வாழைச்சேனை பிரதேச சபையால் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டச் செல்லும் சுகாதார தொழிலாளர்களுக்கு காட்டு யானைகளால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு வருவதாக வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச சபையின் திண்மக் கழிவகற்றலில் ஈடுபடும் சுகாதாரத் தொழிலாளர்களால் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகள் சூடுபத்தினசேனை எனும் இடத்திலுள்ள மீள்சுழற்சி செய்யப்படும் இடத்தில் கொட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக கொழும்பு வீதியிலுள்ள தேக்கஞ்சேனை எனும் இடத்திற்கு மாற்றப்பட்டு கொட்டப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகமாக காணப்படும் பிரதேசமான தேக்கஞ்சேனை எனும் இடத்தில் கழிவுகள் கொட்டப்படுவதனால் வாழைச்சேனை பிரதேச சபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் காட்டு யானையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது வழக்கமாகியுள்ளது.
இதனால் பிரதேச சபையால் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத் தொழிலாளர்களை விரட்டியடித்து விட்டு உழவு இயந்திரத்தையும் சேதமாக்கிய துப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேபோன்று சென்ற ஆண்டும் ஓர் ஊழியர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி நெஞ்சு மற்றும் கை பாதிக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் மேலும் தெரிவித்தார்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment