எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாட்டின் நாலா திசைகளிலும் வாழக்கூடிய தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய ஒரு முக்கிய தேர்தல் என்பதை உணர்ந்து, நிதானமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும் என வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாணசபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், பாராளுமன்ற தேர்தல் பற்றி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுநர்;
நாட்டில் நாலா திசைகளிலும் வாழக்கூடிய தமிழ் முஸ்லிம் மக்கள் பல அரசியல் நெருக்கடிகளுக்குள் சிக்குண்டு வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். அரசியல் ரீதியாக நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கும் இவ்விரு சமூகத்தையும் விடுவிக்க அல்லது வெளியேற்ற ஒரு சில அரசியல் தலைமைத்துவங்கள் விரும்புவதில்லை. அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் அந்த அரசியல் தலைவர்களுக்கு ஒரு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடும். பிச்சைக்காரனின் காலில் காயம் இருக்கும் வரை அதைக் காட்டிக் கொண்டு அவன் பிச்சை எடுத்துக் கொண்டே இருப்பான். எப்போது காயம் இல்லாமல் போய்விடுமோ அன்றே அவன் பிச்சைக்கார தொழிலுக்கு முழுக்கு போட வேண்டிய நிலை ஏற்படும், இதுவே இன்றைய எமது சமூக அரசியல் தலைமைத்துவங்களின் இந்நிலை. இதை உணர்ந்து தமிழ் முஸ்லிம் மக்கள் சிந்தனையோடு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் செய்யப்பட வேண்டுமென நான் அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும், சமயத்தின் பெயராலும் எப்போது அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டது அன்றே எமது சமூகத்திற்கு கேடு ஏற்பட்டு விட்டது என்றே கூறவேண்டும். சிலர் தங்களது அரசியல் பிழைப்புக்காக இனத்தையும் மதத்தையும் அரசியலாக மாற்றிச் செயல்படுகின்றனர். இதனால் நாட்டில் காலத்துக்குக் காலம் இனவாத மதவாத பிரச்சினைகள் ஏற்படும் போது, அரசியல் புரியும் இவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டாலும், பாதிக்கப்படுகின்ற மக்களை இவர்களால் பாதுகாக்க முடியாமல் போனதைக் கடந்தகால அரசியல் வரலாறு எமக்கு நல்ல சான்றுகளைப் பாடங்களையும் கற்றுத் தந்துள்ளது.
எமது முன்னைய அரசியல் தலைவர்களான டி.பீ. ஜாயா, டாக்டர் எம்.சி.எம். கலீல், சேர். ராசிக் பரீட், கலாநிதி காயிதே மில்லத், பதியுதீன் மஹமூத், அஷ்ஷேக் அலவி மௌலானா, எம்.எச். முஹம்மட், ஏ.சீ.எஸ். ஹமீட், பைசல் ஜுனைட் (காலி), நைனா மரிக்கார், அப்துல் மஜீட், அபூஸாலி போன்றவர்கள் இனவாத, மதவாத அரசியல் புரியாது, பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களுடன் இணைந்து, ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தமது செய்ய அரசியல் கட்சிகளான இனங்கண்டு அரசியல் புரிந்து இந்நாட்டு முஸ்லிம்களைப் பாதுகாத்து வந்தது போல, அன்றைய எமது தமிழ் அரசியல் தலைமைகளும் மேற்கூறப்பட்ட இரு தேசிய கட்சிகளுடனும் இணைந்து அரசியல் புரிந்து தமிழ் மக்களைப் பாதுகாத்து வந்ததும் அரசியல் வரலாறு கூறும் சான்றிதழ்கள் ஆகும்.எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் எம் இரு சமூகத்திற்கும் முக்கிய ஒரு தேர்தல் என்பதைக் கவனத்தில் கொள்வது காலத்தின் தேவையாகும்.
இன்று ஐக்கிய தேசிய கட்சி, ரணில் சஜித் என இரு கூறுகளாகப் பிரிந்து செயற்படும் போது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நாட்டின் அனைத்து மக்களையும் அரவணைத்து அரசியல் புரிய ஆசைப்படும் போது, அவர்களின் மீது நம்பிக்கை வைத்துச் செயற்படவேண்டியதும் காலத்தின் தேவையாகும்.
இன்று நாட்டின் யதார்த்த அரசியலைப் புரிந்துள்ள தமிழ் முஸ்லிம் கல்விமான்கள், புத்திஜீவிகள் இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் செயற்படும் அரசியல் காட்சிகளையும், அதன் தலைமைத்துவங்களையும் ஓரம் தள்ளிவிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசியல் கரங்களைப் பலப்படுத்திட அணிஅணியாக அவருடன் இனைந்து வரும் வேளையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் பெரும்பான்மையான வெற்றியில் தமிழ் முஸ்லிம் மக்களும் பங்காளிகளாக ஆகவேண்டும் எனவும் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸ்லிம் மேலும் தெரிவித்தார்.
- எம்.எஸ்.எம். மஸாஹிம்
No comments:
Post a Comment