இனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா: ஹக்கீம் சாடல்! - sonakar.com

Post Top Ad

Monday, 14 October 2019

demo-image

இனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா: ஹக்கீம் சாடல்!

rrQY4Lr

இனவாதிகளின் பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லாவினால் வாய்திறக்கவே முடியவில்லை. அவரே இப்போது இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறார் என்பதைவிட மிக மோசமான அரசியல் வங்குரோத்து நிலைமை இருக்கமுடியாது. இவர் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் காட்டமாகத் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) காத்தான்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;

இந்த ஜனாதிபதி தேர்தலில் காத்தான்குடி முக்கியமானதொரு பேசுபொருளாக இருக்கப் போகின்றது. ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முழுநாடும், ஏன் சர்வதேசமும் அவதானம் செலுத்தும் இடமாக காத்தான்குடி மாறியிருக்கிறது. இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், முழு சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் வேலையை இங்குள்ள அரசியல் பிரமுகர் செய்துகொண்டிருக்கிறார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், சமூகத்தின் மீதான நெருக்குவாரங்களை கவனத்திற்கொண்டு முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளைத் துறந்து, பலமானதொரு செய்தியை நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் சொன்னோம். அரசியல் வேறுபாடுகளை மறந்து சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற சூழலில், தன்னையும் தனது சுயநலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முழு சமூகத்தையும் அடகுவைக்கின்ற வங்குரோத்து அரசியல் மிகவும் ஆபத்தானது.

அவருடைய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் மிகவும் பக்குவமாக நடந்துகொண்டன. அவரது பல்கலைக்கழக விவகாரத்துக்கும் டொக்டர் ஷாபியின் விவகாரத்துக்கும் நாங்கள் வித்தியாசம் பார்க்கவில்லை. இரண்டையும் இனவாத பிரச்சினைகளாகவே நோக்கினோம். அவரையும் பாதிக்காமல், சமூகத்தையும் பாதிக்கமால், இனவாதிகளுக்கு தீனியும்போடாமல் நாங்கள் மிக நேர்மையாகவும் பக்குவமாகவும் நடந்துகொண்டோம்.

முஸ்லிம்களின் வாக்குகளை பகல் கொள்ளையிட்டு எதிரணி வேட்பாளர்களின் காலடியில் கொண்டுபோய் கொட்டுவதை காத்தான்குடி மக்களோ அல்லது நாட்டு முஸ்லிம்களோ அனுமதிக்கமாட்டார்கள். நாங்கள் அமைச்சு பதவிகளைத் துறந்து, இனவாத நெருக்கடிக்குள் சிக்குண்டிருந்த ஹிஸ்புல்லாவுக்கு ஆறுதல் கொடுத்தோம். ஆனாலும், அவருடைய பக்குவமில்லாத செயற்பாடுகள் பிரச்சினைகளை மேலும் விஸ்வரூபமெடுக்க வைத்துள்ளது.

தாக்குதல் நடைபெற்ற பின்னர் ஹிஸ்புல்லா பள்ளிவாசல் ஒன்றுக்குள் வைத்து பக்குவமில்லாமல் பேசியதையும் அதனால் ஏற்பட்ட விபரீதங்களை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். கடந்த தேர்தலில் யாருடன் நின்றார், பின்னர் பின்கதவால் சென்று எப்படி தேசியப்பட்டியலை கொள்வனவு செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். அதன்பின்னர் நடந்தேறிய கூத்துக்களின் ஓர் அங்கமாக சர்ச்சைக்குரிய ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.

நான் என்ன சொன்னாலும் காத்தான்குடி மக்கள் கேட்பார்கள் என்ற இறுமாப்பில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களை மக்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளனர். தனது எஜமானர்களின் கூலிப்படையாக இருந்துகொண்டு சமூகத்தை விலைபேசி விற்கின்ற பிற்போக்குத்தனமான அரசியல்வாதிகளை மக்கள் தூக்கிவீச வேண்டும். ஒரு வாக்கேணும் ஹிஸ்புல்லாவுக்கு அளிக்கப்படுவது துரோகத்தனத்துக்கு துணைபோவதாகும்.

கிராமப்புற சிங்கள மக்கள் மத்தியில், முஸ்லிம்களை வேறுபடுத்தி தூரப்படுத்திக்காட்டும் ஆபத்தான விளையாட்டை இப்போது அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். தன்னைத்தோனே ஜனாதிபதி என்று கூப்பாடுபோடும் அரசியல் கோமாளி மக்கள் இப்போது தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர். இப்படியானவர்களின் சுயரூபம் வெளுத்து, தனிநபர் அரசியல் விரைவில் முடிவுக்கு வரப்படும்.

ஊர் மக்களுக்காக போராடுகிறேன் என்று, அந்த ஊரையே படுகுழிக்குள் தள்ளவிடுகின்ற வேலையைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார். வெளிச்சக்திகளுக்கு சோரம்போன ஒருசில முஸ்லிம் பெயர்தாங்களிகளின் செயற்பாடுகளினால் மனமுடைந்துபோயிருக்கும் இந்த மண்ணை இன்னுமொரு நெருக்கடிக்குள் தள்ளவிடுவதை நாம் அனுமதிக்க முடியாது. காத்தான்குடி என்பது முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கம் முளைவிட்ட மண். அதை பாதுகாப்பது எங்களின் கடமை.

ஜனாதிபதி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாடம் கற்பிக்கவேண்டும் என்றால் அந்த வேலையை செய்திருக்கவேண்டியது நான்தான். முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதில் களமிறங்கியிருந்தால் அதற்கு ஓரளவுக்கு நியாயம் கற்பித்திருக்கலாம். ஆனால், அது பிரயோசனமற்ற வேலை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இந்நிலையில் தனது இருப்பை தக்கவைப்பதற்காக சமூகத்தை அடகுவைத்துள்ள வேட்பாளரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளரை தீர்மானிப்பதற்கு முன்னரே, சஜித் பிரேமதாசதான் வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துவிட்டது. சஜித் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் இப்போது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக இருந்துகொண்டிருக்கிறது. சிறுபான்மை மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இவரைவிட சாத்தியமான வேறொரு வேட்பாளர் இல்லை.

பொதுத் தேர்தல் வருகின்றபோது முஸ்லிம் கட்சிகள் ஒன்றாக போட்டிட வேண்டும் என்று மக்கள் உற்சாகப்பட்டார்கள். அப்போதுதான் முஸ்லிம்களின் வலிமையை உறுதிப்படுத்த முடியும். காத்தான்குடியில் இருப்பவர்கள் தனிமனித அரசியலிருந்து விடுபட்டு இயக்க அரசியலுக்குள் வந்தாக வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள் இயக்க அரசியலுக்குள் இருப்பதே பாதுகாப்பை பெற்றுத்தரும்.

முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் தேர்தல் காலங்களில் அடக்கிவாசிக்குமாறு எதிரணியினரால் பணிக்கப்பட்டுள்ளன. அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய இனவாத பாடகர் ஒருவர் இராஜினாமா செய்ததாக நாடகம் காட்டினார்கள். எங்களால் மாத்திரம்தான் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் என்ற இறுமாப்பில் இருப்பவர்கள் ஆட்சி, எவ்வளவு அடக்குமுறையாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

ஏப்ரல் 21 தாக்குதல் நடந்தவுடனேயே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு நாட்டை பாதுகாப்பதற்கு தயார் என்று கோத்தாபய அறிவித்திருந்தார். நாட்டில் அச்சமும் பீதியும் நிலைத்திருப்பதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு மொட்டு அணியினர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் அச்சமும் பீதியும் நீங்கவேண்டும் என்றால், சிறுபான்மையினர் முதலில் பீதியில் வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும். வாக்களிக்காமல் விடுவது அதைவிட பிழையான செயற்பாடாகும்.

சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் குறித்து சஜித் பிரேமதாச கவனத்திற்கொள்ளவில்லை என்று சிலர் பேசுகின்றனர். அதற்கான உத்தரவாதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையாகும். அவருடனான எனது உறவின் அடிப்படையில் எனது தெரிவு மிகவும் பக்குவமானது. சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கும் உத்தரவாத்தை காரணம்காட்டி, கிராமப்புற மக்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கு எதிரணி தயாராக இருக்கின்றது. இந்த விவகாரத்தை நாங்கள் மிகுந்த தூரநோக்குடன் சாணக்கியமாக கையாள வேண்டும்.

இலங்கை, தென்னிந்தியா மற்றும் மாலைதீவைச் சேர்ந்த முஸ்லிம்களை ஒன்றிணைத்து வலையமைப்பு ஒன்றை நான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். முஸ்லிம்கள் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு இது மிகப்பெரிய அரணாக இருக்கும். எதிர்காலத்தில் வருகின்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு நாம் என்றும் தயார்நிலையில் இருக்கவேண்டும். நாடுகடந்த வலைப்பின்னலின் ஊடாகத்தான் எங்களது பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் என்றார்.

-SLMC

No comments:

Post a Comment