கடந்த திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில், சம்மாந்துறையில் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேக நபர் மறுநாள் கைதாகி இருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக முதலில் செவ்வாய்க்கிழமை(21) ஒரு சந்தேக நபர் கைதான நிலையில் துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபரின் வாக்குமூலத்திற்கமைய 4 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்திருந்தனர்.இந்த கைது நடவடிக்கையை நீதிமன்ற உத்தரவிற்கமைய சம்மாந்துறை குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் முன்னெடுத்த நிலையில் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் கைதான பிரதான சந்தேக நபருடன் நெருங்கி பழகிய அப்பகுதி இராணுவ கெப்டன் தர அதிகாரி ஒருவருக்கு தற்போது வடபகுதிக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவ் இராணுவ அதிகாரிக்கு பிரதான சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கொள்வனவு செய்து கொடுத்துள்ளதுடன் அவ்வப்போது பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார்.
மேற்படி சம்பவத்தில் கைதானவர்கள் அனைவரும் 26, 38 , 42, 40 ,மற்றும் 27 வயதினை உடையவர்களாவர்.இவ் ஐந்து சந்தேக நபர்களும் குறித்த துப்பாக்கியை மறைத்து வைக்க ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டு அடிப்படையிலும் துப்பாக்கியை தன்வசம் உரிமையாக வைத்திருந்து பாதுகாத்தமை குற்றச்சாட்டிற்காகவும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பாகவும் ஏதாவது பயங்கரவாத குழுவினருடன் தொடர்புள்ளமை தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதில் பிரதான சந்தேக நபர் செங்கல் வாடி மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து வெளியாகியுள்ளது.
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment