13ம் நூற்றாண்டில் பக்தாத் அறிவகம் (பைத்-அல் ஹிக்மா) மொங்கோலியர்களால் நாசமாக்கப்பட்டதிலிருந்து 1981 யாழ் பொது நூலக எரிப்பு வரை.. குறிப்பிட்ட சமூகமொன்றின் அறிவு வளர்ச்சியை முடக்கும் பாதக செயல்கள் உலகில் அவ்வப் போது அரங்கேறியுள்ளன.
அரசியல் சூழ்நிலையில்... தமிழ் சமூகத்தின் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியின் படு மோசமான வெளிப்பாடாகவே இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற யாழ் பொது நூலக எரிப்பை கணிக்க முடிகிறது. அதிர்ஷ்டவசமாக, நன்மக்களின் முயற்சியால் மீண்டும் யாழ் பொது நூலகம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. 2018ல் அங்கு சென்றிருந்த போது எடுத்த படத்தையே இங்கு (இடது) இணைத்திருக்கிறேன்.
இங்கு இணைக்கப்பட்டுள்ள படத்தில் வலது புறம் காணும் காட்சிகள்... பலருக்குத் தெரியாத விடயமாகவும் இருக்கலாம். எனவே அது பற்றியும் பேச வேண்டும். அதற்கு முன்னர்.... இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இலக்கிய தனித்துவம் பற்றியும் பேசியாக வேண்டும்.
ஒருவேளை போர்த்துக்கீயர் இலங்கையைக் கைப்பற்றியிருக்காவிட்டால்.... இன்று இதைப்பற்றி பேசும் தேவை கூட இருந்திருக்காது. அன்று போர்த்துக்கீயர் இலங்கையைக் கைப்பற்றிய போது நாட்டில் நிலவிய உள்நாட்டு அரசியல் பிளவுகளால், எல்லையைக் காப்பாற்றப் போராடி... ஈற்றில் போர்த்துக்கீயரினால் மிகக் கடுமையாக நசுக்கப்பட்ட சமூகமானது இலங்கையின் முஸ்லிம் சமூகம்.
கொழும்புக்குள் முழு அதிகாரத்துடன் நுழைந்ததும்... அன்றைய முஸ்லிம் சமூகத்தினரின் அறிவு சார்ந்த விடயங்களையே முதலில் இலக்கு வைத்த போர்த்துக்கீயர்கள், சமூக இலக்கிய பதிவுகள், மார்க்க நூல்கள் என எல்லாவற்றையும் அழித்தொழித்தார்கள். மிக முக்கியமாக அக்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் எழுத்து மொழியாக வளர்ச்சி பெற்று வந்த அர்வி யில் பதியப்பட்டிருந்த முக்கிய சமூக இலக்கியங்கள் இவ்வாறு அழிந்து போயின.
20ம் நூற்றாண்டில்... ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை சமூகங்கள் சுயாதீனமான சமூக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் சூழ்நிலையிருந்தது. 1933 அளவில் சிறு அளவில் ஆரம்பிக்கப்பட்ட தனியார் நூலகமே தமிழ் சமூகத்தின் அளப்பரிய பங்கினால் யாழ் பொது நூலகமாக வளர்ச்சி பெற்று, 1981ல் பொறாமைத் தீக்கிரையான போதும் மீண்டும் கம்பீரமாகத் தன் பயணத்தைத் தொடர்கிறது.
சம காலத்தில்.. இலங்கை சோனக சமூகத்தினருக்காகவும் அன்றைய சமூகப் பெருந்தகைகளால் உருவாக்கப்பட்ட நூலகம்... அங்கிருந்து இன்று வரை அதே நிலையிலேயே இருக்கிறது. நான் சிறு வயதில் கண்டதை விட மிக மிகக்குறைவான அளவினரே தற்காலத்தில் அங்கு செல்கிறார்கள்....பயன்பெறுகிறார்கள், பலருக்கு இப்படியொன்று இருப்பதே தெரியாது.
கொழும்பு, பிரிஸ்டல் வீதியென அறியப்படும் சேர் ராசிக் பரீத் மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் (MICH) உள்ள.... இன்னும் ஏதோ ஒரு அளவில் இயங்கிக் கொண்டிருக்கும்... ஒரு காலத்தில் மிகப் பயனுள்ள இடமாக இருந்த நூலகத்தினையே படத்தில் வலது புறம் காண்கிறீர்கள்.
ஏதோ ஒரு ஆதங்கம்!
Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
No comments:
Post a Comment