இலங்கை நாட்டில் தொண்டு தொட்டு இனவாதம் தலைவிரித்தாடிக்கொண்டு தான் இருக்கின்றது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஆட்சியாளனை இன்னும் இந் நாடு பெறவில்லை. எப்போது தான் பெறப் போகின்றதோ?
இனவாத செயற்படுகளின் ஒரு அங்கமாய் சிறு பான்மை மக்கள் வாழும் பகுதிகளில் சிலைகள் முளைப்பது வழமை. கடந்த ஆட்சியிலும் மாயக்கல்லி உட்பட பல பிரதேசங்களில் சிலைகள் குடியேறியிருந்தன. மாயக்கல்லியில் நடந்தேறிய சம்பவத்தின் பின்னால் மண் கொள்ளை பேமிட் உள்ள கதையை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது அச் செயலை நியாயப்படுத்தும் விடயமுமல்ல.
தற்போது நெலுந்தெனிய, உடுகும்புற பள்ளிவாயல் வளாகத்துக்குள் சிலையொன்று உதித்துள்ளது. இங்கு யார் சிலையை வைத்தார்கள் என்று கூட தெரியவில்லை. சிலை வைப்புக்கு உரிமை கோர ஆளெவரும் இல்லையென்றால், அங்கு சிலையை நிறுவ எவ்வித சிறு நியாயமுமில்லை என்பது தானே பொருள். இதுவே அவ்விடயத்தில் சிலை வைப்பாளர்கள் மீதுள்ள பிழையை உறுதி செய்ய போதுமானது.
இது பிழையான செயற்பாடென்பதை தெளிவாக உணர முடிகின்ற போதும், இது பற்றி எந்த அரசியல் வாதியும் வாய் திறப்பதாக இல்லை. இதனை கண்டித்து ஒரு முஸ்லிம் அரசியல் வாதி கூட அறிக்கையேனும் விடவில்லை. இன்று மொட்டுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த எத்தனையோ முஸ்லிம் அரசியல் வாதிகள் உள்ளனர். ஏன் இதனை கண்டித்து பேசவில்லை. மொட்டுவிலுள்ள அதிகமான முஸ்லிம் அரசியல் வாதிகள் அடிமை அரசியலுக்கு பழக்கப்பட்டவர்கள். இது தான் காரணமோ? எது நடந்தாலும் வாய் பொத்தி இருக்க வேண்டும் அல்லது நியாயப்படுத்த வேண்டும். இவ்வாட்சி பலமானது போன்றும் தோன்றுகின்றது. இவர்கள் எதிர்த்து, இவர்கள் வேண்டாமென துரத்தி விட்டால்?
இதனை மொட்டு அணியினர் தான் தட்டிக் கேட்க வேண்டுமென்ற அவசியமில்லை. எதிர்க்கட்சியிலிருந்து கேள்வி கேட்பது இன்னும் பலமானது. இன்று எதிரணியில் தான் பலமான, மக்கள் ஆதரவு கொண்ட முஸ்லிம் அரசியல் வாதிகளுமுள்ளனர். இவர்களும் ஏன் இவ்விடயத்தில் மௌனம்? இவ் விடயத்தில் மௌனித்தமைக்கு எம்மவர்கள் எதிர்க்கட்சி அரசியலுக்கு பழக்கப்படாமை காரணமா அல்லது இச் சந்தர்ப்பத்தில் இருந்த இடம் தெரியாமல் இருந்து விடுவோம் என்பதனாலா ? எதிர்க்கட்சி அரசியல் என்றாலே இவைகளை சுட்டி பிரச்சாரம் செய்வது தனே! சில வேளை பாராளுமன்றம் கூட்டப்பட்டிருந்தால், இவைகள் பற்றி ஏதாவது பேசியிருப்பார்கள். எதுவும் நடந்துவிடக் கூடாதென்றல்லவா ஜனாதிபதி கோத்தா பாராளுமன்றத்தை மூடி திறவுகோலை கையில் வைத்துள்ளார். பாராளுமன்றத்தை மூடி திறவுகோலை கையில் வைக்கவா கோத்தா ஜனாதிபதியானார்?
இச் செய்தியை பார்த்ததும் முஸ்லிம்கள் கொதித்தனர். கொதிக்காத இரத்தம் முஸ்லிம் இரத்தில் உருவமமைந்ததாக இராது. இதனை நியாயப்படுத்தவும் சில முஸ்லிம்கள் தயங்கவில்லை என்பது தான் எம்மவர்களின் இழி பண்பின் உச்சம். மாயக்கல்லியில் சிலை வைத்த போது, அன்று கடந்த ஆட்சிக்கு வாக்களித்த யாருமே நியாயப்படுத்த முனையவில்லை. முடிந்தளவு எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். அந் நேரத்தில் இதனை நியாயப்படுத்த முனைந்த மு.காவின் பா.உ ஒருவரை மக்கள் வறுத்தெடுத்திருந்ததோடு, இன்று வரை அவரை அப் பேச்சு தாழ்த்திக்கொண்டு தான் இருக்கின்றது. இதுவொன்றும் அறியாத புதிய விடயமுமல்ல.
இப் பிரச்சினையின் போது, மொட்டுவுக்கு ஆதரவளித்தவர்கள் " மாயக்கல்லியில் உங்களது ஆட்சி சிலை வைத்தது தானே, அதை அகற்றி விட்டீர்களா, நீங்கள் இவ்வாட்சிக்கு வாக்களித்தீர்களா, யார் இவ்வாட்சியாளர்களிடம் சென்று பேசுவது " போன்ற வினாக்களை எழுப்புவதை அவதானிக்க முடிகிறது. இவ் வரசை கண்டித்து பேச ஒரு மொட்டு ஆதரவாளனால் கூட முடியவில்லை. இதனை என்னவென்று கூறுவது, என்னதொரு குரூர சிந்தனை? "எங்களது ஆட்சி இவ்வாறான இழி செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்காது, உங்கள் ஆட்சியில் வைத்த சிலையையும் சேர்த்து அகற்றும்" என்றல்லவா ஒரு ஆதரவாளன் கூற வேண்டும். இவ்விடயத்தில் இவ்வரசை யாராவது மொட்டு ஆதரவாளன் கண்டித்து பேசினால், மொட்டுவின் கொஞ்ச நஞ்ச ஆதரவும் தவிடு பொடியாகிவிடும் என்ற சுயநல அச்சம் தான், இவர்கள் எழுப்பும் வினாக்களுக்கான காரணியாகும்.
இந்த சிலையை பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதி கொண்டு நீக்கவுள்ளதாக தலைப்பிட்ட செய்திகளை சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது. உள் நுழைந்து விடயத்தை முழுமையாக வாசித்தால், பொலிசார் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிலையை நீக்கவுள்ளதாக பள்ளிவாயல் நிர்வாகத்திடம் கூறியுள்ளார். நடந்தால் சிறப்பு. இதுவெல்லாம் நடக்குமா, நடந்தாலே உண்மை. ஆனால், நடந்துவிட்டது போன்றே செய்தியை பதிவிட்டு, மக்களை திசை திருப்பியிருந்தனர். இதனை செய்தவர்கள் வேறெவருமில்லை. எமது முஸ்லிம் சமூக வலைத்தளத்தவர்கள் தான். என்னவொரு குரூர சிந்தனை.
எம் சமூகத்தின் நன்மை கருதி ஆளும், எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். அரசியல் கட்சி பக்தர்கள் கட்சி வெறி அரசியலால் எழும் குரூர சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, இவ் விடயத்தில் ஒன்றுபட்டு நியாயம் கோர வேண்டும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
No comments:
Post a Comment