ஓட்டமாவடி: ஆசிரியரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Monday, 25 November 2019

ஓட்டமாவடி: ஆசிரியரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலை முன்பாக இன்று திங்கட்கிழமை போராட்டத்தினை நடாத்தினார்கள்.



இதன்போது வெளியேற்று வெளியேற்று மதினாவை வெளியேற்று, வகுப்பறையில் செய்தி தாள் பார்க்காதே, மாணவர்களுடன் நல்ல வார்த்தை பேசு, ஒரு ஆசிரியர்களுக்குரிய நற்பண்புகளை தேடு என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன், குறித்த ஆசிரியர் எங்களுக்கு தேவையில்லை என்று மாணவர்கள் கோசங்களை எழுப்பினார்கள்.

ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தில் கடமையாற்றும் குறித்த ஆசிரியர் பாட நேரங்களில் வகுப்பறைகளில் பத்திரிகை மற்றும் கையடக்கத் தொலைபேசி பார்ப்பதாகவும், கல்வி கற்பிக்கும் நேரத்தில் மாணவர்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதால் பிள்ளைகள் வீட்டில் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆசிரியரின் நடவடிக்கை தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தோடு குறித்த ஆசிரியர் பாடசாலை நிருவாகத்தினரை மிரட்டி வைத்துள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, கல்வி வலய உயர் அதிகாரிகள் உட்பட்டோர் வருகை தந்து பெற்றோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த ஆசிரியரை தற்காலிகமாக இன்று திங்கட்கிழமை முதல் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன், இவரது நிரந்தர இடமாற்றம் தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா தெரிவித்தார்.

அதன் பிற்பாடு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கலைந்து சென்றதுடன், மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம் வழங்கினர். தற்போது மூன்றாம் தவணை பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment