அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நடவடிக்கைகளை மட்டறுத்து அதிகார போதையில் முஸ்லிம் விவகார திணைக்களம் எல்லை மீறுவதாக விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் மேல் மாகாண ஆளுனரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.
இதுவரை எந்தவொரு முஸ்லிம் சமய விவகார பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்களும் செய்யாத விதத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வழிகாட்டல்களை மறுத்தும் மேலோங்கியும் தனது அதிகாரத்தை பறைசாற்றும் விதத்தில் சமூக விவகாரங்களில் தலையீடு செய்வதுடன் குழறுபடிகளையும் உருவாக்கி வருவதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
ரமழானுடைய காலத்தில் கஞ்சி காய்ச்சுவதற்கு பள்ளிவாசலுக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை, முஸ்லிம்கள் செறிந்து வாழும் மற்றும் ஊரடங்கு இல்லாத பகுதிகளில் பள்ளிவாசல்களுக்கு சொந்தமான தனியார் காணிகளில் கூட பாரம்பரியத்தைப் பேணி கஞ்சி காய்ச்சவும் அதனை ஊரில் விநியோகிக்கவும் கூட முடியும். ஆனாலும், அண்மைக்காலமாக மஹிந்த ராஜபக்சவின் கீழுள்ள ஒரு அமைச்சின் பதவியில் இருந்து கொண்டு சமூகத்துக்கு அடிக்கடி பணிப்புரைகள் விடுப்பதன் ஊடாக அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் தவறான முன்மாதரியும் முன்னெடுக்கப்படுவதாகவும் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அசாத் சாலி தெரிவிக்கிறார்.
முஸ்லிம் சமூக விடயங்களை பகிரங்கமாக அறிக்கைகள் விடுவதன் ஊடாகக் கையாளும் புதிய கலாச்சாரம், எதிர்காலத்தில் மாற்று மதத்தவர் பணிப்பாளர், செயலாளர் பதவியில் பலவந்தமாக அமர்த்தப்படுமிடத்து ஜம்மியத்துல் உலமாவை உதாசீனப்படுத்தி நேரடி கட்டளைகளை பிறப்பிக்கும் வழக்கத்தை உருவாக்கும் என அவர் தனது செய்திக் குறிப்பில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Shahul (NUA)
- Shahul (NUA)
No comments:
Post a Comment