ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு மாறாக பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது எமக்கு ஆதரவாக 4 இலட்சத்து 18 ஆயிரத்து 553 வாக்குகள் வழங்கப்பட்டிருந்தன. எமக்கு வாக்களித்த அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த முடிவு எமக்கு கிடைக்கவில்லை. இருந்த போதும் கிடைக்கப் பெற்றுள்ள முடிவை நாம் கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
நாட்டின் இரு பிரதான கட்சிகளும் தேர்தலுக்காக களமிறங்கியிருந்த நிலையில் எமக்கு அவர்களுடன் போட்டியிடுவதில் பெரும் சவால் ஏற்பட்டிருந்தது. எங்களுடைய தேர்தல் செயற்பாடுகளுக்காக எந்தவித சுயலாபத்தையும் எதிர்பார்க்காத பெருந்தொகையானோர் இணைந்திருந்தனர்.
எமது பிரசாரங்களின் போது நாட்டு மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ள சவால்கள் தொடர்பில் நாம் பல விடயங்களை தெரிவித்திருந்தோம். இதுவரை காலமும் தேர்தல் மேடைகள் கேலித்தனமாகவே காணப்பட்டது. ஆனால் இம்முறை நாங்கள் நாட்டின் அபிவிருத்தி , பொருளாதார முன்னேற்றம், இன ஒற்றுமை , கலாசார பண்புகளை பாதுகாப்பது தொடர்பான பலவிடயங்கள் தொடர்பில் மக்களை சிந்திக்க வைத்தோம்.
இந்த தேர்தல் முடிவுகள் நாட்டில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து நாம் அறிவோம். எம்நாட்டு சிங்கள , தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மத்தியில் இனபேதைத்தை ஏற்படுத்தும் வகையிலான முடிவினை வழங்கியுள்ளது. இந்த முடிவுகள் நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு மாறாக பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.
தேர்தலின் போது மேடைகளிலும் ஊடகங்களிலும் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலே மக்கள் முடிவெடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு தமிழர்கள் 2005க்கு பின்னரான காலப்பகுதிகளில் தாம் எதிர்நோக்கிய சம்பவங்களை கருத்திற்கொண்டு வாக்களித்துள்ளனர். முஸ்லிம் மக்களும் அவர்களின் பாதுகாப்பிற்காக இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் தெற்கிலுள்ள சிங்கள மக்கள் அடிப்படை வாதிகளுக்கு பயந்தே இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் மக்களின் உண்மையான எண்ணம் இங்கு பிரதிபலிக்க வில்லை. எனினும் தற்போது மக்களால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். எதிர்வரும் காலங்களில் மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் மீறப்படும் சந்தர்ப்பங்களில் நாங்கள் எப்போதும் போல் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோம் என்றும் அவர் கூறினார்.
பத்தரமுல்ல - மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
-செ.தேன்மொழி
No comments:
Post a Comment