ஐக்கிய இராச்சியத்தில் வாழும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களின் வருடாந்த ஒன்று கூடல் நேற்று (26) லூட்டன் நகரில் அமைப்பின் தலைவர் முஹமத் கியாஸ் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது.
2002ல் ஆரம்பிக்கப்பட்ட யாழ்.முஸ்லிம் சமூக அமைப்பு (Jaffna Muslim Association) கடந்த 17 வருடங்களாக தொடர்ச்சியாக யாழ்ப்பாண முஸ்லிமகளின் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு நாடளாவிய ரீதியில் பல்வேறு மனித நேய உதவி நடவடிக்கைகளையும் மேற் கொண்டு வருகிறது.
புலம் பெயர்ந்த மண்ணில் வாழும் அடுத்த தலைமுறையினரை மண்ணோடு தொடர்பு படுத்தி வைத்திருக்கும் வகையிலான செயற்திட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பெண்களுக்கான விசேட நிகழ்வுகள் என பல்வேறு அம்சங்களுடன் இடம்பெற்ற நேற்றைய நிகழ்வில் யாழ். முஸ்லிம் அமைப்பின் கடந்த கால செயற்திட்டங்கள் மற்றும் கம்பியா போன்ற வேறு நாடுகளில் உள்ள முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் போன்ற விபரங்களும் சமூகத்தாருக்கு விளக்கப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், அமைப்பின் தீவிர செயற்பாட்டாளரும் முன்னாள் அறிவிப்பாளருமான காலஞ்சென்ற மர்ஹும் பளீல் தொடர்பான நினைவுகளும் நிகழ்வில் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment