நேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும் தெரிவித்திருந்தேன். இன்று, அவரது உடல் தகனம் செய்யப்பட்டு விட்டதென்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.
கொரோனாவை மிஞ்சிய கவலைகள் உண்டு என்பதனால் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
10வது நோன்பையும் நிறைவு செய்த நிலையில், ஹேனமுல்ல பகுதியில் மூச்சிழந்து சாய்கிறார் 62 வயதான ரபாய்தீன். குடும்பம் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கிறது, அங்கு அவர் உயிரிழந்து விட்டார். ஆனால், பரிசோதனைகள் நடக்க முன்பதாகவே கொரோனா என முடிவு சொல்லப்படுகிறது. குடும்பத்தினர் மிரட்டப்படுகிறார்கள். அவர்களும் தம்மையும் லொக்டவுன் செய்து விடுவார்கள் என்று அச்சப்படுகிறார்கள்.
இந்த சந்தடியில் அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக் கை விடுகிறார்கள். ஆனால், விடயம் அங்கு முடிவுறவில்லை.
குறித்த உடலம் அதற்குரிய பாதுகாப்பான முறைமைகள் பிரகாரம் ப்ரீசரில் வைக்கப்படவில்லை. இது முதல் பிரச்சினை. இது குறித்து, ஜனாஸா சேவைகளில் ஈடுபடும் பலரோடு பேசிப் பார்த்ததில் ஏதாவது 'சம்திங்' (கவனிப்பு) கொடுத்தால் தான் ட்ரொலியில் இருந்து ப்ரீசருக்கு கொண்டு செல்கிறார்கள் என்று திருத்தமாக விளக்கமளிக்கப்பட்டது.
ஆக, சம்திங் கொடுக்க முடியாதவர்கள் சடலங்களை கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் வருகிறது. ஆனாலும், கொழும்பிலும் வெளி மாவட்டங்களிலும் கூட பல ஜனாசா சேவைகள் உண்டு, அவர்களின் உதவியை நாடலாம், துரதிஷ்டவசமாக இந்த விடயத்தில் நாடப்பட்டிருக்கவில்லை.
ரபாய்தீனின் விடயத்தை எப்படியும் அறிந்தே ஆக வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். முன்னாள் ஆளுனர் அசாத் சாலியின் உதவியோடு முகவரியைப் பெற்றுக் கொண்டேன். பின், அகில இலங்கை ஜனாசா சேவை அமைப்பின் ஒமர் கத்தாபிடம் அதை வழங்கி, அவர் ஊடாக அந்தப்பகுதியில் ஜனாசா வேலையில் உள்ள ஒருவரோடு தொடர்பு கொண்டு சில விபரங்களைப் பெற்றோம். ஆனாலும் திருப்தியில்லை. ஈற்றில், ரபாய்தீன் இறுதியாக வாழ்ந்த இடத்துக்குச் சென்று இன்று முழு விபரத்தையும் பெற்றுக் கொள்ள முடிந்தது.
படிப்பினை என்னவென்றால்:
‣ அவரது உடலம் பாதுகாக்கப்படாத நிலையில் கெட்டுப் போயிருந்ததாலேயே எரிக்கப்பட்டுள்ளது.
‣ ப்ரீசரில் வைப்பதற்குத் தேவைப்பட்ட சம்திங் இதற்குக் காரணமாகியுள்ளது.
‣ JMOவின் மிரட்டலும், வறுமை மற்றும் அச்சம் குடும்பத்தாரை தூரப்படுத்தியுள்ளது.
‣ ஈற்றில் இறந்தவர் கொரோனா லிஸ்ட்டில் சேர்க்கப்படவில்லை
மேலதிகமாக.... கொரோனா இல்லாத காலத்திலேயே 130.. 140 நாட்கள் மோச்சரியில் ஜனாஸாக்கள் கவனிப்பாரற்றுக் கிடந்த கதைகளையும் அறிந்த போது இன்னும் 'அதிர்ச்சியாக' இருந்தது.
எதை எதையோ பேசும் சமூகமே.... இனியாவது நம்மையும் நம் சமூகக் கட்டுமானத்தையும் மீள் பரிசீலனை செய்து, சுய விமர்சனம் செய்து, ஆவன செய்யத் துணிவாயாக!
Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
No comments:
Post a Comment