ஆதலால்... ரதன தேரர்கள் பேசுகிறார்கள்! - sonakar.com

Post Top Ad

Sunday, 12 January 2020

ஆதலால்... ரதன தேரர்கள் பேசுகிறார்கள்!


2020ன் முதல் காலிறுதியில் தேர்தல் ஒன்று எதிர்பார்க்கப்படுவதனால் அதன் ஆரம்பமும் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமின்றி தீனி போட்டுக் கொண்டிருக்கிறது. எப்போது முட்டிக் கொள்ளப் போகிறார்கள் என உலகே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க - ஈரான் யுத்தமும் வாசற்கதவைத் தொட்டுச் சென்றுள்ளதால் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு 2020ன் ஆரம்பம் மிகவும் பரபரப்பாகவே அமைந்து வருகிறது.



டொனால்ட் ட்ரம்பின் தேவைக்காக ஈரானின் பலம் மிக்க ஒரு இராணுவ தளபதி காவு கொள்ளப்படுகிறார். ஆளில்லா விமானத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கெங்கிலும் ஒரு அச்ச உணர்வை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, ஈரான் - ஈராக் பிராந்தியத்திள் முக்கிய அரசியல் தலைமைகள் சற்றே ஆடிப்போயுள்ளன. ஆதலால், பிராந்தியத்தில் பதற்றமும் கடுமையான கோபமும் நிலவியது.

ஆத்திரப்படுவதோடு நின்று விடாத ஈராக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர அவசரமாக அமெரிக்கா உட்பட வெளிநாட்டுத் துருப்புகள் தம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஏகமானதாக, ஆனால் சட்டப் பிணைப்பில்லாத (non-binding) பெயரளவிலான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தனர். இதன் வரவு-செலவு தற்போதைய நிலைமை அடங்கிய பின்னரே கணிக்கப்படும் என்பதால் தற்சமயம் மேலெழுந்த உணர்வலையின் சாதக-பாதகங்களை அறிவதற்கு கால தாமதமாகும்.

எதிரே எழுந்து நின்று பேச முடியாவிட்டாலும் இப்படியாவது ஒரு எதிர்ப்பை ஈராக்கியர்கள் வெளியிட்டார்கள் என்ற நிலைமை ஒரு புறம் இருக்க, திடீரென கடந்த புதன் அதிகாலை ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க துருப்பினரின் இரு முகாம்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவி விட்டது. விடயம் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டாலும் அன்று மாலை ஈரான் தனது எதிர்ப்பைக் காட்டி விட்டு அடங்கி விட்டது எனும் நற்செய்தியை டொனால்ட் ட்ரம்ப் உலகுக்கு எடுத்துச் சொன்னார்.

அத்துடன் ஏவுகணைகளும் இலக்குகளை அண்மித்த வெற்று நிலங்களில் வீழ்ந்துள்ள படங்களும் வெளியாகின. தமது தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லையென ட்ரம்ப் தெரிவிக்க, யுத்தப் பசி தீராத இந்திய ஊடகங்கள் ஈரானுக்கும் - அமெரிக்காவுக்கும் உள்ள இராணுவ பலத்தை அளவிடுவதிலும், வாத விவாதங்களை நடாத்துவதிலும் தாக்குதலில் 80 பேர் இறந்தார்கள் 1000 பேர் காயப்பட்டார்கள் என உசுப்பேற்றி விடுவதுமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றன.

இந்திய அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கும் திசை திருப்புவதற்கும் இவ்வாறு உலக விடயம் ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிதற்ற வேண்டிய சூழ்நிலையிலேயே இந்தியா இன்று உள்ளது. கொல்லப்பட்ட ஈரானின் மேஜர் கசம் சுலைமானியின் இறுதிக்கிரியைகளின் போது ஏற்பட்ட சன நெரிசலில் 50 பேர் உயிரிழந்து 200 பேர் வரை காயமடைந்திருந்தார்கள் எனும் போது அமெரிக்காவின் தாக்குதல் ஈரானிய மக்களின் உணர்வலையை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதையும் ஊகிக்கலாம்.

இந்நிலையில், ஈரான் மௌனித்திருப்பது எவ்வகையிலும் பொருந்தாது என்பதால் அமெரிக்கா தூங்கச் செல்லும் வேளையில் தாக்குதலை நடாத்தி ட்ரம்ப் எழுந்து வந்து விளக்கம் சொல்லும் வரை அது மீதான எண்ண அலைகளை ஓட விட்டிருந்தது. இடை நடுவே உக்ரைனின் பயணிகள் விமானத்தை அவசியமின்றி சுட்டு வீழ்த்தி 176 பேரின் உயிர்களைக் காவு கொண்டுள்ள ஈரான், தற்போது அதனை 'தவறு' என சுருக்கிக் கொள்ள முனைந்து கொண்டிருக்கிறது. இதன் பின்னணியிலும் ஈரானில் மாணவர்கள் போராட்டம் நடாத்துகிறார்கள், அதற்கு டொனால்ட் ட்ரம்ப் பாராட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

மத்திய கிழக்கு சூழலைப் பொறுத்தவரை அமெரிக்கா விரும்பும் புவியியல் மாற்றத்தை நோக்கியே பிராந்திய அரசியல் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை இதுவரை உணராதவர்கள் மீண்டும் 1990க்குப் பிற்பட்ட மத்திய கிழக்கை ஆழமாக அலச ஆரம்பித்தாக வேண்டும். இந்நிலையில், அங்குள்ள நாடுகளைக் கொண்டு தாம் வளர்த்துக் கொண்டுள்ள கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கும் இலங்கை முஸ்லிம்களும் சர்வதேச விவகாரத்துக்காக உள்நாட்டில் சண்டையிட்டுக் கொள்கிறார்.

ஈரானை ஆதரிப்பவர்கள் எல்லாம் ஷியாக்கள் என்று ஒருவர் கூற, அப்படியானால் அமெரிக்கா முஸ்லிம் நாடா? என்று மற்றவன் கேள்வியெழுப்புகிறான். மத்திய கிழக்கு பிராந்திய விவகாரங்களில், குறிப்பாக சவுதி அரேபியாவுக்கு எதிரான ஈரானின் நிலைப்பாட்டை விரும்பாதவர்கள் ஈரானை பிராந்திய குழப்பக் காரர்கள் என்று வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருக்க, டொனால்ட் ட்ரம்பை ஆதரிக்கும் முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் அதனை இஸ்லாமிய தர்மமாக்குகிறார்கள் என்பதும் அதிகபட்ச வேடிக்கை.

ஒரு புறத்தில் அத்துராலியே ரதன தேரர் இலங்கையில் முஸ்லிம்களுக்கென இருக்கும் பிரத்யேக விவாக-விவாகரத்து சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என தனிநபர் பிரேரணை கொண்டு வருகிறார். மறு புறத்தில் 12.5 வீத வாக்குகளைப் பெறாதவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை தரக்கூடாது எனும் பெயரில் பெருந்தேசிய கோட்பாட்டைப் புதுப்பித்து ஆட்சியாளர்களின் செல்லப் பிள்ளையாக முனைந்து கொண்டிருக்கிறார் விஜேதாச ராஜபக்ச.

இன்னொரு புறத்தில் முஸ்லிம் ஒருவர் புலனாய்வுத்துறை உயரதிகாரியாக நியமிக்கப்படுவது எப்படியென சரத் பொன்சேகா கேள்வியெழுப்புகிறார், அதுசரி, இனவாதத் தூண்டலில் ஆட்சியதிகாரத்துக்கு வந்தவர்கள் இப்போது அப்படி செயற்படக் கூடாது தானே? என்றும் சமூகப் பெருந்தகைகள் வாதம் முன் வைக்கின்றனர்.

இதற்கிடையில் பிரிகேடியர் சுரேஸ் சாலேஹ் ஒரு முஸ்லிமா? அவரது பெயர் ஏன் அப்படியிருக்கிறது என்றும் இன்னொரு குழு ஆய்வுத் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறுது. எப்படியோ 2020 இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு பரபரப்போடு ஆரம்பித்திருக்கிறது. இதற்கிடையில் கடந்த தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்தவர்கள் ஊர் ஊராகக் கூட்டம் போட்டு ஆள் சேர்க்கிறார்கள், அத்துடன் தமது கட்சியில் சேர 100 ரூபா கட்டணமும் அறிவிக்கிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி, ரஞ்சன் ராமநாயக்கவோடு எப்போதாவது தொலைபேசியில் உரையாடினோமா? என்று பலர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள், உரையாடியவர்கள் தம்மை நினைத்து வருந்திக் கொண்டும் இருக்கிறார்கள். ஈற்றில் கையில் இருக்கும் துப்பாக்கியை ஒரு தடவை சுட்டுப் பார்தத தனது கட்சிக்காரர் ரஞ்சனை காப்பாற்றச் சென்ற ரணில் விக்கிரமசிங்க, அவர் ஏதோ திரைப்படத்துக்காக பயிற்சியெடுத்தார் என நாடாளுமன்றில் சமாளிக்க, அதற்கு நன்றி தெரிவித்து அதையும் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்த ரஞ்சன் ராமநாயக்க யானையின் தும்பிக்கைக்குள் மொத்தமாக எறும்புகளை ஓட விட்டுள்ளார்.

ஒரு கணம், ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டுக்குள் பொலிஸ் நுழைந்து பல மணி நேரம் எதைத் தேடுகிறோம் என்றில்லாமல் தேடிக் கொண்டிருந்ததை ரஞ்சன் பேஸ்புக் ஊடாக நேரலையாக ஒளிபரப்ப, அதைப் பார்த்து கோபமும் கவலையும் கொண்டிருந்த பலர் தொடர்ச்சியாக வெளிவரும் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்களைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தற்போது அதனைச் சமாளித்துக் கொண்டிருக்கும் ரஞ்சனோ, பொலிஸ் கொண்டு சென்ற சிடிக்கள் எப்படி மூன்றாந்தரப்பினரின் கைகளுக்குச் சென்றது? எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடும்போக்கு பௌத்த அமைப்புகள் எல்லாம் ஒலிப்பதிவுகளைப் பெற்றுக் கொண்டது எப்படியென கேட்டு நீதிமன்றை நாடியிருக்கிறார்.

இதற்கிடையில் மகாராஜா நிறுவனத்தின் ஊடக பலத்தைக் கொண்டு ஒன்றுமில்லாத சஜித் பிரேமதாசவை ஊதிப் பெருப்பிப்பதாக தெரிவிக்கப்பட்ட ரஞ்சனின் உரையாடல் இன்னுமொரு கோணத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தன்னை மாட்டிவிட்டிருந்தாலும் தன் தலைமைப் பதவிக்கு வந்திருக்கும் ஆபத்தைக் களைவதற்கு ரணிலுக்கும் சரியான சந்தர்ப்பம் அமைந்துள்ளது. இப்படி எந்தப் பக்கம் கூட்டிக் கழித்தாலும் நேர்பாதையில் தெளிவாகத் தெரியும் வகையில் புதிய அரசியல் பாதையொன்றும் துலங்கவில்லை.

முன்னவர் செய்ததை விட பின் வந்தவர்கள் அரசியலை அலங்கோலப் படுத்தியிருக்கிறார்கள், அவர்களை விட அதற்குப் பின் வந்தவர்கள் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அடுத்து வருபவர்கள் இன்னுமொரு படி மேலே செல்வார்களேயொழிய கீழிறங்கப் போவதில்லை.
2015ல் ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இரண்டாவது தடவையாக லண்டன் வந்திருந்த வேளையில், ஒரு நிகழ்வுக்கு அவரோடு பல தூதரக அதிகாரிகள் வந்திருந்தார்கள். இலங்கைத் தூதரகத்தில் பொதுவாக இலங்கையிலிருந்து வந்தவர்களே குறிப்பிட்ட காலம் பணியாற்றி பின் மாற்றம் பெற்றுச் செல்வார்கள் அல்லது உபயோகப்படுத்தப்பட்ட பின்னர் தூக்கியெறியப்படுவார்கள். ஆனாலும், அன்றைய தினம் எனக்கு மிகவும் பரிட்சயமான ஒரு முகத்தைக் கண்டேன். அவரை அணுக, அவரே நலந்தானா? என பேச்சைத் தொடுத்தார்.

அது சரி, நீங்கள் எப்படி இங்கே என்று நான் வினவ, சற்றே நிதானமாக நான் இன்னாரின் மருமகன், அதனால் இந்த வேலை கிடைத்தது என்றார். அப்போது அவர் கூறிய நபர் இலங்கையில் ஆளுனர் பதவியொன்றில் இருந்தார். இத்தனைக்கும் இந்த நபர் லண்டனில் நீ;ண்ட காலம் வசிக்கும் ஒரு சட்டத்தரணி. அப்போதே மனம் கலங்கியது. நல்லாட்சியெனும் பெயரில் இவர்களும் அதையே தான் செய்கிறார்கள் என்றிருந்தது. காலப் போக்கில் அதுவும் 2018-19 காலப்பகுதியில் மைத்ரிபால சிறிசேன அள்ளி வழங்கிய பதவிகளில் பெருமளவு முஸ்லிம்களும் பயன் பெற்றார்கள் என்பதை மறுப்பதற்கோ மறைப்பதற்கோ இல்லை.

அது போலவே தற்போது கோட்டா – மஹிந்த அரசிலும் இந்த கலாச்சாரம் தொடர்கிறது. பதவிகளே தமக்காக உழைக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் என்ற சூத்திரத்தைப் பின்பற்றாமல் விபரீதங்களை விலை கொடுத்து வாங்கும் நிலையில் மஹிந்த இல்லை. அப்படித்தான் விறைப்பாக எதையாவது செய்தாலும் ஏப்ரலுக்குள் வரக்கூடிய தேர்தலை அது பாதிக்கும். அதனைத் தாண்டிச் சென்றதும் அதற்கடுத்ததாக வரவிருக்கும் மாகாண சபை, உள்ளாட்சி தேர்தல் என பல்வேறு தேர்தல்கள் தொடர் முட்டுக் கட்டைகளாக இருக்கும். எனவே, விறைப்பான காலம் விரைவில் அடங்கிப் போகும் என்பதோ பொதுவான எதிர்பார்ப்பு.

அப்பழுக்கற்ற சொந்த அரசியல் பின்னணியோடு சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியான போது அப்போது உயர் மட்ட அதிகாரகளிடம் இயற்கையான அச்சம் உருவாகியிருந்தது. பொலிசார் தம் கடமையைச் செய்வதற்கு, அரச ஊதியத்துக்கு மேலதிகமாக பொது மக்களிடம் பெறும் 'வெகுமானங்களை' கை நீட்டி வாங்க அச்சப்பட்டார்கள். புளும்பீல்டில் நாங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக செல்லும் போது பழகியிருந்த அப்போதைய கொழும்பு மாவட்ட உயரதிகாரியொருவர் அக்காலப் பகுதியில் வெட்கத்தை விட்டு இதனை சொல்லியிருந்தார்.

ஆயினும், காலப் போக்கில் சந்திரிக்காவாலும் ஒரு எல்லைக்கு மேல் வீராப்பாக இருக்க முடியவில்லை. உள்ளக அரசியல் கலாச்சாரம் அதற்கு வழி விடவில்லை. இப்போதும் நாட்டில் திடீர் திடீர் என பரபரப்பு நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. முற்காலத்தில் கிரிக்கட் மெட்சோடு மெட்சாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தது போன்று தற்போது இந்த பரபரப்போடு பரபரப்பாக ஏகத்துக்கும் விலைவாசி உயர்ந்து கொண்டு செல்வதாக சற்றே நிதானித்து அவதானிப்பவர்கள் அங்கலாய்க்கிறார்கள்.

ஆனாலும், ஒட்டு மொத்த மகா சமூகமும் விழித்தெழுவதற்குள் காலம் விரைவாக ஓடி விடும். ஏலவே அடி வாங்கிச் சரிந்து போன யானையை கயிறு போட்டு இழுத்து வீpழ்த்தியுள்ளது ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள். அதிலிருந்து மீண்டு ஐக்கிய தேசியக் கட்சி மீது நம்பிக்கையை வளர்த்தெடுப்பது மிகக் கடினமான செயலாக இருக்கப் போகிறது. இதற்கிடையில் சிறு கட்சிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி அதன் ஊடாக மீண்டும் பேரினவாத உணர்வும் தட்டியெழுப்பப் பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்பின்னணியில் மீண்டும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியமைத்தால் 19, ஜே.வி.பியன் 20ஐ எல்லாம் தாண்டி விஜேதாசவின் 20,21 மற்றும் ரதன தேரரின் பிரேரணை, இனி வரப்போகும் சிக்கல் என முஸ்லிம் சமூகம் சமாளிப்பதற்கு ஏகப்பட்ட சவால்கள் காத்திருக்கின்றன. சில வேளைகளில் இவ்வாறான சவால்கள் இருப்பதனை உணர்ந்தும் என்னதான் செய்ய? என்ற விரக்தி நிலை பலரது பேச்சு மற்றும் கருத்துக்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

பொதுவாகவே இலங்கை அன்னிய ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருந்த ஐந்து நூற்றாண்டுகளாக இருக்கட்டும், அதற்கு முன் முஸ்லிம் என்ற பிரத்யேக கலாச்சாரப் போக்குடன் வாழ்வதற்காக இருக்கட்டும், எம் மூதாதையரும் இம்மண்ணில் இது போன்றே எப்போதும் சவால்களுக்கு முகங்கொடுத்தே வாழ்ந்துள்ளார்கள். ஆனாலும், பண்டைய காலங்களுக்கும் தற்காலத்தில் வாழும் சமூகத்துக்குமிடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறது.

முற்காலத்தில், சமூகம் சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட்ட போது பெருமளவில் அவை ஒற்றுமையுடனேயே மேற்கொள்ளப்பட்டு செயற்படுத்தப்பட்டிருந்தது. சமூகத் தலைமைகளாகத் தம்மை முற்படுத்திக் கொண்டோர் அதற்கான தார்மீகப் பொறுப்பினை சுமந்தவர்களாக எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு சிறப்பான முடிவுகளை எடுத்தார்கள்.

இக்காலத்தில் அதற்கான சாத்தியம் இல்லை. 2009ல் உருவான முஸ்லிம் விவகார – விவாகரத்து சட்டத் திருத்தக் குழு பத்து வருடம் கழித்தும் ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லை. ஆதலால், ரதன தேரரின் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, அது சரி ஒரு நாட்டுக்கு ஒரே சட்டம் இருந்தால் போதும், பொதுச் சட்டத்தைப் பின்பற்றுவோமே என சமூகம் கடந்து சென்று விடும். பின்னொரு காலத்தில் நீதிமன்றங்கள் ஏறி இறங்கும் போது, 'எங்கட வாப்பாட காலத்துல எங்களுக்கென்று தனியாக கோர்ட்டெல்லாம் இருந்திச்சு வா' என்று கவலை கொள்ளும். இத்தனைக்கும் இருக்கும் போது அவற்றைப் பாதுகாக்க என்ன செய்தீர்கள்? என்று யாரும் யாரையும் பார்த்துக் கேள்வி கேட்டுவிடக் கூடாது. சற்றே பொதுப் பார்வையில், உலக நடப்பை அவதானித்து கேள்விகள் கேட்கப்பட்டால் அது அவர் நம்பும் இஸ்லாத்தை அவமதித்ததாக ஆகியும் விடும்.

இவ்வாறான இடியப்பச் சிக்கலுக்கு மத்தியில் தன்னைச் சுற்றி என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? என்று போலிப் போர்வையை விலக்கி இந்த சமூகம் எட்டிப் பார்க்காதா? என்ற ஏக்கம் இல்லாமலிருக்கப் போவதில்லை, ஆனாலும் பேசிப் பிரயோசனமில்லையென ஒவ்வொருவரும் மௌனமாக இருக்கிறார்கள்.

ஆதலால், ரதன தேரர்கள் பேசுகிறார்கள்!

jTScYcS
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

1 comment:

Abdul said...

Good article brother !

Post a Comment