கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரீன் இனாமுல்லாஹ் மௌலானா, இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் தங்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டி கடந்த 13ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை சர்வதேச விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்தோனேஷியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதன்போது இறுதிச் சுற்றுக்கு தெரிவான 24 நாடுகளுள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய பாத்திமா ஷைரீன் முதலிடம் பெற்று தங்க விருதை வென்றுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய விஞ்ஞான ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா பொறியியல் நிறுவனத்தில் துறைசார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலையில் கொழும்பில் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியான விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் இவர் தேசிய மட்டத்தில் முதல் நிலையை பெற்றிருந்தார். கொங்க்ரீட் கட்டிடங்களினால் புவியில் ஏற்படும் வெப்பத்தாக்கம் தொடர்பில் இவரது விஞ்ஞான ஆராய்ச்சி அமைந்திருந்தது.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கின்ற பாத்திமா ஷைரீன், கடந்த 2012ஆம் ஆண்டு தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்திருந்ததுடன் 2018ஆம் ஆண்டு ஜீ.சி.ஈ.(சா/த) பரீட்சையில் 09 ஏ சித்திகளைப் பெற்றிருந்தார். அத்துடன் தமிழ் தினம், ஆங்கில தினம், மீலாதுந் நபி விழா உள்ளிட்ட அனைத்து போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி, தேசிய, மாகாண மட்டங்களில் இவர் முதலிடம் பெற்றுள்ளதுடன் இம்முறை தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட ஆங்கில மொழிமூல பேச்சுப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றிருந்தார்.
இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மிகவும் திறமை காட்டி வருகின்ற இம்மாணவியின் பல்துறை சாதனைகளுக்காக அண்மையில் கல்லூரி சமூகத்தினரால் 'துர்ரதுல் மஹ்மூத்' (விலைமதிப்பற்ற முத்து) எனும் பட்டம் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார். இவர் கல்முனை கடற்கரைபள்ளி வீதியை சேர்ந்த இனாமுல்லாஹ் ஷக்காப் மௌலானா மற்றும் மௌலவி அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
-அஸ்லம் எஸ்.மௌலானா
No comments:
Post a Comment