கோட்டாபயவின் தோல்வி என்பது இனவாதத்துக்கு கிடைத்த தோல்வியாக கருதப்படும் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். புதன்கிழமை இரவு தம்பலகாமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நான் அரசியல் வாழ்வை ஆரம்பித்த ஒன்பது வருடங்களாக சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசியல் செய்துள்ளேன். நான் பார்த்ததில் அவர் ஒரு சிறந்த பௌத்தர். அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கின்றவர். இனவாதம், மதவாதம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர். அவரின் முழுமையான நோக்கமும் வறுமை ஒழிப்பே.
இதுவரை இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஜனாதிபதி வேட்பாளர்களின் வாக்குறுதி யுத்தத்தை நிறைவு செய்வேன்,ஊழலை ஒழிப்பேன்,இலங்கையை அபிவிருத்தி அடையச்செய்வேன் என்பதாகவே காணப்பட்டது.ஆனால் வரலாற்றில் முதன்முறையாக ஒரு வேட்பாளர் வறுமை ஒழிப்பைப் பற்றி பேசுகிறார் ஆகவே இவ்வாறான ஒருவர் ஆட்சிக்கு வரும்போது அது ஏழை மக்களின் ஆட்சியாக காணப்படும்
அளுத்கம முதல் மினுவாங்கொடை வரை நடைபெற்ற இனவாத தாக்குதல்கள் அரசியல் நோக்கங்களுக்காக செய்யப்பட்டவை என்பது அனைவருக்கும் தெரியும்.அதன் பின்னணியில் ராஜபக்ஸ சகோதரர்கள் உள்ளனர் என்பதும் உங்களுக்கு தெரியும்.
இந்த தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச தோல்வியுற்றால் இலங்கையில் இனவாதம் மூலம் அரசியலை மேற்கொண்டு வெற்றிபெறமுடியாது என்ற செய்தி உலகுக்கு சொல்லப்படும். கோட்டாபாயவின் தோல்வி என்பது இனவாதத்துக்கு கிடைத்த தோல்வியாக கருதப்படும். அதன்பின் யாரும் தேர்தலில் வெற்றிபெற இனவாதத்தை கையிலெடுக்க மாட்டார்கள்.
அத்துடன் இன்று சில அரச அதிகாரிகள் குறிப்பாக கிராம உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நீங்கள் கோட்டாபாயவுக்கு வாக்களிக்காவிட்டால் உங்களுக்கு இருக்கும் சமுர்தியை இல்லாமலாக்குவோம் நிவாரணங்கள் தரமாட்டோம் என பொதுமக்களை அச்சுறுத்தியதாக ஆதாரத்துடன் எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அவர்களுக்கு நான் கூறிகொள்கிறேன் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றதும் இவ்வாறாக தேர்தல் விதிமுறைகளை மீறி தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்த அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்..ஆகவே இவர்களின் அச்சுறுத்தல்களுக்கு யாரும் அடிபணிய வேண்டாம் என தெரிவித்தார்.
-Sabry
-Sabry
No comments:
Post a Comment