தேர்தலுக்கு முன்னர் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை சாத்தியமா? - sonakar.com

Post Top Ad

Saturday, 18 January 2020

தேர்தலுக்கு முன்னர் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை சாத்தியமா?


சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம் உருவாக்குவதற்கு, சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மாஆப் பள்ளிவாயல் எடுத்த சிறந்த முடிவிலிருந்தும், அதன் அணுகுமுறைமையிலிருந்தும் தூரமாகிச் செல்லும் நிலைக்கு அவர்களே வழி ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனரா? என்கின்ற ஐயத்தை அவர்கள் மீது எழுப்பும் நிலைக்கு அவர்களின் செயற்பாடுகள் நகர்வைப் பெற்றிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.



இந்தச் சந்தேகத்தின் பின்னாலிருக்கும் நியாயங்களை விளங்கிக் கொள்வதற்கு இதனுடன் தொடர்புபட்ட இன்னொரு நிகழ்வை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இவ்விடத்தில் இருக்கிறது. அந்த வகையில் எமது முழுக்கவனக்குவிப்பையும் அதன்மீது நிறுத்துவோம். பின்னர் அதிலிருந்து நிறுத்துப் பார்த்து நிதானித்து செயல்படுவதற்கு எம்மை தயார்படுத்த வேண்டிய கடப்பாட்டை இவ்வூர் மக்கள்மீது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மாஆப் பள்ளிவாசல் தலைவர் திடுதிடுப்பாக அண்மையில் வெளியிட்ட ஒரு கருத்து சர்ச்சையை இழுத்து வந்திருக்கிறது.

கடந்த 2020, ஜனவரி 05ஆந் திகதி மேலதிக செயலாளர் சலீம் அவர்களின் இல்லத்தில் அமைந்துள்ள பிரத்தியேக கடை அறையில் "சமூக மாற்றத்திற்கும் அபிவிருத்திக்குமான மையம்" என்ற மகுடத்தில், ஓர் சமூக சேவையை நோக்கமாகக்கொண்ட அமைப்பின் ஆரம்ப நிகழ்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மாஆப் பள்ளிவாயலின் தலைவர் வை.எம்.ஹனிபா கலந்துகொண்டு உரையாற்றும்போது, "சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை அடைந்து கொள்ளும் வகையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சலீம் அவர்களை களமிறக்குவதற்கு பள்ளிவாயல் முடிவு செய்திருக்கிறது" என்கின்ற கருத்துப்பட உரைத்தார். 

அப்போதே இந்த உரைக்கான எதிர்க்கருத்தாடல் வந்திருந்த சபையோருக்கிடையில் முனுமுனுப்பாக வெளிப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுக்கு பிந்திய நாட்களில் ஒரு குழுவினர் பள்ளித் தலைவரைச் சந்தித்து தமது ஆட்சேபனைகளை தெரிவித்ததாகவும் சில கதையாடல்கள் உலா வந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளித் தலைவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டோர் என கூறப்படுபவர்களின் பின்னணியில் கட்சி அரசியல் அபிமானிகள், அரசியல் பிரதிநிதித்துவ ஈர்ப்பாளர்கள் மற்றும் பள்ளித் தலைவர் ஹனிபாவின் தற்துணிவும், கலந்துரையாடலும் இன்றிய அறிவிப்பு இதுவென கருதுவோரும் அடங்கி இருக்கின்றனர். ஆயினும் பள்ளித் தலைவருடன் எதிர் உரையாடலுக்கு முற்பட்டவர்களில் பல்வேறு அரசியல் கருத்துடையோர்களாகக் காணப்பட்டாலும் அவர்களின் கேள்வியிலும் ஆதங்கத்திலும் தவறு இருப்பதாக நாம் கருதுவதற்கு இடமில்லை என்பதே உண்மையாகும்.

பள்ளிவாயல் தலைவர் ஹனிபா அவர்கள் மேலதிகச் செயலாளர் சலீமை வேட்பாளர் என அறிவித்த இடமும் விதமும் மிகத் தவறான சூழலில் என்பது கவனத்திற்கு உரியது. அதேநேரம் இவ்வறிவிப்பின் ஊடாக வேறு இரு வினாக்கள் எழுப்பி வைக்கப்படுவதற்கும் வசதியை ஏற்படுத்திவிடுகின்ற நிலையையும் உருவாக்கி இருக்கிறது.

-01
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மாஆப் பள்ளிவாசல், சுதந்திர இலங்கையின் தேர்தல் வரலாற்றில் 2018க்கு முந்திய காலத்தில் சந்தித்த எந்தத் தேர்தலிலும் எந்தக் கட்சி மீதோ, அல்லது அரசியல் பிரதிநிதிகள் குறித்தோ குறிப்பிட்டு முன்வைத்து தமது ஆதரவையோ அல்லது ஊர் மக்களை ஆதரித்துக் கொள்ளுமாறான எந்தவிதமான அறிவிப்புக்களையும் செய்ததில்லை என்பதே அதன் வரலாறாகும். இதற்கு மாறாக ஒரு சுயேட்சைக் குழுவை கடந்த 2018 இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்கி, அதன் வெற்றியின் பின்புலத்திலும் தமது பங்களிப்பை முதல் முறையாக தொடங்கிவைத்த ஆரம்ப வரலாற்றையும் தமது பதிவாக்கியது.

இந்நிலைக்கு பள்ளிவாயல் வந்தமை என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பின் பேரிலோ, அரசியல் செயற்பாட்டாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்கின்ற தனிப்பட்ட முடிவின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாக கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஈடுபட்ட நிகழ்வு அமைந்த ஒன்றல்ல என்பது மிகவும் வெளிப்படையானது.

சாய்ந்தமருது மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற தமது ஊருக்கான உள்ளுராட்சி மன்ற உருவாக்கம் குறித்து அஹிம்சை வழியில் போராட்டங்களை நீண்ட காலமாக தொடுத்திருந்தனர். ஆயினும் வெற்றிப்படிகளை தொட்டுக்கொள்வதில் பல சறுக்கல்களைச் சந்தித்தே உள்ளுராட்சி மன்ற கோரிக்கை இருந்து வந்த நிலையில்தான் மக்கள் திரட்சியாக வெகுண்டெழுந்து அதன் தாக்கத்தின் விளைவாகவே சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாயல் தலைமையில் செயற்படும் சூழல் ஏற்பட்டது. 

இது இவ்வூர் மக்களின் பெரும்பாலானோர்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாக இருந்ததினால்தான் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், நமது உள்ளுராட்சி மன்றத்தை தாபிப்பது என்ற கோஷத்தை முன்னிறுத்தி களமிறங்கிய சுயேட்சைக் குழுவின் கதை ஆரம்பமும் அதன் வெற்றில் சூழலும் நமது பள்ளிவாசலின் தேர்தல் ஈடுபாடும் துவங்கி வைக்கப்படுகின்றது. அவ்வாறாயின் இது பள்ளித் தலைவரின் தற்துணிவின்பேரில் உருவானதல்ல. மக்கள் கொடுத்த விருப்பாணையின் அடிப்படையில் நடைபெற்றது.

இதனை வேறொரு வார்த்தையில் கூறுவது என்றால், மக்களிடம் கேட்டுத்தான் பள்ளித் தலைமை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தோடம்பழச் சின்னத்தில் களமிறங்கிய சுயேட்சை குழுவினர் தேர்தலில் ஈடுபட்டதாகும். இதனால்தான் அத்தேர்தலில் களமிறக்கப்பட்ட பள்ளிவாசலின் அனுசரணையுடனான சுயேட்சை குழுவின் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட அதிருப்திகளைக் கூட கவனத்தில் எடுக்காது, மக்கள் பள்ளிக்கு எமது வாக்கு என தீர்மானித்தும் நமது உள்ளுராட்சி மன்றத் தேவையை பிசகின்றி மிகவும் குறிப்பாக வலுப்பெற்ற அடையாளத்துடன் அடையாளப்படுத்துவதற்கு மிகப் பொருத்தமான தேர்தல் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்தான் என்கின்ற உறுதியான முடிவின் பிரகாரம் பெரும்பாலான நமது மக்கள் வாக்களித்து அடையாளப்படுத்தினர் என்பதே வரலாறு.

அன்றைய (2018) காலப் பகுதியில் இருந்த முஸ்லிம் தனிக் கட்சிகள் என்ற வகையில் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ், மற்றும் றிஷாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் உட்பட எமது சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டும், தருவதாக வாக்களித்தும் உள்ளுராட்சி மன்றத்தைத் தரவில்லை. இதனால் இக்கட்சிகளை கூட்டுமொத்தமாக நமது மக்கள் நிராகரித்தே, சுயேட்சை குழு மீதும், பள்ளிவாசல் தலைமை மீதும் பற்றுக்கொண்டவர்களாக நமது மக்கள் மாறிய நிகழ்வும் நடைபெற்றது என்பது நாமறியாததல்ல.

இங்கு நமது பள்ளிவாயல் தலைமைத்துவமும் அதனோடு இணைந்து நமது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை முன்னெடுக்கும் அண்மைய செயற்பாட்டாளர்களும் உணர்ந்து கொண்ட பக்கமாக இருந்தும் அவர்கள் உணர வேண்டிய ஒரு பக்கம் இதில் இருக்கிறது. அதுதான் கடந்த 209.11.16இல் நடைபெற்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலின்போது நமது பள்ளிவாயல் எடுத்த பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் முடிவிற்கு கிடைத்த பெறுபேறு பற்றியதாகும். நமது சாய்ந்தமருது மக்கள் 4000 தொடக்கம் 4500 க்குட்பட்ட அளவில்தான் மொட்டுச் சின்னத்தை ஆதரித்து இருந்தனர் எனக் கொள்ள முடிகிறது. எப்படிப் பார்த்தாலும் கடந்த 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அளித்த சுமார் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்கு வங்கிச் சரிவைப் பெற்றிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலை ஏற்பட்டதற்கு காரணமாக அமைந்தவர்கள் கூறிக்கொண்ட கூற்றுக்கள் (1) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முடிவு எடுப்பதற்கு முன்னர் மக்களாகிய எங்களுடன் பள்ளிவாயலும் அதனோடு இணைந்து உள்ளுராட்சி மன்றத்தை பெறுவதற்கான அண்மைய செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடாமல் எடுத்த தீர்மானம். (2) ஜனாதிபதித் தேர்தல் உள்ளுராட்சி மன்றத்தைத் தீர்மானிப்பதில் பங்காற்ற முடியாது. (3) உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை வைத்து சிலர் தமது தனிப்பட்ட அரசியல் அடைவை குறிவைத்து செயற்படும் கபடத்தனமான முடிவேயாகும் என்கின்ற மூன்று கருத்தை முன்வைத்திருந்தனர்.

இந்த மூன்று குற்றச்சாட்டுக்களும் மிகச் சரியானது என்ற கருத்து நிலைக்கு மாறானவர்களும். பள்ளிவாயலின் ஜனாதிபதித் தேர்தலின்போது எடுத்த தீர்மானம் அறிவு பூர்வமானது என்று நம்பிய நான் உட்பட்ட அணியினரே கடந்த எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தவர்களாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பள்ளிவாயலின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தோர் தொகையை கடந்த 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் சாய்ந்தமருது உள்ளுராட்சி கோரிக்கையை ஆதரித்தவர்களில் சுமார் 9000 வாக்களார்கள் எதிர்த்து வாக்களித்திருப்பது, உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை கைவிட்டு விட்டனர் என்ற அடையாளத்தின் பிரதிபலிப்பில்லை. 

என்றாலும் அவர்கள் விரும்பும் கோணமான எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி நடந்து கொள்வது என்று மக்களை கூட்டி கலந்துரையாடவில்லை என்கின்ற அதிருப்தி மனோவியல்பை அப்படியே வைத்துவிட்டு, எதிர்வரும் 2020இல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கலந்துரையாடலை மேற்கொள்ளாது பள்ளித் தலைமை தற்துணிவு அடிப்படையில் வேட்பாளரை அறிவித்து இருப்பது பயன்கூடிய நிலைக்கு உதவுமா? என்கின்ற கேள்வியை நம் முன் அச்சத்துடன் முன்னிறுத்துகின்றது.

பொதுவாக ஜனாதிபதித் தேர்தல் என்பது பேரம் பேசுவதற்கு வாய்ப்பளிக்கக் கூடியது. அந்த வகையில் சாய்ந்தமருது மக்களின் உயிரோட்டமான எதிர்பார்ப்பாக அமைந்திருக்கும் தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை வெல்லுவதற்கு பொதுஜன பெரமுன கட்சி தவிர்ந்த வேறு வழியில்லாத நிலை இருந்ததுதான் உண்மையாகும். ஏனெனில் அந்தத் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்களுள் கோட்டபாயதான் வெல்லுவார் என்ற அதிக சாத்தியப்பாடு உள்ளவராக இருந்தார். இதற்கு அப்பால் நமக்கு ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் நமது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கைக்கு பொருத்தமற்றவராகவும் காணப்பட்டார். 

அதற்கு இரண்டு காரணங்கள் மிக வெளிப்படையாக இருந்தன. (1) நமது மக்களின் கோரிக்கையை நேரடியாக தரும் சூழல் இருந்தும் தராது விட்ட கட்சித் தலைவர்களான றஊப் ஹக்கீம், றிசார்ட் பதியுத்தீன், மற்றும் ரணில் என்போர் சஜித்பக்கம் நின்றமை. (2) நமது பள்ளிவாசல் உள்ளுராட்சி மன்ற கோரிக்கை தொடர்பில் கலந்துரையாட சஜித்திடம் நேரம் கேட்டெழுதிய கடிதத்திற்கு ஹக்கீம் ஊடாக வரும்படி பதிலளித்து இருந்தமையாகும். ஆகவே சஜித் அணி நமது கோரிக்கைக்கு சாதகமானவராக இருக்கவில்லை இந்நிலையில் கோட்டாபய தவிர வேறு வழியுண்டோ? என்று சரியாகச் சிந்தித்து இருப்பின் நமது ஊர்மக்களில் உள்ளுராட்சி மன்றத்தை விரும்பியோர்கள் மொட்டுக்கு மாறாக வாக்களித்திருக்கமாட்டார்கள்.

மஹிந்த ஆட்சியாளராக இருந்த சந்தர்ப்பத்தில் அவரிடம் நமது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை முன்வைக்கும் முயற்சியில் நமது பள்ளிவாசல் தலைமையில் முன்னெடுப்புக்கள் நகர்த்தப்படாத நிலைதான் இருந்தது. அது மட்டுமன்றி மஹிந்த – கோட்டாபய அணியினர் இணைந்து செயற்படும் ஒரு காலகட்டத்தில்தான் நமது பள்ளிவாயல் தலைமையில் நமது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை கையில் எடுத்த காலமாகவிருந்ததுடன், இக்கோரிக்கை தொடர்பில் கலந்துரையாட நேரஒதுக்கீடு கேட்டு பள்ளிவாயல் கடிதம் அனுப்பியதற்கு கதவுகள் திறக்கப்பட்டது. அதனாலும் கோட்டாபய அணியிடம் செல்வதுதான் சிறந்த முடிவாக பள்ளிவாசலுக்கு இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அத்துடன் கோட்டாபய பற்றிய பய உணர்வு நமது ஊர் பெண்களிடம் பயங்கரமானவர் என்ற பதிவு இருந்தது. இவை உட்பட பள்ளிவாயல் தீர்மானத்தின் நியாயங்களை ஊர்மக்களிடம் சொல்வதற்கு போதிய காலம் இல்லாததும், அதிக கருத்தரங்குகள், மற்றும் வீடு வீடாகச் சென்று பிரசாரங்கள் மேற்கொள்ளுதல், மற்றும் பகிரங்க மேடைப் பிரசாரங்களை பள்ளிவாயல் தலைமையும் அவர்களுடன் இணைந்து செயற்படும் செயற்பாட்டாளர்களுக்கும் செய்யமுடியாத நிலையில் இவர்கள் பின்தங்கியதும் மொட்டுக்கான ஆதரவை அதிகரிக்க முடியாமல் போனதற்கு காரணங்கள் என்றே மதிப்பிட முடிகிறது.

இவ்வாறான நிலையில், இவை பற்றி நமது மக்களிடம் சரியாக விளக்கங்கள் சென்றடையாத நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பை நமது பள்ளிவாசல் தலைமைத்துவம் அண்மையில் திடுதிடுப்பென அறிவித்திருப்பது இன்னும் நிலமையை சிக்கலாக்கி வைக்குமேயன்றி, தெளிவடையச் செய்யாது என்பதையும் நாம் சிந்தித்தாக வேண்டும்.

-02
அதேநேரம் பள்ளித் தலைவரின் எதிர்வரும் பொதுத் தேர்தல் வேட்பாளராக மேலதிக செயலாளர் சலீம் மொட்டு வேட்பாளர் என அறிவித்திருப்பது எழுப்பும் இரண்டாவது கேள்வியும் இங்கு முக்கியமானது.

மொட்டு வேட்பாளர் என இப்போதே தலைவர் அறிவிப்பதிலிருந்து எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற உருவாக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளிவராது என்பதை உறுதி செய்வதாகவே இதனை நாம் பார்க்கவேண்டி ஏற்படுகிறது. 

ஏனெனில், நமது பள்ளிவாயல் தலைமையிலான போராட்டம் என்பது நமது ஊருக்கான உள்ளுராட்சி சபையை பெற்றுக் கொள்வதேயன்றி, ஊருக்கு எம்.பி, மாகாண சபை உறுப்பினர் என்ற அரசியல் முஸ்தீபுகளுக்கு செயற்படும் அதிகாரத்தை மக்கள் பள்ளிவாசலுக்கு வழங்கவும் இல்லை. இதுகாலவரை அதன் வரலாறும் தனிப்பட்ட ஒருவரின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கோ, அல்லது கட்சி ஒன்றின் வெற்றிக்கு பாடுபடுதல் என்ற குறிக்கோளில் செயற்பட்ட வரலாற்றுபதிவை நமது பள்ளிவாசல் கொண்டில்லை என்பது அழுத்தி குறிப்பிட வேண்டிய பக்கமாகும்.

நமது பள்ளிவாயல் தலைமையின்கீழ் இணைந்து செயற்படும் குழுமத்தின் நோக்கம் சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளுராட்சி மன்றத்தை உருவாக்கிக் கொள்வதாகும். இந்த இலக்குக்கு வலுச்சேர்க்கும் விடயத்திற்கு மட்டுமே இந்த குழுமத்தினர் செயற்பட வேண்டுமேயன்றி, தனிப்பட்ட கட்சி, அரசியல் பிரதிநிதித்துவம் என்ற வகையில் எந்த முயற்சிக்கும் எமது பள்ளிவாயல் தலைமை உட்பட்ட சமூகம் முன் வரக்கூடாது. அவ்வாறு துணிவது தனியான உள்ளுராட்சி சபை பெறும் நோக்கை சிதைவடையச் செய்துவிடும் என்கின்ற அவதானம் மிக முக்கியமாகும்.

கடந்த 2019.11.16இல் நடைபெற்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் நமது ஊர்மக்கள், உள்ளுராட்சி தேர்தலில் தோடம்பழச் சின்னத்தில் போட்டியிட்ட சுயேற்சை குழுவை ஆதரித்த அளவுக்கு மொட்டை ஆதரிக்கவில்லை. இதனால் சிலவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம் உருவாக்குவது தொடர்பிலான வர்த்தமானி வெளிவராது, பொதுத்தேர்தலின் பின்னர்வரை இவ்விடயம் கிடப்பிற்கு செல்லும் நிலை தோன்றலாம். 

எப்படிப் பார்த்தாலும் அதாவது பொதுத் தேர்தலுக்கு முன்னர், பின்னர் என்ற நிலை வந்தாலும் அதனை ஏற்றாக வேண்டிய சூழலில்தான் நாமிருக்கின்றோம். இதில் பொதுத்தேர்தலின் பின்னர் என்பதை ஏற்றுக் கொள்ளும் நிலை நமக்கு சபையை பெற்றுக்கொள்வதில் இடறல்களை ஏற்படுத்தும் நிலை இருக்கிறது. இதிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி இருக்கிறது என்று யோசித்தாக வேண்டும். அதற்கு நான் காணக்கூடிய பொறிமுறையை இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன்.

வெறுமனே எதிர்காலத்தில் உள்ளுராட்சி சபையைத் தருவோம் என்ற கருத்தை நம்பி நமது ஊர்மக்கள் வாக்களிப்பதில் ஒரு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆதலால் பொதுத்தேர்தலுக்கு முன்னர் சாய்ந்தமருதுக்கான சபை அறிவிப்பு செய்யும் வர்த்தமானியை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலத்திலிருந்து செயற்படும் வண்ணம் என்ற அடிப்படையில் வெளியிடுவது இரு தரப்புக்கும் நம்பிக்கையான அணுகுமுறைமையாக அமையும். ஏனெனில், நமது மக்கள் மொட்டு அணியை ஆதரித்துக் கொள்ளவில்லையானால், வெளியிட்டவர்த்தமானியை இரத்துச் செய்யும் பிடிமானம் ஜனாதிபதிக்குரிய அதிகாரமாக இருக்கும் என்பதினால் மொட்டு அணி, பள்ளிவாசல் அணி ஆகிய இரு தரப்பிற்கும் சுமுகமான நிலையைத் தரும்.

எனது கருத்துக்கு மாற்றமான வழிமுறையில் இதனை அடைந்து கொள்வதற்கு வழிகள் இருந்தாலும் அம்முறைமையின் ஊடாகவேனும் பொதுத்தேர்லுக்கு முன்னர் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற உருவாக்கம் குறித்த  வர்த்தமானி அறிவிப்பு வெளிவர வேண்டும். அதுதான் நமக்கும் பாதுகாப்பானது, இச்சபையைத் தரும் மொட்டு அணியினருக்கு நமது ஊர் மக்கள் வாக்களிக்கும் நன்றிக்கடனை நிறைவேற்றும் பொறுப்புக்கும் வசதியாக அமையும்.

பள்ளிவாசல் குழுமத்தின் சார்பிலிருந்து மொட்டு வேட்பாளராக களமிறக்கப்படும் அபேட்சகர் வெல்ல வேண்டும் என்ற அவஸ்தையும் சுமையையும் இல்லாமால் செய்துவிடும். ஆதலால் பள்ளிவாசல் குழுமத்தின் சார்பான வேட்பாளருக்கு அளிக்கப்படும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை நமது ஊர் மக்கள் மொட்டுக்கு அளித்த வாக்குகள் எவ்வளவு என்பது. தெளிவாகிவிடும். இதனை அடையாளப்படுத்தும் ஒருவராகவே நமது பள்ளிவாயல் குழுமத்தினரின் வேட்பாளர் இருந்தால் போதுமானது.

எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் நமது உள்ளுராட்சி மன்ற உருவாக்கம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் செய்யப்படுவதற்கான அழுத்தங்களை நமது பள்ளிவாசல் தலைவர் மற்றும் தோடம்பழ உறுப்பினர் உள்ளிட்டோர் சென்று பொதுஜன பெரமுனவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் அடிப்படையாளர்கள் என்ற வகையிலும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு பொதுஜன பெரமுனவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் நமது உங்ளுராட்சி சபையும் இருப்பதினாலும் இவர்களுடனும் நமது பள்ளிவாயல் குழுமத்தினர் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

நமது ஊருக்கான சபை விடயத்தில் முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வை நமது பள்ளிவாசல் குழுமத்தினர் நம்ப வேண்டியதில்லை. இதற்கு அண்மையில் 2020.01.11இல் அரசியல் விமர்சகர் எம்.எச் எம் இப்றாஹீம் எழுதிய நான் எய்த அம்புகள் நூலின் வெளியீட்டு உரை தக்க சான்றாகும். இது தொடர்பான கலந்துரையாடலை பள்ளிவாயல் குழுமத்தினர் மக்களுடன் பகிரங்க கலந்துரையாடல் மூலமும் தீர்மானித்துக் கொள்வது விட்ட தவறை திருத்துவதற்கு வழிகோலும்.

-எம்.எம்.எம்.நூறுல்ஹக்

No comments:

Post a Comment