சூரிய கிரகணம்: ACJU அறிவுறுத்தல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 December 2019

சூரிய கிரகணம்: ACJU அறிவுறுத்தல்


2019.12 (இம்மாதம்) 26 ஆம் திகதி வியாழக்கிழமை இன்ஷா அல்லாஹ் வலைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் இச்சூரிய கிரகணம் இலங்கையில் பல பாகங்களில் பகுதி கிரகணமாகத் தென்படும் அதேவேளை சில மாவட்டங்களில் சில நிமிடங்கள் வலைய கிரகணமாகவும் தென்படும்.


மேலும் கொழும்பு நேரப்படி காலை 08:10 மணிக்கு பகுதி கிரகணம் ஆரம்பமாகி, காலை 11:24 மணியுடன் கிரகணம் நீங்கி, சூரியன் வழமையான நிலைக்குத் திரும்பி விடும் எனவும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)

கிரகணம் தென்படும் போது இஸ்லாமிய வழிகாட்டல்களைக் கடைப்பிடித்து நடக்குமாறு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு கேட்டுக் கொள்கிறது.  மேலும், சூரியன் முழுமையாக அல்லது அதன் ஒரு பகுதி மறைவதை ஒருவர் நேரில் காணும்போது அல்லது பலரும் கண்டதாக அறிவிக்கும் போது கிரகணத் தொழுகையில் ஈடுபடுமாறு பொதுமக்களைப் பிறைக் குழு வேண்டிக் கொள்கிறது.

கிரகணத் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஸுன்னதாகும். ஆகவே இதனைக்  கூட்டாக நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பள்ளிவாசல் நிருவாகிகளையும் ஆலிம்களையும் பிறைக் குழு கேட்டுக் கொள்கிறது. 


அஷ்-ஷைக் எம். அப்துல் வஹாப் 
பிறைக் குழு இணைப்பாளர்

No comments:

Post a Comment