கடந்த மாநகர சபைத் தேர்தலின் போது... மத்திய கொழும்பில் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்த ஒரு அரசியல்வாதி மீது கோபம் கோபமாக வந்தது...
இன்னொரு கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் ஊடாக ஏழை மக்களுக்கு 'பொதிகள்' வழங்கப்படுவதாகவும் அதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் மீடியாவையும் கூட்டி வைத்து ஒப்பாரி வைத்தார்... எங்கட கமயை (ගම) பார்க்க எங்களுக்குத் தெரியும் என்றும் சொன்னார்.
அங்கே உதவி பெறப் போன ஒரு தாயை சுற்றிச் சுற்றி வீடியோ எடுத்து... மீடியாவுக்கும் காட்டி, வீரவசனம் பேசி அசிங்கப்படுத்திய அந்த வீரப்புலியைத் தொடர்பு கொண்டு...
அது சரி, அந்த பேக்ல என்ன ஒரு 2 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 1 கிலோ கிழங்கு இருந்திருக்குமா? என்று கேட்டேன். அப்படித்தான் போல என்றார்... அப்போ அதைக் கூட எடுக்கறதுக்குத் தம் இல்லாமையை மறைக்காது தேடி வந்த தாய் ஒருவரை அவ்வாறு அவமானப்படுத்துவது சரியா? என்று கேட்டேன்... அப்படியில்லை இது தேர்தல் நேரம் தானே என்றார்.
நாற்பது வயதுகளில் இருந்திருக்கக் கூடிய அந்தத் தாய்க்கு 10...11 வயதிலாவது குழந்தையொன்றும் இருந்திருக்கலாம்... ஒரு வேளை வயிற்றுப் பசியைப் போக்க.. குடும்பக் கஷ்டத்தை மறைக்க முடியாமல் உதவியைப் பெற வருபவர்களை அவமானப்படுத்துவதை விட... அவர் தருவதை எடுக்காதீர்கள் நான் வேறாகத் தருகிறேன் என்று நீங்கள் கூறியிருந்தால் கூட நியாயம்! என்று சொன்னபோது வாயடைத்து இருந்தார்.
கொழும்பில் மாத்திரமன்றி... பல இடங்களில் சமூகத்தின் நிலை இதுதான். இன்று மாளிகாவத்தையில் கண்ட ஓட்டை விழுந்த செருப்புகளும் இதைத்தான் எடுத்தியம்புகின்றன.
நம் சமூகத்தில்.. 6 கோடிக்கு Flat வாங்கி... அதுக்கு மாதாந்தம் 35 ஆயிரம் ரூபா சேர்விஸ் சார்ஜ் கட்டுறவங்களும் இருக்காங்க... மாதாந்தம் 5000 ரூபா வீட்டு வாடகை கட்ட முடியாதவங்களும் இருக்காங்க...
இந்த சமநிலையற்ற சூழ்நிலையில் வசதிக்காகப் பேசப்படும் அரசியல் இன்று மீண்டுமொரு தடவை துகிலுரிந்து நிற்கிறது!
Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
No comments:
Post a Comment