இலங்கையில் 70 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. அதில் ஐம்பதிலாவது முஸ்லிம் சமூகத்தின் பங்கிருக்கிறது. அதன் பின்னணியில் கொள்கை, இலட்சியம், அடைவு, எதிர்பார்ப்பு, நட்பு என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். வீட்டில், தெருவில், ஊரில் என ஆரம்பித்து ஒவ்வொருவரின் சமூக அக்கறையின் அளவும் காலத்தோடு ஒன்றி விரிவடையும்.
உலகம் அதன் போக்கில் பல கால கட்டங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. அத்தோடு சேர்ந்து மனிதனின் அறிவும் படிப்படியாக வளர்ச்சியடைந்து செல்கிறது. இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் கற்பனையாக இருந்த பல விடயங்கள் இன்று தொழிநுட்ப வளர்ச்சியால் நமது கைகளில் தவழ்கிறது. அதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனிதன் எண்ணிக் கூடப் பார்த்திருக்காத நாகரீக – அறிவு மற்றும் சிந்தனை வளர்ச்சியும் மேம்பட்டிருக்கிறது.
ஒக்டோபர் மாத இறுதியில் லண்டனில் ஒரு மாநாடு இடம்பெற்றது. அங்கு கொழும்பு முஸ்லிம்களின் கல்வி பற்றிய ஒரு ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்கின்ற போதிலும் பெறுபேறுகளின் அளவுக் குறைபாடு பற்றி ஆய்வாளர் சுட்டிக்காட்டியிருந்தார். ஒரு வகையில் அது ஒரு சிலரின் மனதைப் புண்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. எனினும், கருத்துரைக்கக் கிடைக்க சந்தர்ப்பத்தில் நூறு – நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னராக உலகக் கல்வியே ஹராம் என பத்வா கொடுத்து வாழ்ந்த சமூகத்தில் இன்று அந்த நிலை மாற்றம் பெற்று பெருமளவு குழந்தைகள் கல்வி கற்பதை நினைத்து நாம் பெருமையும் படலாம் என தெரிவித்திருந்தேன். ஆய்வாளரும் கூட அதற்கு இணங்கினார்.
பெரும்பாலும் அனைத்து சமூக விவகாரங்களிலும் இவ்வாறு பலவீனமான நிலையிலேயே நம்மை நாம் திருப்திப்படுத்திக் கொள்ளும் தேவையிருக்கிறது. அதிலும் அரசியலைப் பொறுத்தவரை இன்னும் எம் சமூகம் சிந்தனைச் சிறையிலிருந்து விடுபடவில்லை. தேசத்தின் அரசியலை எம் சமூகம் எது வரை? எதற்காகப் பயன்படுத்துகிறது? அல்லது அதன் ஊடாக எதை அடைந்து கொள்ள இயங்கிக் கொண்டிருக்கிறது? என்ற கேள்விகளின் அடிப்படையில், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய சூழ்நிலையையும் இன்றைய சூழ்நிலையையும் ஆராய்ந்தால் மலைக்கும் மடுவுக்குமிடையிலான வேறுபாடு காணப்படும்.
1948ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை 1972ம் ஆண்டு சோசலிஷ குடியரசாக மாற்றம் பெற்றது. அதற்கிடையில் 1956ல் சிங்களத்தை மாத்திரம் அரச கரும மொழியாக்கும் தனிச் சிங்கள சட்டம், 1971ல் ஜே.வி.பி கிளர்ச்சி மற்றும் 1983 முதல் 2009 வரையான தமிழர்களின் தனி நாடு கோரிய ஆயுதப் போராட்டம் என பல்வேறு சோதனைகளைத் தாண்டி இத்தேசம் பயணித்துக் கொண்டிருக்கிறது. கி.பி 1505ல் போர்த்துக்கீயர்களின் காலனித்துவ நாடானதிலிருந்து தேச மக்கள் கண்டிருந்த விடுதலைக்கான ஒற்றைப் போராட்டம் பிரித்தானியரின் வருகையின் பின் பல கூறுகளானது.
1815ல் பிரித்தானியருடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் ஊடாக பாரிய உயிரிழப்புகளைத் தவிர்த்துக் கொண்ட போதிலும் (கண்டி ஒப்பந்தம்) தமது அடக்குமுறைக்கு எதிரான எழுச்சிக்கு சிங்கள சமூகம் தருணம் பார்த்துக் கொண்டேயிருந்தது. பௌத்த நாடாக அறியப்பட்ட இத்தீவில் தமது அடையாளம் தொலைந்து விட்டது என்ற அவர்களது அச்சம், ஏனைய சமூகங்களுக்கு பிரித்தானியர் வழங்கி வந்த சிறப்புரிமைகள் ஊடாக போட்டி – பொறாமையாக வளர்ந்தது.
தம்மை அடக்கியாள்பவர்களை விட தம் மீது ஆளுமை செலுத்தும் பலவீனமான சிறுபான்மையினர் மீது கோபத்தைக் காட்ட விளைந்ததனால் 1915 முஸ்லிம் விரோத வன்முறை வெடித்தது. இதன் பின்னணி வரலாற்றை ஏலவே தெளிவாக ஆராய்ந்திருக்கிறோம். அதன் போது முஸ்லிம் சமூகம் தமக்குத் தாமே செய்து கொண்ட தீமைகளையும் 1976 புத்தளம் வன்முறையின் போது அதீத பொறுமையுடன் அதனைக் கையாண்ட விதங்களையும் கடந்த கால உரைகளில் விரிவாகப் பார்த்திருக்கிறோம்.இந்த இடைப்பட்ட காலத்தில் தேசிய அரசியலை சாதுர்யமாகக் கையாண்ட முஸ்லிம் தலைமைகள் இத்தேசத்தின் குடிகளாக இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
இன்னொரு புறத்தில் 1974 உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போதான கொலைகளில் ஆரம்பித்து 1978 முருங்கன், 1983ல் வெலிகடை மற்றும் திருநெல்வேலி (யாழ்), 1984ல் சுண்ணாகம், பருத்தித்துறை, கொக்கிலாய் படுகொலைகள் என மறுபுறத்தில் தமிழரின் போராட்டம் விரிவடைந்து கொண்டு சென்றது. ஆயிரமாயிரம் இன்னுயிர்களை இரு புறத்திலும் இழந்து 2008ம் ஆண்டு அரசியல் விடுதலையளிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதன் பின் ஆட்சியாளர்களிடம் ஏற்பட்ட மனமாற்றம், 1815 முதல் தேங்கித் தவித்துக் கொண்டிருந்த பேரினவாதத்தை தட்டியெழுப்பியதனால் நாடு இன்னொரு இருண்ட யுகத்துக்குள் தள்ளப்பட்டது.
பேரினவாத எழுச்சியுடன் கூடிய இந்த சர்வாதிகார யுகத்தில் 2012 வெலிகடை சிறைச்சாலை படுகொலையும் 2012ல் குடிநீர் கேட்டுப் போராடிய வெலிவேரிய மக்கள் படுகொலையும் அரங்கேறியது. தமது சுக போகங்களுடன் வாழப் பழகிக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் தேசிய விடுதலையைத் தவறான இடத்தில் அடகு வைத்து ஜனநாயக நடைமுறையை மீறி, ஒரே நபர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் நாட்டை ஆளும் வழியை உருவாக்கிய 18ம் திருத்தச் சட்டத்தை ஆதரித்தார்கள்.
சமூக நன்மை எனும் போர்வையில் தமது சிந்தனைச் சிறையில் அடைபட்டுக் கிடந்த மார்க்கத் தலைமைகளும் ஜெனிவா வரை சென்று படுகொலைக் கலாச்சாரத்தை மறைத்து, கொடி பிடித்து, ஆட்சியாளர்களைக் காப்பாற்றி அழகு பார்த்தது. அதன் பின் வீறு கொண்டு எழுந்த பேரினவாத சக்திகள் 2014ல் அளுத்கமயில் வெறியாட்டம் ஆடியது. எனினும், ஆட்சியாளர்களின் அனுசரணையில் ஐந்தாறு வருடங்கள்; தலை விரி;த்தாடிய பேரினவாதம், 21ம் நூற்றாண்டில் தம் தேசத்தின் போக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கனவோடு ஏங்கிக் கொண்டிருந்த முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்த போராட்டத்தின் பயனால் 2015ல் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது. ஆயினும், அரசின் பலவீனமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட பேரினவாத சக்திகள் கிந்தொட்ட, திகன என்று முஸ்லிம் சமூகத்தினரின் வழிதவறிய நடவடிக்கைகளை அடிப்படையில் வன்முறையைக் கட்டவிழ்த்தது. அதன் தொடர்ச்சியில் சற்றும் எதிர்பாராத வகையில் 2019 ஏப்ரல் 21ம் நாள் இலங்கை வரலாறு காணாத ஈஸ்டர் தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தின் பெயரால் நடாத்தப்பட்டது, அதனைத் தொடர்ந்த குருநாகல் முதல் மினுவங்கொட வரையிலான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அண்மைக்கால வரலாறுகள்.
இப்பேற்பட்ட இரத்த வரலாற்றின் பின்னணியில் 2019 நவம்பரில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் பங்களிக்கக் காத்திருக்கும் முஸ்லிம் சமூகம் இப்போது 2012 – 2019 வரையான பேரினவாத எழுச்சிக்கு எந்த வகையிலும் தாம் விரும்பும் கட்சிக்காரர்கள் பொறுப்பாளிகள் இல்லையென தமக்குள் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2012 முதல் வெறுப்பூட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வந்த முஸ்லிம் சமூகம், 2014ல் இடம்பெற்ற ஒற்றை வன்முறைச் சம்பவத்தினால் வெகுண்டெழுந்து பெரும்பாலும் தானாகவே ஒருங்கிணைந்த மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டது. அன்று ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட மஹிந்த ராஜபக்ச, தனது தோல்விக்கு சிறுபான்மையினரே காரணம் என்று பெரும்பான்மை மக்களைத் திருப்திப் படுத்திக் கொண்டார்.
2009ல் அவர்கள் உருவாக்கிய பேரினவாத சிந்தனைத்தூண்டல் அதை விரும்புவோர் மத்தியில் இன்றளவில் வெகுவாக வளர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை. எனவே பேரினவாத சிந்தனையடிப்படையிலான தமது வாக்கு வங்கியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சிரமப்படுவதை விட சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளை சிதைப்பதில் முனைப்புக் காட்டிய இச்சக்தி; இம்முறை பாரிய வெற்றியைக் கண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. இவ்வெற்றியை இரு வேறாக வகைப்படுத்திப் பார்க்கலாம். ஒன்று சித்தார்ந்த வெற்றி, இரண்டாவது அச்சமூட்டல்.
இலங்கையின் அரசியல், இரு பெருந்தேசிய கட்சிகளின் கைகளிலேயே உள்ளதென்ற நிலை உருவான காலத்திலிருந்து யு.என்.பி காரன் - ஸ்ரீலங்கா காரன் என்ற இரு நிலையிலிருந்தும் தேர்தல் காலங்களில் தமக்குள் அடிபட்டுக் கொண்டு வந்த முஸ்லிம் சமூகம், இன்றளவில் யானை – மொட்டு என பிரிந்திருப்பதில் தவறில்லை. ஆயினும், இன்றைய இந்த பிரிவினை, தவறுகளை நியாயப்படுத்தும் சித்தார்ந்த திணிப்பாக முஸ்லிம்களாலேயே மாற்றப்பட்டுள்ளது.இதற்காகத் தீவிரமாகப் பாடுபடுவோர் பொதுவாக பதவி – பட்டங்களுக்கான தரகர்கள் என அறியப்பட்டிருப்பதால் அது தொடர்பில் சிறு தெளிவும் சமூக மட்டத்தில் காணப்படுகிறது.
இன்னொரு புறத்தில், இனம்புரியாத அச்சம் திணிக்கப்பட்டுள்ளதன் காரணத்தினால் வாக்குகளைப் பிரித்தளிப்பதன் ஊடாக அந்தப் பக்கமும் இருந்தோம், இந்தப் பக்கமும் இருந்தோம் என்ற சமப்படுத்தலை செய்யலாமே என்ற எண்ணக் கரு வளர்ந்துள்ளது. ஆயினும், அவ்வாறான பரிசோதனைகளைச் செய்யும் களமா இது? என்ற கேள்விக்கு வேட்பாளர்கள் சார்ந்த கொள்கை, கட்சி நிலைப்பாடு மற்றும் கடந்த கால செயற்பாடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டிய அவசியமிருக்கிறது. 2015ல் கண்ட தோல்வி பெரமுன என்ற கட்சி சார்ந்தோரை எந்த வகையில் பாதித்திருக்கும் என்பதை பொதுத் தளத்தில் மக்கள் பரிசோதிக்கக் கிடைத்த முதலாவது வாய்ப்பு 2018 ஒக்டோபரில், தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த 52 நாட்கள் இடம்பெற்ற நிகழ்வுகள் மூன்று வருட இடைவெளியை மறக்கடிக்கச் செய்தது என்பதை மறுப்போர் இருக்க முடியாது. இவ்வாறான சூழ்நிலையில் 2015ல் ஆரம்பித்த போராட்டத்தை முன்னெடுப்பதா? இல்லையா? என்ற சந்தேகம் மக்களுக்கு உருவாகக் காரணம் நடைமுறை அரசின் பலவீனம் தான் என்றால் மிகையில்லை.
வாய் கிழிய வழங்கும் வாக்குறுதிகளுக்கு அப்பால், போலிக் கடவுச்சீட்டில் பயணிக்கவும், மத்திய வங்கியை கொள்ளையடிக்கவும், வாக்குறுதியளித்தது போன்று மக்கள் எதிர்பார்த்த நியாயமான ஆட்சியை நிலை நாட்டவும் தவறியமை இதன் பிரதான காரணிகளாகும். ஆயினும், அதற்கான தண்டனையை யாருக்கு வழங்குவது? என்ற கேள்வியை நிதானித்து சிந்திக்க வேண்டும். 2016 நவம்பர் மாதம் 16ம் திகதி வரை சஜித் பிரேமதாசவை ஆஹோ ஓஹோ எனப் புகழக்கூடிய லேக்ஹவுஸ், அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு மாற்று நபர் ஒருவர் வெற்றி பெற்றால் அவர் புகழை ஓங்கிப் பாடுவது வேண்டுமானால் மக்களுக்கு பழக்கப்பட்ட விடயமாகலாம். ஆயினும், ஐந்து வருடங்களுகு;கு முன் ஆரம்பித்த போராட்டத்தை அது பற்றிய தெளிவு இருந்தால் அத்தனை சீக்கிரம் கை விட முடியாது.
2015ல் தோற்கடிக்கப்பட்டது மஹிந்த ராஜபக்ச எனும் தனி நபர் எனப் பார்ப்பதற்கும் அவர் ஊடாகப் பிரசவித்த கொள்கை எனப் பார்ப்பதற்கும் இடையில் பாரிய வித்தியாசமுண்டு. 21ம் நூற்றாண்டில் நாட்டின் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்ற தெளிவான சிந்தனை கொண்ட பல ஆயிரம் மக்கள் தேசிய மக்கள் சக்தியெனும் கூட்டமைப்பூடாக காலிமுகத்திடலில் அணி திரண்டனர். ஆயினும், பிரபல வேட்பாளர் பக்கமே பார்வையைத் திருப்பப் பழகிக் கொண்டுள்ள எம் மக்கள் அந்தப் பக்கம் கடைக்கண்ணால் மாத்திரமே பார்த்தார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் அப்படியொரு பக்கம் திசை திரும்புவதாலும் பயனில்லை என்பதால் மாற்றுத் தேர்வு அவசியப்படுகிறது. அத்துடன் உங்கள் பார்வையைப் பெறுவதற்கு கோடிகளில் பணம் புரள வேண்டியுமுள்ளது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நவம்பர் 14ம் திகதி தேர்தல் வன்முறை கண்காணிப்புக்கான மையம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலுக்கான விளம்பரத்துக்கு பொதுஜன பெரமுன 1518 மில்லியன் ரூபாவை (151.8 கோடி) செலவு செய்துள்ளது. சஜித் பிரேமதாச 1426 மில்லியன் செலவு செய்ய, அநுர குமார திசாநாயக்க 160 மில்லியன் செலவு செய்துள்ளார். ஏப்ரல் 21ன் பின்னர் ஏற்பட்ட சூழழில் அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்கவின் செலவோ வெறும் 60 லட்ச ரூபாய். இந்த செலவீட்டினை வைத்து – நீங்கள் திரும்பிப் பார்க்கும் நபரை பார்த்தீர்களா – பார்க்கவைக்கப்படுகிறீர்களா? என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.
தேசிய அரசியலையும் தனிப்பட்ட நலனுக்காகப் பயன்படுத்தக் கிளம்பியுள்ள ஹிஸ்புல்லாஹ், சமூக மட்டத்தில் எழுந்த விமர்சனங்களினால் துவண்டு, இப்போது எனக்கு வாக்களித்து விட்டு யாருக்காவது வாக்களியுங்கள் என்கிறார். அப்படிப் பார்த்தால், எப்படியும் வராத அவருக்கு எதற்காக வாக்களிப்பது? ஹிஸ்புல்லாஹ் பிறக்க முன்னரும் - அரசியலுக்கு வந்து 30 வருடங்களாகவும் நடந்த எந்தத் தேர்தலிலும் இல்லாத தேவை இப்போது ஏன் வந்தது? தம்புள்ள பள்ளிவாசல் மீது கல்வீசப்பட்ட போது அதனை முற்றாக மறுத்த நிலை இப்போது மாத்திரம் எப்படி உரிமை காப்பதாக மாறும்? என பல கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.
இன்னொரு புறத்தில், சாய்ந்தமருதுக்குப் பிரதேச சபையைத் தருவோம் என கடந்த தடவை ரணில் சொன்னதை இந்தத் தடவை பசில் ராஜபக்ச சொல்லியிருக்கிறார். கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி பற்றியும் தொப்பியணிந்த முஸ்லிம்கள் புடை சூழ்ந்திருக்கப் பேசுகிறார். ஆயினும், நெற்றியில் பட்டையோடு காட்சியளிக்கும் கருணா அம்மானோ முஸ்லிம்களால் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்துக்கும் கோட்டா வந்து பதிலளிப்பார், தீர்வைப் பெற்றுத் தருவார், காணிகள் மீளக் கிடைக்கும், கல்முனை வடக்கு செயலகம் தரமுயரும் என அதே கோட்டாபேவை வைத்து தமிழர்கள் மத்தியில் ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கிறார். எல்லாப் பக்கத்தையும் பார்க்கும் ஒரு நபருக்கு ஒரு சிங்கள தேசியவாத கட்சிக்கு சிறுபான்மை சமூகங்களின் பால் இருக்கக் கூடிய அக்கறையின் அளவும் - தொலைவும் புரிய வேண்டும்.
தீர ஆராய்வோருக்கு நிச்சயம் பதில் உண்டு. தவிரவும் புதன் கிழமை சுஜீவ சேனசிங்க வேறு விதமான கேள்விகளையும் முன் வைத்திருந்தார். வாகனங்களில் சிங்கள நாட்டைக் காக்கும் கடைசி சந்தர்ப்பம் என்ற இனவாத வாசகங்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் காண்கிறேன். அப்படி என்ன நடந்து விட்டது இந்த நாட்டுக்கு? சிங்களவர் மட்டும் தான் வாழ வேண்டும் என்றால் முஸ்லிம்களையும் தமிழர்களையும் கடலில் போடுவதா? புத்தர் கூட சிங்களவரில்லையே? என பல கேள்விகளையெழுப்பியிருந்தார். இதேவேளை, திங்களன்று அததெரண நேர்காணலின் போது சிறுபான்மை சமூகத்துக்கு என்ன பிரதிபலன்கள் கிடைக்கும் என்ற கேள்விக்கு பெரமுன வேட்பாளர் பதில் சொல்லாமலேயே தவிர்த்து விட்டார்.
இவையனைத்தையும் வாக்களிக்க முன்பதான இந்த அமைதிக்காலத்தில் நிதானமாக சிந்தித்து ஆராயும் போது சிந்தனைச் சிறை தெரியும், அதனைத் தகர்க்கத் துணிவின் அடிமை விலங்குடையும். இனவாதமற்ற தேசத்தின் வளர்ச்சிக்கான போராட்டம் கடந்த நான்கு வருடங்களில் எதிர்பார்த்த இலக்கை வேண்டுமானால் அடையாமல் விட்டிருக்கலாம். நவம்பர் 16 வரை தோற்றுப் போகப் போவதுமில்லை.
தனி மனித விருப்பு – வெறுப்புக்கப்பாற்பட்ட சிந்தனைத் தெளிவுடன் வாக்களிப்பீர்!
Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
No comments:
Post a Comment