இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பண்டாரநாயக்கவினரும் பிரேமதாஸவினரும் கை கோர்த்துக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் இறங்கியுள்ளனர். இது நாட்டில் அரசியல், சமூகவியல், பொருளாதாரம் மற்றும் கலாசார விழுமியங்களை ஏற்படுத்தி, இந்த நாட்டை செளபாக்கிய சகோதரத்துவ நாடாக மாற்றும் மிகச்சிறந்த திட்டத்தின் ஆரம்ப அடித்தளமாகும் என, புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கம்பஹா, வெலிவேரியவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, பண்டாரநாயக்க, பிரேமதாஸாக்களுக்கு இடையே மிக நெருக்கமான இறுக்கமான பிணைப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இது எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்ல சகுணமாகும்.
எமது இரு தரப்பினரும் நாட்டின் நன்மை கருதி, வரலாற்று உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளோம். இது தொடர்பில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நன்றியுடையவனாகக் கடமைப்பட்டுள்ளேன்.
எமது நாட்டில் இன்று பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியுள்ளது. இதனால், மனித வளங்களுக்கு பிரதான சக்தியையும் உறுதியையும் வழங்குவதே, எமது பிரதான நோக்கமாக உள்ளது. இதன்மூலம், மக்களை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழவைக்க முடியும்.
மக்களுக்குத் தேவையான பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் வழங்கும் அவசியத் தேவையுடையவர்களாக நாம் இருக்கிறோம். அந்தத் தேவையை, எமது புதிய அரசாங்கத்தின் கீழ், நிச்சயமாக உறுதியாகப் பெற்றுத் தருவோம்.
வெலிவேரிய ரத்துபஸ்வல மக்கள், சுத்தமான நீரைக் கேட்டு, வேட்டுக்களைப் பெற்றுக் கொண்ட துக்கரமான சம்பவத்தை மறக்கமாட்டார்கள். எனது ஆட்சியின் கீழ் இப்படியான சம்பவங்கள் நிகழமாட்டாது. இவ்வாறான யுகங்கள் அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும். இதை நான் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.
மக்களை வாழவைப்பது மக்களின் உயரிய பண்பாகும். இதனைத்தான், முன்னாள் பிரதமர் அமரர் பண்டாரநாயக்கவும் கூறிவிட்டுச் சென்றார்கள். எனவே, எனது அரசின் கீழ், உள்ளம் சாட்சியாக மக்களை வாழவைப்பதற்காக முன்னுரிமை வழங்குவேன். நாட்டின் செளபாக்ஜியம் நவம்பர் 17 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment