முஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விடயம்.
பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்த நிலையில் ஊர்மக்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லாமலும் வீதியில் திரிந்துக் கொண்டிருக்காமலும் நோன்பு பெருநாள் தொழுகையை வீட்டிலேயே நிறைவேற்றினார்கள்.
இவ்வாறான நிலையில் அட்டுலுகம பிரதேசத்தில் முஸ்லிம்கள் வீட்டில் இருந்தவாறு பெருநாளை கொண்டாடுகிறார்கள் என்பதை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் தெரண ஊடகவியலாளரை பிரதேசத்துக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு சென்ற அவர் தலைவரின் நேர்காணலை முடித்துவிட்டு செல்லும் வழியில் அநாவசியமாக ஊரில் உள்ள இன்னும் பல பள்ளிவாசல்களையும் படம் பிடித்துள்ளார். தான் ஓர் ஊடகவியலாளர் என்பதை அடையாளப்படுத்தும் எந்தவொரு அடையாள அட்டையும் ஆவணமும் காட்சிபடுத்தாத நிலையில் பள்ளிவாசல்களை படம் பிடித்துள்ளார்.
இதனை அவதானித்த ஊர்மக்கள் அவரிடம் எதற்காக பள்ளிவாசல்களை படம் பிடிக்கிறீர்கள் என்று வினவியுள்ளனர். தான் ஓர் ஊடகவியலாளர் என்றும் இங்குள்ள நிலைமைகளை படம் பிடிப்பதாகவும் கூறியுள்ளார். ஊர் மக்களின் செயற்பாடுகளை படம் பிடிப்பதற்கு பதிலாக எதற்காக பள்ளிவாசல்களை படம் பிடிக்கிறீர்கள் என்று ஊர் மக்கள் கேட்டனர். இதற்கிடையில் ஊர் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் தர்க்கம் முற்றியது.
இதனை அடுத்து குறித்த ஊடகவியலாளர் தான் செய்தி சேகரிக்க சென்றபோது தாக்கப்பட்டதாக தெரிவித்து பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். உடனடியாக விரைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்தனர்.
இன்றைய தினம் 25.05.2020 பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி றமீஸ் பசீர் 'இணக்கப்பாட்டுடன் நிறைவு செய்யும் வழக்கொன்றுக்கு அடையாள அணிவகுப்பு தேவை இல்லையென்றும் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறும் கோரினார்.
மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த பொலிசார் இதற்கு ஆட்சேபனை தெரிவித்து 14 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரினர்.
சுமார் 45 நிமிடங்கள் வரை நடைபெற்ற வாதங்களின் பின்னர் வழக்கினை விசாரணை செய்த பதில் நீதவான் சந்தேக நபர்களை நாளை வரை தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
-Nizam Deen
1 comment:
This total mistake from that masjid leaders Why? They invited media? and also they invited the problem.
Post a Comment