.90 வீதமாகும்.
ஏனைய மக்களே சிறுபான்மையென்ற வகையறாக்குள் வருகின்ற அதேவேளை இந்நாடு பல்லின மக்களின் அபிலாசைகளை ஜனநாயக ரீதியாக பேணி வந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் சிறுபான்மை சமூகங்களுக்குப் பலவிதமான சலுகைகளும், உரிமைகளும் இத்தீவில் மன்னர் காலங்களிலிருந்து பேணப்பட்டு வருகின்றன. பல சந்தர்ப்பங்களில் தமது சலுகையையே உரிமையெனக் கருதி முஸ்லிம் சமூகம் தம்மைத் தாமே உணர்வு ரீதியாக காயப்படுத்திக் கொள்ளும் சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்தேறியுள்ளது.
இதேவேளை, தனி நாடு கேட்டுத் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர் ஆயுதமேந்திப் போராடிய காலத்தில் தம் அரசியல் உரிமைகளும் பறிபோய் விடுமோ என்று அச்சப்பட்ட முஸ்லிம் உணர்வுகளை ஒன்று திரட்டி மர்ஹும் அஷ்ரப் முஸ்லிம் பெயரால் உருவாக்கிய கட்சி, இன்று தாம் பேசினால் அது இனவாதமாகி விடும் என்ற அச்சத்தில் வாயடைத்துப் போயிருக்கும் சூழ்நிலையையும் காண்கிறோம்.
மறுபுறத்தில், இதே முஸ்லிம் சமூகத்தில் இன்றைய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை நியாயப்படுத்தவும் கூட அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர், தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களின் ஜனாஸா மாத்திரம் எரிக்கப்படவில்லையென்கிறார். கொரோனா தொற்றில் உயிரிழந்தோருக்கு வழங்கப்படும் இறுதிச் சடங்கிலும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ள போதிலும், அதை சிங்கள முற்போக்கு சக்திகள் சுட்டிக்காட்டிப் பேசிய போதிலும் எம்மவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஒரு நிமிடம் தாமதித்து ஏன்? என சிந்தித்துப் பார்த்தால் அத்தனையும் சுயநலம் என்ற முடிவு கிடைக்கும்.
இன்னொரு புறத்தில் தம்மை ஏனையோரையும் விட சிறந்தவர்கள் அல்லது உயர்ந்தவர்கள் (elite) என்று கருதக்கூடியவர்கள் அடிமட்ட மக்களின் பிரச்சினைகள் சில்லறைப் பிரச்சினைகள் என்றே கருதுகிறார்கள். அவர்களின் உறவுக்காரர் ஒருவரின் உடலம் எரிக்கப்பட்டுள்ள போதிலும் கூட இந்த அரசியல் சிறப்பு ஆதிக்கச் சிந்தனையில் அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள், அதுவும் முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருந்தே.
இவ்வாறான போராட்டங்களின் மத்தியில் பொது மக்களோ அதைவிடச் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். தமக்குப் பிரச்சினையொன்று வந்தால் மாத்திரமே அவர்களின் சமூக உணர்வு கொந்தளிக்கும். எனவே, அதுவரை இவையெல்லாம் யாரோ ஒருவருடைய பிரச்சினை தாம்.
இக்கால கட்டத்தில் நமது சமூகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஜனாஸா பிரச்சினை மாத்திரம் தான் எதிர்காலத்தில் இருக்கப் போகும் பிரச்சினையன்று. அடிப்படையில் ஒற்றுமைக்கும் நமக்கும் வெகு தூரமாகிவிட்டதால் மேற்குறிப்பிட்ட சமூக முரண்பாடுகள் எதிர்கால இலங்கை அரசியலில் பல்வேறு வகையில் பிரதிபலிக்கும், தாக்கம் செலுத்தும்.
நோன்பு, தேர்தல் மற்றும் அவசர காலங்களின் போது கிடைக்கும் ஒரு நிவாரணப் பொதி, வேலை வாய்ப்பு, பரிந்துரைக் கடிதங்கள் அல்லது ஏதோ ஊர் மட்டத்திலான சமூக அந்தஸ்த்துக்காகவே அரசியலை உபயோகப்படுத்தப் பழகிக் கொண்டுள்ள இந்த சமூகத்தில் பொதுவான விழிப்புணர்வுக்கும் இடமிருக்கிறதா? என்ற கேள்வியும் எழும்.
மக்கள் சேவை செய்ய முடியுமெனக் கிளம்பிய பலர், அரசியலில் நிலைத்திருப்பதானால் 'செலவு' அதிகம் என்று ஒதுங்கிச் செல்வதையும் பார்க்கிறோம். அந்த அளவுக்கு எடுத்துப் பழகி விட்ட சமூகத்தைக் கொடுத்துக் கெடுத்துக் கொண்டிருக்கிறது எமது சமூக அரசியல்.
இப்போது நாடாளுமன்றம் இல்லை. காபந்து அரசு ஏதோ பெயருக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது? என்றும் முஸ்லிம் சமூகத்துக்குத் தெரியவில்லை. அரசியல் தலைமைகள் பயந்து ஒதுங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ சுமந்திரன் இலவசமாக வாதாட முன் வந்தார் என்ற் கௌரவப் பிரச்சினைக்காக மூன்று அரசியல்வாதிகளும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள், அவர்களது ஆதரவாளர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் கொண்டாடுகிறார்கள். எல்லாம் சரி, ஆனால் பின்னால் பல சர்ச்சைகள் உண்டு.
ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆகக்குறைந்தது 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் இறுதியாக வந்த ஒருவரைத் தவிர, ஏனைய அனைவரையும் ஒரு குழுமத்தில் நான் இணைத்திருந்தேன். அடிப்படையில் அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, முடிந்தால் அனைவரும் ஒன்று சேர்வது, அது முடியாவிட்டால், ஆகக்குறைந்தது இணைந்து பணியாற்றுவது என்ற அடிப்படைகளாகும்.
அந்த அளவிலே அனைவர் மத்தியிலிருந்த அடிப்படை உடன்பாடு, மே மாதம் 18,19 அல்லது 20ம் திகதிக்குள் விசாரணைக்குத் தேதி கோருவதாக இருந்தது. இருப்பினும் இந்த மூன்று தினங்களிலும் பொதுத் தேர்தலுக்கு எதிரான வழக்குகள் மீதான பரிசீலனை இடம்பெற்றதால் அதற்கடுத்த மாற்றுத் தீர்வாக எதிர்வரும் வாரம், ஆகக்குறைந்தது 27ம் திகதியை ஜனாஸா எரிப்பு வழக்குக்காக கோரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனாலும், நான் கடந்த வாரமே கூறியிருந்த உதாரணத்துக்கேற்ப, வழக்குப் பதிவு செய்திருந்த ஒரு தரப்பு ஜுன் 8ம் திகதிக்கு இணக்கம் தெரிவித்தது. இப்பின்னணியில் வழக்குகள் மீதான பரிசீலனைக்காக இரு வாரங்கள் காத்திருக்கும் தேவை கட்டாயம் உருவாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் முன் கூட்டி தேதி தந்திருக்கும், இது அவர்களின் பிழையென்றில்லை, ஆனால், மனுதாரர்களுக்கிடையிலான தொடர்பாடல் இல்லாத நிலையில், இறுதி நேரத்தில் திடீர் திடீரென உள்நுழையும் நபர்களால் இது போன்ற பின்னடைவுகள் எதிர்பார்க்கப்பட வேண்டியது என்பதே இங்கு படிப்பினை.
ஆக, உள்ளிருந்து உயர்வது எது என்பதிலும் தாழ்வது எதுவென்பதிலும் சமூகப் புரிதல் அவசியப்படுகிறது. 2010ம் ஆண்டு முதல் இந்நாட்டில் முஸ்லிம்கள் அளவுக்கு அதிகமான அதிகாரத்துடன், உரிமைகளுடன் வாழ்கிறார்கள் என்று; சிங்கள மக்கள் மத்தியில் நிறுவப்பட்டு வருகிறது. பேரினவாதத்தை நியாயப்படுத்துவதற்கே கூறப்படினும் கூட, அதனை ஏற்றுக்கொள்ள விளைந்த மக்களே தமக்கென இருக்கும் ஒரே நாட்டைக் காப்பாற்ற இதுவே கடைசி சந்தர்ப்பம் எனக் கருதி கடந்த நவம்பரில் தம் தீர்ப்பைச் சொன்னார்கள்.
ஜனநாயகத் தீர்ப்பு என்ற அடிப்படையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டேயாக வேண்டும். ஆனால், அத்தீர்ப்பின் பின்னணியில் மேலோங்கிய பேரினவாதம் எதை நோக்கி நகரும் என்ற அச்சம் சோசலிஷ குடியரசின் நடைமுறைக்கு எவ்வகையான ஆபத்துக்களை உருவாக்கும் என்ற அச்ச உணர்வு இன்னும் குறையவில்லை.
போர்த்துக்கீயர், அதனைத் தொடர்ந்து ஒல்லாந்தர், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர் என அன்னியர்கள் நாட்டைக் கைப்பற்றிய எல்லா சந்தர்ப்பங்களிலும் இத்தீவின் குடிகள் என்ற அடிப்படையில் அனைத்து சமூகங்களும் அதற்கான பங்கை வழங்கியிருக்கின்றன.
தமக்கெதிராகப் போராடியவர்களை 169 பேரை தேசத் துரோகிகள் என முத்திரை குத்தி 1804ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வெளியிட்ட அறிவிப்பில் ஏழு பேர் முஸ்லிம்களாக அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நால்வரும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூவரும் உள்ளடங்கியிருந்தார்கள்.
பின் சுதந்திர காலப் போராட்டம், அதன் பின்னான சுதந்திர இலங்கையைக் கட்டியெழுப்பும் போராட்டம் என அனைத்திலும் தேசிய ரீதியாகப் பங்களித்து வந்த முஸ்லிம் சமூகம் தனிநாடு கோரிய விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முற்றாக நிராகரித்துப் பேரிழப்புகளை சந்தித்திருந்தது. இவையெல்லாம் போதாதா? என்று கேட்டால் அவை யாவும் கடந்த காலம்.
அன்றைய தலைவர்கள் மத்தியில் எதிர்கால சிந்தனை மேலோங்கியிருந்தது. சமூகமும் தலைவர்களின் வழிநடாத்தல்களை ஏற்றுக் கொண்டிருந்தது. ஆயினும், கட்சி ரீதியிலான பிளவுக்குள் உந்தப்பட்ட முஸ்லிம் சமூகம் இன்றைய கால கட்டத்தில் முழு அளவில் சிதைந்து போயுள்ளது.
ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஒரு கூறு என்ற நிலை மாறி அரசியல் கட்சி, கொள்கை இயக்கங்களால் பல பிரிவுகளாகப் போயுள்ள முஸ்லிம் சமூகத்தில் யார் முஸ்லிம்கள் என்ற கேள்வி மேலோங்கியிருக்கிறது. தப்லீக் காரர் பேசும் இஸ்லாம் ஜமாத்தே இஸ்லாமி உறுப்பினருக்கு வெறுப்பாக இருக்கிறது. இருவரும் பேசும் இஸ்லாம் தௌஹீத் காரருக்கு வெறுப்பாக இருக்கிறது. இந்த மூவரும் பேசும் இஸ்லாம் தரீக்கா காரருக்கு வெறுப்பாக இருக்கிறது. அத்துடன் இந்த சமூகத்தின் உள்முரண்பாடு பற்றிய முழுமையான பட்டியல் பேரினவாதிகளின் கையில் இருக்கிறது.
ஒவ்வொரு அரச அலுவலகத்திலும் தாம் நிந்திக்கப்படுவதாகவும், ஓர வஞ்சனை இடம்பெறுவதாகவும் அதிகாரிகள் கருதுகிறார்கள். ஆனால், அதை தாம் சொன்னதாக வெளியே சொல்ல வேண்டாம் என்று தான் கேட்கிறார்கள். குழந்தைக்கு கிளினிக் சென்ற பெண்ணுக்கு கருத்தடை ஊசி போட்டுவிட்டார்கள் என்று வெளிநாட்டில் உள்ள ஒரு கணவர் கதறுகிறார். ஆனால், அந்த அநியாயம் தமக்கு நடந்தது என்று யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைக்கிறார்.
இன்னொரு புறத்தில் ஜனாஸாக்களை எரிப்பதற்கு கட்டாயத்தின் பேரில் கையொப்பமிட்ட உறவுக்காரர்கள் இப்போது கதறுகிறார்கள், மறுபுறத்தில் யார், யாருக்காக பேசுவது என்று தெரியாத பொதுக் குழப்பத்தில் மக்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலையிலும் கூட இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக ஒன்று பட முடியாத துரதிஷ்டம் நிலவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தனி நபரும் தமக்கான அங்கீகாரத்தைத் தேடிக்கொண்டிருப்பதால் ஒற்றைச் சமூகம் என்ற அடையாளம் அழிந்து விட்டது. அது மீள வருமா? என்பது விடையில்லாக் கேள்வி. வரவேண்டும் என்பது அவா!
அது போக, அரசியல் ரீதியாகத் தலைமைத்துவம் சிதைந்து போயுள்ள நிலையில் மார்க்க ரீதியிலும் அதனை சிதைத்தேயாக வேண்டும் என்று பலர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். தேசிய ரீதியிலான ஒரு கட்டுமானமும் அமைப்பும் இருந்தால், அதில் இணைந்து தம் கருத்துக்களைச் சொல்லி திருத்தங்களைக் காண்பதற்கான பொறுமை யாரிடமும் இல்லை. சில வேளைகளில் அதற்கான இடமும் இல்லையென்ற முறைப்பாடும் இல்லாமல் இல்லை.
இப்படி தனித்தனியான ஆனால் ஒரே சமூகத்தின் பிரச்சினையை, எப்போது? யார்? எந்த வழியில் ஆராயப் போகிறார்கள்? அல்லது ஆராயத்தான் முடியுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனாலும் உணரப்படும் வரை முரண்பாடுகளால் முட்டி மோதி இன்னும் பல இழப்புகளை இச்சமூகம் சந்திக்கப் போகிறது என்பது மாத்திரம் திண்ணம்.
ரமழானின் நிறைவை எட்டியிருக்கும் நாம் எதிர்கால ஆபத்துகளிலிருந்தும் இறைவனிடமே பாதுகாப்பைத் தேடுவோம்!
Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
No comments:
Post a Comment