நிலைப்பாட்டை மாற்றுங்கள்: அனில் ஜாசிங்கவுக்கு ACJU கடிதம் - sonakar.com

Post Top Ad

Friday, 8 May 2020

நிலைப்பாட்டை மாற்றுங்கள்: அனில் ஜாசிங்கவுக்கு ACJU கடிதம்

https://www.photojoiner.net/image/JoskpAAa

கொவிட்-19 தொற்று காரணமாக மரணித்து தகனம் செய்யப்பட்ட ஒரு முஸ்லிமின் சாம்பலை புதைப்பதில் உள்ள தெளிவற்ற நிலை தொடர்பான விளக்கம் மற்றும் அவ்வாறு மரணித்த ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்து தங்களது தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு வேண்டி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, சுகாதார பணிப்பாளர் நாயகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.


அதன் பிரதியை இங்கு காணலாம்:

Dr. அனில் ஜயசிங்க
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களே,

கொவிட்-19 தொற்று காரணமாக மரணித்து தகனம் செய்யப்பட்ட ஒரு முஸ்லிமின் சாம்பலை புதைப்பதில் உள்ள தெளிவற்ற நிலை தொடர்பான விளக்கம் மற்றும் அவ்வாறு மரணித்த ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்து தங்களது தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளல்


இலங்கையில் கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த, இந்த சவாலான காலங்களில் அயராது உழைத்து, பணிபுரியும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும், குறிப்பாக தாங்களுக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உண்மையில், நீங்களும் உங்கள் குழுவும் தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் இப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டல்களின் படி மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுத்தப்படுகின்றதன் படி கொவிட்-19 காரணமாக இறந்த ஒரு முஸ்லிம்  அடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எமது மற்றும் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம். ஏனெனில், இது எங்கள் விசுவாசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அத்துடன் இறந்தவர்களுக்கு சமூகத்தால் செய்யப்படக் கூடிய ஒரு மார்க்கக் கடமையுமாகும்.

ஆரம்பத்தில் இருந்தே, நாங்கள் இந்த விஷயத்தை உரிய அதிகாரிகளுக்கு அழகிய முறையில் வலியுறுத்தி வரும்; அதேநேரம் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். தகவலுக்காக இது தொடர்பாக எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் சிலதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஆரம்பத்தில் நீதித்துறை மருத்துவ அதிகாரியினால் (JMO)  வெளியிடப்பட்ட SOP யில் கொவிட்-19 வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளுமாறு கோரி அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு மார்ச் மாதம் 24ந் திகதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. எங்களது கோரிக்கையையும் ஏனைய சிவில் அமைப்புக்கள் மற்றும் துறைசார்ந்தவர்களின் கோரிக்கைகளையும் கருத்திற் கொண்டு, தேவையான மாற்றங்களைச் செய்து, அடக்கம் செய்வதற்கான அனுமதியுடன் மார்ச் மாதம் 27ந் திகதி “கொவிட்-19 சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை கையாளுதல் விடயத்தில் மருத்துவ நடைமுறை வழிகாட்டுதல்” (Provisional Clinical Practice Guidelines on COVID-19 suspected and confirmed patients)  என்ற ஆவணம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது.

என்றாலும் துரதிர்ஷ்டவசமாக, மார்ச் மாதம் 31ந் திகதி மேலே குறிப்பிடப்பட்ட ‘வழிகாட்டல்கள்’ திடீரென திருத்தப்பட்டு எவ்வித விஞ்ஞான ரீதியான காரணங்களும் நியாயங்களும் முன்வைக்கப்படாமல் அடக்கம் செய்யப்படுவதற்கான அனுமதி நீக்கப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் 01ந் திகதி, இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக நமது கவலையையும் கண்டனத்தை வெளிப்படுத்தியும், அடக்கம் செய்வதற்கான அனுமதியளித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலுக்கு ஏற்ப அரசாங்கத்தின் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் ஒரு அறிக்கையை ஜம்இய்யா வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, அதிகாரிகளுடன் இது சம்பந்தமான விடயங்களைக் கலந்துரையாட மருத்துவர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. உரிய அதிகாரிகளுடனான இக்குழுவின் கலந்துரையாடல்களுக்குப் பின், இவ்விடயத்தில் ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வு நடாத்த நிபுணர்களின் குழுவொன்றை நியமிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. என்றாலும், அது நடைபெற்றதாக தெரியவில்லை. 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு பொறுப்பு வாய்ந்த அமைப்பு என்ற வகையில் எப்போதும் நாட்டு சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றே எமது சமூகத்தினருக்கு வழிகாட்டியுள்ளது. இந்தச் சூழலில், அதிகாரிகளால் நிர்ப்பந்தமாக மரணித்தவர்களின் உடல் தகனம் செய்யப்படும் நிலையில் மரணித்தவரின் சாம்பல் கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது புதைக்கப்பட வேண்டும் என்றே கூறப்பட்டது.

மரணித்தவரை தகனம் செய்யும் இந்த முடிவு நமது மதக் கொள்கைகளுக்கு எதிரானது என்பது மிகத் தெளிவான விடயமாகும். இந்த விஷயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சிகள் துறைசார்ந்தவர்களின் உதவியுடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டதென உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகத்திற்கிடமான சடலங்களை தகனம் செய்யப்பட வேண்டுமென எடுக்கப்பட்ட தீர்மானத்தை உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மற்றும் 180 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் முறைக்கு ஏற்ப, மறுபரிசீலனை செய்யுமாறு தங்களிடம் மீண்டுமொரு முறை வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும், அனைத்துவித கட்டாயமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் பொலிஸ், பொது சுகாதார அதிகாரி (PHI) மேற்பார்வையுடன் சடலங்களை புதைப்பதற்குரிய அனுமதியையும் வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

இது முஸ்லிம்களின் மத ரீதியான மற்றும் உணர்வு ரீதியான விடயமாகும். எனவே இவ்விடயத்தில் அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் உரிய தீர்வை பெற்றுத்;தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். மேலும், 08 அடி ஆழத்தில் கல்லறைத் தோண்டுவது போன்ற, தேவையான அனைத்து விடயங்களையும் முஸ்லிம் சமூகம் செய்யத் தயாராகவுள்ளது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். தேவைப்பட்டால் கல்லறையை சீமெந்து மூலம் கொன்கிறீட் போடுவது அல்லது வேறேதும் அதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை தேவைக்கேற்ப செய்வதற்கும் முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கின்றது.

இது தொடர்பாக நீங்கள் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டுமென அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.


முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment