எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்ட உத்தியோகபூர்வ பிரச்சார நடவடிக்கைகள் நிறைவுக்கு வருகின்ற நிலையில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்படவுள்ளதாக பெயர் குறிப்பிடப்படாத இந்திய உளவு நிறுவனத்தை ஆதாரங்காட்டி தகவல் பரவி வருகிறது.
வட-கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களுக்கு இவ்வாறான அச்சத்தை உருவாக்குவதன் மூலம் வாக்களிப்பின் பங்களிப்பைக் குறைப்பதற்கான தலையீடாக இதைப் பார்க்க முடியுமாயினும் கூட, தேர்தல் காலத்தில் தொடர்ச்சியான அச்சம் நிலவி வருவதால் இது குறித்து மக்கள் அவதானத்துடன் இருப்பது அவசியப்படுகிறது.
சமூக மட்டத்தில் பதற்றத்தை உருவாக்குவதன் ஊடாக வாக்களிப்பு மீதான ஆர்வத்தைக் குறைப்பது ஏதோ ஒரு தரப்புக்கு நன்மையைத் தரவல்லது என்பதால் இவ்வாறான நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மையாகும்.
எனினும், கடந்த சில வருடங்களாகவே அரசியல் தேவைகளுக்காக முஸ்லிம்கள் மீதான இன வன்முறையே ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதனால், இது குறித்து பிரதேச மட்டங்களில் விழிப்புணர்வுடன் செயற்படுவதுடன் தேவையான தொடர்புகளைத் தயார்படுத்தலும் அவசியப்படுகிறது.
இன்றைய தினம் ஆங்கில மொழியில் செய்திகளை வெளியிடும் வெப்தளம் ஒன்று இவ்வாறு ஒரு குண்டுத் தாக்குதல் இடம்பெறக் கூடும் என்ற தகவல் வெளியிட்டுள்ள போதிலும், சோனகர்.கொம் இது பற்றி ஆராய்ந்த அளவில், செய்தியை உறுதிப்படுத்தும் வகையிலான எந்த தகவல் மூலமும் இணைக்கப்படவில்லையென்பதும் முன்னணி இந்திய ஊடகங்கள் எதிலும் இவ்வாறான தகவல் இதுவரை வெளியாகவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment