யாருக்கு வலிப்பதால் எவருக்கு நஷ்டம்? - sonakar.com

Post Top Ad

Friday, 15 May 2020

யாருக்கு வலிப்பதால் எவருக்கு நஷ்டம்?


உலகம் ஒரு புதிய ஒழுங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன் மனிதர்கள் மத்தியில் நிலவிய பழக்கவழக்கங்கள், கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் நாகரீகம் என நம்பிக்கொண்டிருந்த பல விடயங்களை கொரோனா வைரஸ் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. ஆக, புதிய சமூக ஒழுங்கு தவிர்க்க முடியாததொன்றாகிக் கொண்டிருக்கிறது.

எனினும், உடனடியான சமூக மாற்றங்களை பரந்த அளவில் காண முடியாது. அதைத் தாங்கும் சக்தியும் தற்போது மக்களுக்கு இல்லை. எனவே, எத்தனை சீக்கிரமாகத் தாம் இயல்பாக வாழ்ந்த முறைமைக்குத் திரும்ப முடியுமோ அத்தனை வேகமாக அது நோக்கி நகர்வதற்காக மக்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பெருநாள் வரப்போகிறது என்பதை விட பெண்கள் கடைக்குப் போகாதீர்கள் அல்லது பெண்களை கடைக்கு அனுப்பாதீர்கள் என்ற அறிவுரையே அதிகமாகக் கேட்கிறது. என்னதான் இருந்தாலும், எங்களுக்க இல்லையென்றாலும் கூட பிள்ளைகளுக்கு புத்தாடை வாங்கியாக வேண்டுமே என்ற ஆதங்கம் தாய்மாருக்கு வருவது மிகச் சாதாரண விடயம்.

ஐவேளை கூட்டுத் தொழுகையில்லை, ஜும்மா இல்லை, தராவீஹ் கூட இல்லை இந்நிலையில் பெருநாளுக்காக ஏன் முண்டியடிக்கிறீர்கள்? என்ற கேள்வியும் சமூகத்தில் எழாமலில்லை. ஏதோ ஒரு வகையில் அடுக்கடுக்காக கேள்விகளே எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு மாற்றத்திற்காக, கேள்விகளை மறு பக்கம் திருப்பி, ஆயிரக்கணக்கான மக்களைக் கட்டுப்படுத்த முனைவதை விட சில நூறுகளில் உள்ள கடைக் காரர்களைக் கட்டுப்படுத்தலாமே? என்று சிந்திக்கலாம். ஆனாலும், அப்படியான மாற்றுச் சிந்தனையை விட 'பொதுவான' எண்ணப் போக்கு எதுவோ அதில் வாழ்ந்து கொள்வதே சுகமானது என்பது பெரும்பாலானோர் நிலைப்பாடு.

இதே போன்று, யாருக்கு என்ன நடந்தாலும், நமக்கு நடக்கும் வரை மௌனமாக இருப்போம் என்பதும் பொதுவான எண்ணப் போக்காகவே இருக்கிறது. இந்த வரையறைக்கு அப்பாற்பட்ட சமூக சிந்தனை உள்ளோர் கூட சிலவேளைகளில் மௌனித்திருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அரசியல், அச்சம் மற்றும் இன்னபிற எல்லைகளும் தேவைகளும் இதற்குக் காரணமாக இருக்கிறது.

கொரோனா சூழ்நிலையில் பொதுவாக மக்களுக்குத் தெரிந்த விடயம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றன என்பதாகும். இதைக் கேட்ட சாதாரண முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் துடித்துப் போனார்கள், கோபித்தார்கள் சிலவேளைகளில் சபிக்கவும் செய்தார்கள். ஆயினும், ஆட்சியாளர்களைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற அசாதாரண பிரிவைச் சேர்ந்தவர்கள் அதற்கு வியாக்கியானம் தேடி நியாயப்படுத்தி வருகிறார்கள். வெளிப்படையாகச் சொன்னால் பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை எதுவரை உண்மை பேசலாம் என்ற எல்லை அவர்களுக்கு உண்டு. அடங்கியிருக்காத போது எப்படிப்பட்ட தாக்குதல்கள் வரும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கும் உதாரணங்கள் உண்டு. அதிக தூரம் செல்லத் தேவையில்லை கடந்த செவ்வாய் 14ம் திகதி அடங்கியிருத்தலை வலியுறுத்தும் ஒரு சம்பவம் நடந்தேறியது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதில் முஸ்லிம் சமூகத்தில் முன்னணியில் திகழ்ந்தவர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி. நீண்ட காலமாக மஹிந்த தரப்போடு நல்லுறவைப் பேணி வந்த அவர், இதற்கு முன் பல விடயங்களில் தமக்கு நியாயம் என்று பட்ட அரசியல் மற்றும் சமூக விடயங்களைப் பேசியிருக்கிறார்;. ஒரு தடவை தம் பிராந்திய பேச்சுவழக்கில் நிச்சயமாக வெற்றி பெறப் போகும் வேட்பாளரை ஆதரிக்கா விட்டால் 'அம்பானைக்கு' கிடைக்கும் என்று தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி சிக்கலில் மாட்டியும் கொண்டார்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்துத் தான் ஆக வேண்டும் என மார்ச் மாதம் 31ம் திகதி அரசாங்கம் எடுத்த முடிவு வெளிப்படையாகப் பேசக்கூடிய அவருக்கும் அழுத்தத்தைக் கொடுத்தது. எனவே, பொதுத் தளத்தில் நின்று ஏப்ரல் மாதம் 1ம் திகதி கருத்துக் கூறிய அவர், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்போரின் உடலை எரிப்பதற்கு தகுந்த விஞ்ஞான மற்றும் நடைமுறை விளக்கங்கள் இருந்திருப்பின் ஜனாஸாக்களை எரிப்பதில் தமக்கு ஆட்சேபனை இருந்திருக்காது என்று கருத்தொன்றை பதிவு செய்தார்.

அவர் ஒரு சட்டத்தரணியென்பதால், அந்தக் கருத்தினை ஆழமாக அலசின், முறையான விஞ்ஞான விளக்கம் இ;ல்லையென்பதால் ஜனாஸாக்களை எரிப்பதில் தமக்கு உடன்பாடில்லையென்று அவர் சொன்னதாகவே கருதப்படுகிறது.

இந்தக் கருத்தினைப் பெற்றுக்கொண்ட அல்ஜசீரா ஆறு வாரங்கள் கழித்துப் பிரசுரித்த ஆக்கம் ஒன்றில் அதனை மேற்கோள் காட்டியிருந்தது. அலிசப்ரி தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியதை சிறு தொகையினர் லைக் செய்ய, இன்னும் சிலர் ஷெயார் செய்ததோடு அந்தக் கதை முடிந்தது. யாரும் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால், அல்ஜசீரா போன்ற ஒரு ஊடகத்தில் வெளிவந்ததனால் ஆறு வாரம் கழித்தாவது அலி சப்ரிக்குப் பாடம் புகட்டியாக வேண்டும் எனக் களமிறங்கிய சிங்ஹலே எனும் கடும்போக்குவாத அமைப்பு, அவரை எப்படியெல்லாம் திட்ட முடியுமோ அப்படியெல்லாம் தற்போதைக்குத் திட்டிக் கேவலப்படுத்தி முடித்துள்ளது.

இதுநாள் வரை போற்றப்பட்டு வந்த அலிசப்ரி திடீரென இப்படி வேண்டாமல் போனாரா? என்ற கேள்வியெழாமல் இல்லை. அதற்காக அவர் எதிர்த் தரப்புக்குத் தாவி ஆட்சியாளர்களை விமர்சிக்கப் போவதுமில்லை. ஏனெனில் தன் தொழிற்துறையில் வளர்ச்சியடைந்த ஒரு நிலையில் உள்ள அவர் 2019 ஒக்டோபருக்கு முன் அப்படி பொது விடயங்களுக்குக் கருத்துக் கூறியவரும் அன்று.

அரசியல் ரீதியாக எந்தப் பக்கத்தில் இருக்க வேண்டும்? யாருக்காகப் பேச வேண்டும்? எந்தக் கொள்கையை ஆதரிக்க வேண்டும் என்பது அவரது உரிமை. ஆனாலும், தப்பித் தவறியும் 'உண்மையையும்' நியாயயத்தையும் பேசினால் என்னாகும் என்பதற்கு கடும்போக்குவாத அமைப்பு வெளியிட்டிருக்கும் கடுங்கோபம் ஒரு மிகப்பெரிய பாடம்.

ஆக, இருப்பதாக இருந்தால் அடங்கியிருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது. தப்பித் தவறியும் உண்மை பேசினால், எதிர்காலம் முழுமையாக பாதிக்கப்படும் என்ற வகையில் அவரும் அடக்கப்படுகிறார். இந்த நிலை தான் சமூக நீதிக்கும் உரிமைகளுக்கும் அப்பால் நின்று முட்டுக் கொடுக்கச் செல்லும் மற்றவர்களுக்கும் வரும் என்பது இங்கிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய பாடம்.

இந்த நிலையில், இலங்கை அரசியலில் சமூக உரிமைகளைப் பாதுகாப்பது எப்படி? என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு முஸ்லிம் தனித்துவ அரசியல் தான் ஒரே வழியென நம்பக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால், முஸ்லிம் சமூகத்தின் பெயரில் அரசியல் கட்சி நடாத்துபவர்கள் என்ன வென்றால் நாங்கள் பேசினால் அது இனவாதமாகி விடும் என்கிறார்கள். முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போவதாகக் கூறி, முஸ்லிம் அடையாளத்தின் பேரில் கட்சி நடாத்துபவர்கள் பேசினால் அது இனவாதமாகி விடும் என்ற அச்சமிருக்கும் என்றால் நியாயப்படி அந்தக் கட்சியைக் கலைத்து விட வேண்டும்.

மர்ஹும் அஷ்ரப் நுஆ என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார், அதனைத் தொடர்ந்திருந்தால் கூட இன்று இந்த அவல நிலை அவசியமில்லை. எனினும் அரசியல் ரோஷம் என்று வரும்போது ஏதாவது செய்து தலையைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் இவ்வாறானவர்களுகு;கு இருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இனவாத அச்சத்தையெல்லாம் தாண்டிப் பேச வேண்டியாகிறது. இதற்குச் சிறந்த உதாரணமும் அண்மையிலேயே அரங்கேறியுள்ளது.

முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதையெதிர்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை பல மட்டத்தில், பல முனைகளில் சிந்திக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதற்கிடையில், கடந்த ஏழாம் திகதியான போது ஆகக்குறைந்தது இரு குழுக்கள் காரியத்தில் இறங்கி வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தது. இதேவேளை, பரந்த அளவில் ஏற்பாடுகளைச் செய்து களமிறங்க முனைந்த இன்னொரு அணி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரனை நாடி அவரை இந்த வழக்கில் ஆஜராகக் கோரியிருந்தது.

அவரும் தான் ஆஜராகிறேன் என்று சொல்வதோடு நின்று விடாமல் இலவசமாகவே வழக்காட வருவதாக வேறு தெரிவித்து விட்டார். மொத்தமாக தற்போது ஆறு அடிப்படை உரிமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஏனைய வழக்குகளுக்கு வேறு சட்டத்தரணிகள் ஆஜராகின்றனர். ஆயினும், சுமந்திரனின் வருகை அரசியல் அரங்கில் சலசலப்பை உருவாக்கியது. இந்நிலையில் மார்ச் 31ம் திகதி எரியூட்டப்பட்ட முதலாவது ஜனாஸாவுக்குக் கண்டனம் வெளியிட்ட பின் அடங்கியிருந்த அரசியல் தலைவர்கள் வீறு கொண்டு எழுந்து நாங்களும் வழக்காடப் போகிறோம் என்கிறார்கள்.

போதாக்குறைக்கு, உறங்கு நிலையிலிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும் தானும் வழக்காடப் போவதாக செவ்வாய் தினம் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றில் இவ்வாறு ஒரே விடயத்துக்கு பல முனைகளில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதில் குறையில்லை. ஆயினும், அனைத்து வழக்குகளும் ஒரே விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரே வகையிலான ஆதாரங்களோடே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவை மீதான விசாரணையும் ஒரே நாளிலேயே இடம்பெறும். அவ்வாறு விசாரணை நடைபெறும் போது வழக்குப் பதிந்தவர்களுக்குள் தனியான பஞ்சாயத்து உருவாகி விடுமோ என்ற அச்சமும் இருப்பதை மறைக்க விரும்பவில்லை.

2017ம் ஆண்டு இனவாதி டான் பிரசாத் கைது செய்யப்பட்ட போது, எதிர்த்தரப்பாக வலிந்து சென்று இணைந்து கொண்ட ஒரு சட்டத்தரணி குறித்த நபருக்குப் பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இருக்கிறதா என கேட்கப்பட்ட போது 'இல்லை' என்று தெரிவித்திருந்தார். மறு புறத்தில் கைதாகியிருந்த அவரது கட்சிக்காரரான அப்துல் ராசிக்குக்கு அடுத்த வாரம் பிணை கேட்பதற்கு அவருக்கு அது உதவியாக அமைந்திருந்தது.

இவ்வாறு பல அனுபவங்கள் உள்ளதால் வழக்குப் பதிவு செய்து விட்டார்கள் என்று கொண்டாடுவதை விட அடுத்தடுத்து என்ன செய்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வு மேலோங்கி இருக்கிறது. இந்த சந்தடியில், கொரோனா தொற்றும் இல்லாமல் இயற்கை மரணம் எய்திய மூன்று முஸ்லிம் ஜனாஸாக்கள் அநியாயமாக எரிக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களின் விவகாரம் இன்னும் அரசியல் முக்கியத்துவம் பெறவில்லையென்பதால் அதை இதுவரை யாரும் கண்டு கொhள்ளவில்லை.

கொழும்பு 12, ஸ்ரீசங்கராஜ மாவத்தையைச் சேர்ந்த பிர்தௌஸ், கொழும்பு 15 பெர்குசன் வீதியை நிரந்தர வதிவிடமாகக் கொண்டிருந்த ரபாய்தீன் மற்றும், கொழும்பு 15 ஹேனமுல்ல பகுதியில் வாழ்ந்த பாத்திமா ரினோசா ஆகிய மூவரே இவ்வாறு அநியாயமாக எரிக்கப்பட்டுள்ளார்கள். பாத்திமா ரினோசாவுக்கு கொரோனா தொற்றிருப்பதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை பிழையென பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏனைய இருவரது உடலங்களும் எதுவித விளக்கமும் இன்றி அநீதியாகவே எரிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் பட்டியலிலும் இணைக்கப்படவில்லையென்ற அளவில் இவ்வாறான சமூக அநீதிகளைப் பற்றிக் கவலைப்பட யார் உளார்? என்ற கேள்வியும் எழும். அப்படித்தான் இருந்தாலும் அவர்களால் என்ன செய்ய முடியும்? என்ற இன்னொரு கேள்வியும் எழும். அப்பாவி உயிர்களோடு விளையாடும் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்களைத் தட்டிக் கேட்பது யார்? என்னதான் வழி?யென மேலும் பல கேள்விகள்.

கொரோனா சூழ்நிலையில் தற்போது சுடச்சுட எழும் இக்கேள்விகள் போன்று இன்னும் கேட்கப்பட்டேயாக வேண்டிய பல கேள்விகளும், கண்டுபிடிக்கப்பட வேண்டிய நியாயங்களும் இருந்து கொண்டேயிருக்கின்றன. சட்டத்தில் இல்லாத பல சலுகைகளைக் கூட உரிமைகளாக எண்ணி வாழும் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை இந்த உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பொது சக்திகள் இல்லை.

ஆங்காங்கு இடம்பெறும் கவனத்தையீர்க்கும் சில புதிய விடயங்கள் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் சற்று ஆர்வம் காணப்பட்டாலும் கூட அவற்றுக்குத் தேவையான அரசியல் பக்கபலத்தையும் நம்பிக்கையையும் தரக்கூடிய சமூக சக்திகள் இல்லை. 

இலங்கையை விடவும் ஊழல் மலிந்ததாகக் கருதப்படும் பாகிஸ்தானில் ளரழ அழவர என்றொரு விடயம் இருக்கிறது. அதாவது மனுதாரர் ஒருவர் இல்லாமல், நீதிமன்றமே நடவடிக்கையெடுக்கும் முறைமை. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் இதையெல்லாம் எதிர்பார்ப்பது அளவுக்கு அதிகம் என்றாலும் கூட, சமூகப் பிரச்சினைகளைப் பொதுத் தளத்தில் இருந்து சிந்தித்துச் செயலாற்றும் முற்போக்கு சக்திகள் காலத்தின் கட்டாயமாக உருவெடுத்துள்ளது.

19ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 1980 வரையிலும் கூட பெருமளவில் இவ்வாறான பொதுச் சிந்தனைப் போக்கு இருந்தது. அதனால் தான் அன்றைய தலைவர்கள் தமது சக்திக்குட்பட்டு செய்த சில விடயங்கள் மற்றவர் பார்வையில் சரி – பிழைகளுக்கு அப்பால் இன்றும் போற்றப்படுகின்றன.

ஐ.எல்.எம் அப்துல் அசீஸ் முதல் பதியுதீன் மஹ்மூத் வரை இதற்கான உதாரணங்களை அடுக்கிச் செல்லலாம், ஆனாலும் கூட 21ம் நூற்றாண்டில் இன்னும் தரித்து நின்று முன் நாள் கதைகளை மாத்திரமே பேசி மெச்சுகிறோம் என்ற உண்மை உணரப்படுமா? என்ற சந்தேகமே மேலோங்கி நிற்கிறது.


jTScYcS

-Irfan Iqbal
Chief editor, Sonakar.com

2 comments:

Unknown said...

ஒன்றுமே தேவையில்லை.அந்த வர்த்தமானி "எமன்மன்ட்டில்" பாவிக்கப்பட்டிருக்கும் ஒரு வசனம் "கட்டாயம் 45 நிமிடங்கள் 1000 வோல்ட்டுக்கு மேல் வெப்பத்தில் உடல் தகனம் செய்யப்படல் வேண்டும்" என்பதை எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் மட்டுமல்ல தற்போது உடுப்பு வாங்க கடைகளுக்கு செல்லும் தாய்மார் எத்தனை பேர் அறிந்திருப்பர்? அதன் தாக்கத்தை வாசிக்கும் போதே மனம் பதறுகிறது! பலருக்கு தெரியாது, அதன் வேதனை, வாசிக்கும் போதே நடுக்கம் கொள்ளச்செய்யும்.எந்த அடிப்படையில் சட்டத்தை என்பதை விட சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தார்கள் என்பது சூட்சுமமாகவே இருக்கிறது.கேஸ் ஸ்டடீஸ் உதாரணங்கள் உலகளாவிய ரீதியில் முஸ்லிம் உடல்களை அடக்கப்பட்டதை காட்டலாம்.WHO அடக்கம் செய்ய சர்வதேச ரீதியில் அறிவித்ததை சொல்லலாம்.அப்படி இருக்கையில் வேண்டுமென்றே எரிக்கப்பட்ட உடலங்கள் இனரீதியாக பலி வாங்கப்பட்டதை உறுதி செய்ததாக,கூறி வாதாட பல விடயங்கள் உண்டு.இலங்கையை பொறுத்தவரை சில நேரம் தீர்ப்பை நீதிபதியை விட, சில நேரம் ஆணைக்குழுக்கள் தீர்மானிக்கின்றன.இந்த ஆணைக்குழுக்களை நியமிப்பவர்கள் உடல் தகனம் கட்டாயம் என சட்டத்தை கொண்டு வந்தவர்களே.நீதிமன்றத்தின் சுயாதீனம் சில வேளைகளில் "பூச்சியம்" தான். அதற்கென உபாயங்களை வகுப்பதில் ஆட்சியில் உள்ளவர்கள் ரொம்ப கில்லாடி!.ஆக வழக்குகளை பதிந்தவர்கள் கௌரவ/ அந்தஸ்து போட்டிகளை மறந்து, இந்த விடயத்தில் வாதாட ஒற்றுமையாக முன்வர வேண்டும்.இந்த வழக்கின் தீர்ப்பு தான் , எதிர்காலத்தில் முஸ்லிம் ஜனாஸா விடயங்களுக்கு உரிய வழக்குகளுக்கு முன் உதாரணமாக நீதிபதிகள் அல்லது சட்டடத்தரணிகள் கையாளப்போகிறார்கள், என்பதையும் மறக்க கூடாது.ஆகவே சம்பந்தப்பட்ட அனைவரும் , முழு மூச்சாக நின்று வாதாட வல்ல அல்லாஹ் துணை புரிய வேண்டும் என்பதே, இலங்கை வாழ் முஸ்லிம்களின் அவா.இஇந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்திகதி கூட இன்னும் தீர்மானிக்கப்படாமல் இழுத்தடிப்பு வேறு.அதற்கிடையில் எத்தனை ஜனாஸாக்கள் தகனத்திற்கு போகுமோ இறைவன் அறிவான்.இருந்தாலும் வழக்கை வெல்வதற்கு அனைவரும் பஞ்சாயத்தை விட்டு விட்டு ஒன்றுபடல் வேண்டும் என்பதே முக்கியம் இங்கு.இன்னுமொரு ஜோக் என்னவெனில் , பல அரசியல் பிரமுகர்கள், சமூக சேவையாளர் என பெயரில் உள்வர்கள் , பாதிக்கப்பட்ட மையத்துக்குரிய வீடுகளுக்கு சென்றதாக அறிக்கை விடுவதும்.,இதனை சாட்டாக வைத்து வசூல் ராஜாக்களாகி, சமூக வலைத்தளங்களில் வொய்ஸ் மெஸெஜ் ,வீடியோ(குறித்த குடும்பங்களை) மூலம் உழைப்பதும் மிக வேதனையாக உள்ளது.

Thesaurus said...

Great writing. Actually it shows you are a great socialogist and anthropologist. It creates our intellectual capacity and it confirms that our leaders made us to believe all our concession as our rights. That is what tamil leaders they are adamant to get their rights rather than petty gains. They are not interested in development. You know Rauf Hakeem said in a vedioe clip after sumandiran confirm his availability as the first person to handle this problem and they are going to file case. Until such time kept quite. He is not eligible to be leader of muslim community since he is representing predominantly sinhales constituency he can he compromise both the community. He should leave leadership to eastern province. I am from down south.

Post a Comment