கொரோனா என எரிக்க முற்பட்ட இன்னுமொரு ஜனாஸா 3 நாட்களின் பின் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 9 May 2020

கொரோனா என எரிக்க முற்பட்ட இன்னுமொரு ஜனாஸா 3 நாட்களின் பின் மீட்பு!



சிறு வயது முதல் சிறுநீரக பாதிப்பால் அவதியுற்றிருந்து கடந்த 05ம் திகதி கொழும்பு, சென்ட்ரல் ரோட் பகுதியில் உயிரிழந்த எம். பிர்தௌஸ் எனும் சகோதரரின் ஜனாஸா கையளிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டிருந்த விடயத்தை நேற்று சோனகர்.கொம் வெளியிட்டிருந்தது. அத்துடன் அரசின், சுகாதார அமைச்சின் பல்வேறு மட்டங்களுக்கும் இத்தகவல் சமூகப் பிரமுகர்களால் எத்தி வைக்கப்பட்டிருந்தது. https://www.sonakar.com/2020/05/blog-post_12.html



இந்நிலையில், சற்று முன்னர் குறித்த நபருக்கு கொரோனா எதுவுமில்லையென உறுதி செய்யப்பட்டு தற்போது ஜனாஸாவை அடக்குவதற்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர், வபாத்தாகியிருந்த போது, வேறு ஒருவருக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையைக் காட்டி உடலத்தை உடனடியாக எரிக்க வேண்டும் என வைத்திய அதிகாரி அடம் பிடித்திருந்தார். எனினும், இறந்தவருக்கு கொரோனா தொற்றிருந்தமையை உறுதி செய்யும் வகையில் சான்றிதழ் தந்தால் மாத்திரமே அதற்கு இணங்க முடியும் என குடும்பத்தார் மறுத்து வந்த நிலையில், காட்டப்பட்டது வேறு உடலம் எனவும் அறியப்பட்டிருந்தது.

அதன் பின், புதிதாக பரிசோதனைகளை ஆரம்பிப்பதாகக் கூறி, மூன்று தினங்கள் இழுபறியின் பின் இறந்தவருக்கு கொரோனா இல்லையென உறுதி செய்து உடலம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகில இலங்கை ஜனாஸா சங்கம் பொறுப்பேற்று மாளிகாவத்தையில் அடக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர்  உமர் கத்தாப் தெரிவித்தார். 


கொரோனா சான்றிதழ் இல்லாமல் உடலத்தை எரிக்க அனுமதிக்க வேண்டாம் என குடும்பத்தினருக்கு முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி உட்பட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆலோசனை வழங்கி ஆதரவளித்திருந்த நிலையில், குடும்பத்தினர் எரிப்பதை அனுமதிக்க முடியாது என உறுதியாக மறுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment