அந்நியர் ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை துண்டாகி, தமிழருக்கென ஒரு தேசம் உருவாகிவிடுமோ என்ற அச்சமும் நீடித்திருந்த அரசியல் சூழ்நிலை 2009ல் முடிவுக்கு வந்தது. 1983 தமிழ் சமூகத்துக்கு எதிரான வன்முறை பேரினவாத சிந்தனையோட்டம் ஊடாகவே நியாயப்படுத்தப்பட்டு வந்ததனால் 2009 யுத்த முடிவும் அன்றைய ஆட்சியாளர்களால் சிங்கள மேலாதிக்கத்தின் வெற்றியாகவே கொண்டாடப்பட்டது.
இந்த வெற்றிக்கு உரிமை கோரிய ஒவ்வொரு தரப்பும் தாமும் சிங்கள இன எழுச்சியின் பங்காளிகள் என்றே கூறி அதனை விரிவுபடுத்தியிருந்த நிலையில், இன்னொரு சிறுபான்மையினமான முஸ்லிம்களையும் முற்று முழுதாக அடக்காமல் அந்த எழுச்சி நிறைவுறாது என பௌத்த கடும்போக்குவாத தரப்பு கருதியது. அதற்கு ஆட்சியாளர்களின் ஆசீர்வாதமும் இருந்ததனால் 2010 முதல் முஸ்லிம்களுக்கெதிரான திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை (Systematic repression) ஆரம்பமானது.
யுத்த சூழ்நிலையில் தமது ஒழுக்கம் - ஒற்றுமை மற்றும் சமூகக் கட்டமைப்பிலிருந்து சிதறுண்டு பல கூறுகளாகப் பிரிந்து, சற்றே கடினமான வார்த்தையில் விளிப்பதாயின் தறிகெட்டுப் போயிருந்த முஸ்லிம் சமூகம் இதன் துவக்கத்தை மாத்திரமன்றி இன்றைய சூழ்நிலையைக் கூட முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையென்பதோடு, முன் சொன்னதன் ஒவ்வொரு விளைவும் தமக்குரியதன்று என சிந்திப்பதும், தாமும் பாதிக்கப்பட்ட பின்னர் அது குறித்து அவலக் குரல் எழுப்புவதுமாக காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது.
இன்னும் தெளிவாகச் சொல்வதானால் அரசியல் மற்றும் ஆன்மீக கொள்கைப் பின்னணியில் பல கூறுகளாகப் பிரிந்துள்ள 21ம் நூற்றாண்டின் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் தமக்கெதிரான பேரினவாத நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பிலான பொதுப் புரிதல் அல்லது இணக்கப்பாடு இன்னும் உருவாகவில்லை. இப்பின்னணியிலேயே 2014 அளுத்கம வன்முறை முதல் 2019 குளியாப்பிட்டி – மினுவன்கொட வன்முறைகள் வரை அவரவர் சார்ந்த நிலைப்பாட்டிலிருந்து அளவிடப்படுவதுடன் அதற்கான பொறுப்பு ஏதோ ஒரு அரசியல் தரப்பு மீது சாட்டவும் படுகிறது.
எனவே, கோட்டாபே ராஜபக்ச பொறுப்பாளியென ஒரு தரப்பும் சம்பிக்க ரணவக்கவே பொறுப்பாளியென இன்னொரு தரப்பும் ரணில் விக்கிரமசிங்க – மஹிந்த ராஜபக்ச ஆகியோர் அரசியல் இலாபம் அடைகிறார்கள் எனவும் பிரிந்து நின்று வியாக்கியானங்களை முன் வைத்து ஏற்றும் - எதிர்த்தும் விவாதித்துக் கொண்டிருக்கிறது.
ஆயினும், எந்த ஆட்சியாளர் வந்தாலும் பேரினவாத நிகழ்ச்சி நிரல் உடனடியாக முடிவுக்கு வர முடியாத ஒன்று என்பதோடு தேசத்தின் கொள்கை வகுப்பு (National policy) இன மையக் கொள்கையிலிருந்து விரைவில் வெளி வரப் போவதில்லையென்பதும் மிகத் தெளிவாகத் தெரியும் விடயங்களாகும். தற்கால அரசியல் ரீதியான இலாபங்களின் அடிப்படையில் அதற்குப் பலம் சேர்ப்பதில் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் இலங்கை முஸ்லிம்களுக்குப் பங்கிருப்பதால் எதிர்கால சமூகம் தாம் வாழும் காலத்து சவால்களுக்கு அந்தந்த காலத்திலேயே முகங் கொடுக்க நேரிடும்.
நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த நமது முன்னோரைப் பொறுத்தவரை அவர்களுடைய எண்ணப்பாடு தாம் வாழும் காலம் மற்றும் எதிர்காலம் சார்ந்ததாக இருந்ததனாலேயே இன்றைய சமூகம் பல்வேறு அரசியல் - சமய மற்றும் கல்வி சார் சிறப்புச் சலுகைகள் மற்றும் விதிவிலக்குகளோடு வாழ்ந்து வருகிறது. ஆயினும், துரதிஷ்டவசமாக அவ்வாறு ஒற்றைச் சமூக வரையறைக்குள் இருந்து சிந்திக்கும் தலைவர்களை கடந்த அரை நூற்றாண்டில் உருவாக்கத் தவறியதன் விளைவாக இன்றைய முஸ்லிம் சமூகம் இவ்வாறான சூழ்நிலையில் தம்மை வாழப் பழக்கிக் கொண்டுள்ளது.
இப்பின்னணியில், இன்னும் ஒரு வார காலத்தில் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்ய மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வகையில் எதிர்வரும் தேர்தலின் முடிவு நாட்டின் எதிர்கால போக்கை மாற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்ட மக்களாலும் இன்றளவில் உணரப்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையில்லை. சஜித் பிரேமதாச தலைமையிலான நாட்டின் பயணப்பாதையும் கோட்டாபே ராஜபக்ச தலைமையிலான பயணப் பாதையும் இரு வேறு வகையானது என்பது வெளியில் சொல்ல வெட்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.
வழக்கம் போலவே சிறுபான்மை சமூகங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நட்பு பாராட்டுகின்ற அதேவேளை பெரும்பான்மை மேலாதிக்கப் போக்கிலிருந்து நிதானித்து, தற்காலிகமாக தம்மையும் பரந்த - பொது மனப்பான்மையுள்ளவர்களாக காட்சிப்படுத்தும் கட்டாயம் கோட்டாபே ராஜபக்ச தரப்புக்கு உருவாகியுள்ளது. இந்த நியாயப் படுத்தலை சிறுபான்மை சமூகத்திற்குள் கொண்டு சேர்க்கும் தூதர்களாகக் கடமையாற்றுபவர்கள் சில நேரங்களில் கோமாளிகளாகவும் சில நேரங்களில் அச்சுறுத்தும் ஏவல் பிசாசுகளாகவும் சில நேரங்களில் கெஞ்சிக் காலில் விழும் யாசகர்களாகவும் தேர்தல் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பணி அத்தனை கடினமானது என்பதில் அவர்களுக்கும் உடன்பாடு உண்டு. வெகுமதிகளும் கனமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயம்!
மூன்றாவது பாதையொன்றின் தெரிவும் மக்களுக்கு இருக்கிறது. அது, அநுர குமார திசாநாயக்க தலைமையிலான சமத்துவ பாதை. இந்தப் பாதை வெறுமனே ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களின் தெரிவாக மாத்திரம் இருந்து வெற்றியடையப் போவதில்லை. மாறாக, அது பெரும்பான்மை சமூகத்திடமும் வளர்ச்சியடைய வேண்டும், அதற்கான காலம் கனிந்து வருகிறது என்ற நம்பிக்கையிருப்பினும் கூட கனிந்து விட்டது என்று கூற முடியாது. இதேவேளை, இந்த சமத்துவ பாதை நாளடைவில் சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாக முஸ்லிம்களின் உணர்வுகளில் எவ்வகையிலான தாக்கத்தைச் செலுத்தும் என்பதும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விடயமாகும்.
உதாரணமாக, முற்போக்குவாத சிந்தனையடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இலங்கையில் அனைத்து சமூகங்களுக்குமான சமவுரிமையை வலியுறுத்துகிறது. இதை முஸ்லிம்களும் தடையின்றி ஏற்றுக் கொள்வார்கள். அதேவேளை, தமது பிரத்யேக உரிமைகளுக்காகப் போராடும் டுபுடீவு சமூகம் என அறியப்படும் தன்னினச் சேர்க்கையாளர்கள் உள்ளடங்களானோரையும் மதிக்கும் தேசிய மக்கள் சக்தி (NPP), தம்மையும் ஒரு பாலினமாக அங்கீகரிக்கக் கோரும் அவர்களின் உரிமைகளையும் ஏற்று, அதற்கான போராட்டத்திலும் பங்கெடுக்கும். இதன் போது சமய சித்தார்ந்த ரீதியில் டுபுடீவு சமூகத்தினை ஏற்றுக்கொள்ள முடியாத முஸ்லிம் பங்காளிகள் முரண்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவ்வாறு முரண்படும் போது நவீன உலகின் மனித நேய அடிப்படைகளிலிருந்து இவர்கள் மாறு பட்டவர்களாகக் காட்சியளிப்பதுடன் இவர்கள் சார்ந்த ஒட்டு மொத்த சமூகமும் காட்டுமிராண்டிகளாகவும் அடையாளப்படுத்தப்படக் கூடும். இந்த தெளிவுடன் தான் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி எனும் சமய கொள்கை இயக்கமும் அதன் ஊற்றில் உருவான அரசியல் கட்சியம் கூட NPP யுடன் இணைந்திருக்கிறதா? என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
சமய சார்பற்ற சமத்துவம் பேசும் ஜே.வி.பிக்கும் தொப்பி தாடி அணிவித்து அவர்களையும் முஸ்லிம் கட்சியாக்க முனைவது எவ்வகையிலும் வெற்றியளிக்கக் கூடிய விடயமன்று. ஏனெனில், இடதுசாரி கொள்கையாளர்கள் அடிப்படையில் மத சார்பற்றவர்கள். ஆகவே, ஜே.வி.பியின் கொள்கைகளை ஏற்று முஸ்லிம்கள் இணைந்து கொள்ளலாமே தவிர ஜே.வி.பியை முஸ்லிம்களின் கட்சியாக்க முடியாது. இந்த வித்தியாசத்தினை நன்குணரும் பொழுது ஜே.வி.பி போன்ற கட்சியினை நாடாளுமன்றில் பலப்படுத்த வேண்டியதன் தேவையையும் உணரலாம். தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு அது முதிர்ச்சியற்ற (Pசநஅயவரசந) தெரிவாகவே அமையும்.
எனவே, ஒவ்வொரு வாக்காளனும் தனது தெரிவு தொடர்பிலான தெளிவைப் பெற வேண்டிய தேவை உள்ளது. தனது தெரிவு தான் சார்ந்த சமூகத்தின் இருப்புக்கும் எதிர்காலத்துக்கும் எவ்விதத்தில் பங்களிக்கப் போகிறது என்றம் சிந்திக்க வேண்டிய கடமைப்பாடு இருக்கிறது. முன் சொன்னது போன்று 2010ல் மேலோங்கிய ஒடுக்குமுறை எந்த ஆட்சியாளர் பதவிக்கு வந்தாலும் உடனடியாக களையெடுக்கப் படக்கூடிய ஒரு விடயமன்று. ஏனெனில், அது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குழுவினர் சார்ந்த விடயம் என்ற நிலையைத் தாண்டி, தற்போது அது ஒரு இனத்தின் எண்ணப் போக்காக மாற்றப்பட்டுள்ளது.
இந்த எண்ணப் போக்கி;னை அங்கீகரிக்க மறுக்கும் சாராரிடம் நிச்சயமாக சமத்துவமும் முற்போக்கு சிந்தனையும் உண்டு. ஆயினும் கூட அவர்களிடமும் நம் சமூகம் பற்றிய ஏதோ ஒரு வகையான சந்தேகமும் அச்சமும் உண்டென்பதையும் நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். குறிப்பாக கடந்த நாற்பது ஆண்டுகளுக்குட்பட்ட எமது சமயம் சார்ந்த நடவடிக்கைகள் இதற்கான அடிப்படையென ஏற்றுக் கொள்வதில் சுய விமர்சனம் செய்து கொள்ளத் தயார் நிலையில் உள்ளவர்களுக்கு சிரமம் இருக்காது. இந்த சந்தேகத்தின் பங்கினை முழுமையாகத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே ஏப்ரல் 21 தாக்குதல், அதன் பின்னணி, அதில் முஸ்லிம்களின் ஈடுபாடு போன்ற விடயங்கள் கடும்போக்காளர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுகிறது. விலக்கி விட்டோம் என்று சொன்னாலும் கூட மது மாதவ அரவிந்த போன்றோர் இன்னும் கூட தினசரி இரவு இவ்வாறான பிரச்சாரங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆக, நல்லவனைத் தேடுவதை விட குறைந்த கெடுதியைச் செய்யக் கூடிய தரப்பைத் தேர்ந்தெடுப்பதே முஸ்லிம் வாக்காளர்கள் எதிர்நோக்கக்கூடிய பொதுவான சவால். 2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அதற்கு முன் எழுச்சி பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறைக் கலாச்சாரத்தை அடக்கி விட்டதா? என்ற கேள்விக்கு 'ஆம்' என்ற தெளிவான விடையி;ல்லை. ஆயினும், கடந்த நான்கரை வருட காலத்தில் இடம்பெற்ற இனவாத சம்பவங்களின் பின்னணியிலும் தொடர்ந்தும் ஒரு பக்கமே தொடர்புபட்டிருப்பதானது இதன் தொடர்ச்சி பற்றிய அவதானத்தை வேண்டி நிற்கிறது.
ஜே. ஆர் முதல் சந்திரிக்கா வரையான காலம் போன்றல்லாது 2005 முதலான அரச இயந்திரம் வெகுவாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. பொது சேவையென்ற பெயர் இருப்பினும், பொது மக்கள் வரிப் பணத்திலேயே பணியில் தொடர்வினும் கூட தாம் சார்ந்த அரசியல் கட்சியின் தேவை வரும் போது அரச இயந்திரம் வெகுவாக பிளவுற்று நிற்கிறது. தொழிற்சங்கங்கள் கூட தொழிலாளர் நலனை விட அரசியல் கட்சிகளின் நலனுக்காகவே பெரும்பாலான போராட்டங்களை நடாத்துவதும், குறித்த அரசியல் தலைவர்கள் தலையிட்டு 'வேண்டுகோள்' விடுத்ததும் போராட்டங்களைக் கைவிடுவதுமாகத் தொடர்கின்றன.
பலவீன அரசியலின் வெளிப்பாடு இதுவெனின் அதற்கான ஒரே தீர்வு பலமான அரசொன்றைக் கட்டியெழுப்புவதே. அரசாங்கம் என்பது வெறுமனே ஜனாதிபதியும் பிரதமரும் சார்ந்ததன்றி காத்திரமான எதிர்க்கட்சியின் பங்கும் கலந்ததாகும். ஆயினும், இலங்கை அரசியலில் எதிர்க்கட்சியென்பது ஒன்றில் அரசி;ன் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்ப்பது அல்லது ஒத்தூதுவது என்ற நிலைகளிலேயே தரித்து நிற்கிறது. இப்பின்னணியிலேயே ஜே.வி.பி போன்ற சமத்துவ கட்சியொன்றின் குரல் நாடாளுமன்றில் பலப்படுத்தப்பட வேண்டிய தேவையிருக்கிறது. ஆயினும், இரு பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றே ஆட்சியமைக்கும் சக்தி படைத்துள்ளது எனும் அடிப்படையில் இவ்விரண்டில் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அதில் எது சமூகத்தின் இருப்பு மற்றும் அபிலாசைகளுக்குச் சிறந்தது? சமூக விவகாரங்களைப் பேசித் தீர்வு காணக்கூடியது? நம்பி வாக்களிக்கக் கூடியது? போன்ற கேள்விகளின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. பெரும்பான்மை சமூகம் ஓரணியில் திரண்டு விடும் என்ற மாயை அல்லது மிரட்டல் காலத்துக்கு ஒவ்வாதது என்பதோடு அச்சத்துக்கு அப்பாற்பட்டதுமாகும். ஏனெனில், இந்த கேள்விகளும் - மிரட்டல்களும் இல்லாத காலத்தில் நம்பி வாக்களித்திருந்த மக்கள் மீதே கடும்போக்குவாத பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்ததுடன் அதனைக் கை கட்டிப் பார்த்திருக்கும் கலாச்சாரமும் வளர்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியில் ஒரு பலவீனமான அரசும் உடனடி தீர்வைத் தரவில்லையாயினும், முப்படைக்குத் தேவைப்படும் உறுதியான தலைமைத்துவமும், பரந்த சிந்தனை கொண்ட நாட்டின் தலைமையும் அதனைப் பலப்படுத்தும் நாடாளுமன்றப் பெரும்பான்மையும் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்பலாம்.
தமிழ் சமூகத்தின் ஆயத போராட்டம் 30 வருடங்கள் நீடித்ததன் பின்னணியிலும் தென்னிலங்கை அரசியலின் ஆதிக்கம் இருந்ததை மறக்கவோ மறுக்கவோ முடியாது. அதனடிப்படையில், பத்து வருடங்களையே எட்டியுள்ள நவீன முஸ்லிம் விரோத போக்குக்கு அரசியல் ரீதியான சாவுமணி அடிப்பதே எமது கடமையாகும். தவிரவும், பேரினவாதத்துக்குத் தோள் கொடுக்கும் சித்தார்ந்தவாதிகளை வளர்த்தெடுப்பது கடந்த காலத்தை விட மோசமான எதிர் விளைவுகளை உருவாக்கும் என்பதும் எதிர் பார்க்கக் கூடிய ஒன்றே.
இந்தக் காரணத்துக்காகவே 2015ல் மக்கள் அலையெனத் திரண்டு மாற்றத்தை உருவாக்கினார்கள். ஆயினும், அந்த மாற்றத்தை செயற்படுத்தக் கூடிய பலமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளத் தவறியதன் ஊடாக நாடாளுமன்ற ஆதரவில்லாத ஜனாதிபதியும், ஜனாதிபதியின் ஒத்துழைப்பில்லாத அமைச்சரவையும் நாட்டுக்குப் பிரயோசனமற்றவை என்ற அனுபவப் பாடத்தையும் மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்.
இந்நிலையில், ஒரே கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி – பிரதமருடன் பலமான அரசை உருவாக்க சஜித் - ரணில் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டணிக்கு இன்னொரு வாய்ப்பையளிப்பதா? அல்லது அவர்களுக்கு இடமில்லாவிட்டால் திரும்பத் திரும்ப அடிப்பார்கள் என்ற அச்சத்தில் மீண்டும் மஹிந்த – கோட்டா நிர்வாகம் ஒன்றை உருவாக்க இடமளிப்பதா? என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
ஜனநாயக வழியைப் பின்பற்றும் பெரும்பாலான நாடுகளில் இரு முறை தலைவராக இருந்த ஒருவர் தானாக ஒதுங்கிக் கொள்வதனால் மாற்றத்துக்கான மக்கள் உழைப்புக்கு ஏதோ ஒரு வகையில் பயன் கிடைக்கிறது. இலங்கையிலும் அந்தத் தேவையிருக்கிறது. எனவே, ஜனநாயக சோசலிஷ குடியரசின் பிரஜைகளாக நாட்டின் அரசியல் யாப்பையும் பாதுகாத்து எதிர்கால அரசியல் ஒரு இடத்தில் முடங்கிப் போவதையும் தவிர்ப்பது முஸ்லிம்களுக்கும் கடமையாகிறது.
இலங்கை அரசியலமைப்பின் 9ம் 10ம் சரத்துகளுக்கமைவாக புத்த சாசனத்தை பாதுகாப்பதோடு ஏனைய சமூகங்களின் சமய, சமூக மற்றும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கத் துணிந்து அதனை வெளிப்படையாக சொல்லக் கூடியவருக்கும், பௌத்த முன்னுரிமை என்ற மாயையோடு வரையறுத்துக் கொள்பவர்களுக்குமிடையில் இருக்கும் வித்தியாசத்தை சிந்தித்து – ஆராய்ந்து தெளிவு பெறின் நன்மையுண்டு!
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
https://www.facebook.com/irfaninweb
https://www.facebook.com/irfaninweb
No comments:
Post a Comment