முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் குறித்த பிரச்சினைக்கு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, (02) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடிக்கடி கலந்துரையாடி வந்துள்ளேன்.
இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் முஸ்லிம் விவாக, விவாகரத்துத் திருத்தச் சட்டம் குறித்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், இன்று வரை இவ்விவகாரம் தொடர்பில் எந்தவொரு சட்ட மூலமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் சில நாட்களுக்கு முன்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு நான் அவசரக் கடிதமொன்றையும் அனுப்பி வைத்தேன். அந்தக் கடிதத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு குறித்த பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியிருந்தேன். ஆனால், அதற்கும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனினும், அதற்கான சிறந்த பதிலையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
உண்மையில், இந்த விவகாரம் இழுபறியான நிலையில் இருந்து வருவதையிட்டு நான் கவலையடைகின்றேன். நாங்கள் அவசரமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். பெண்கள் அமைப்புக்களும் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு தரவேண்டும் என்று அடிக்கடி எம்மிடம் வலியுறுத்திக் கேட்டு வருகின்றன.
முஸ்லிம் பெண்கள், தங்களது விவாகச் சட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்களின் கோரிக்கைக்கு அமைய, முஸ்லிம் விவாக, விவாகரத்துத் திருத்தச் சட்ட மூலம், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு அது நிறைவேற்றப்படாவிடின், அது முஸ்லிம் தரப்புக்குச் செய்யும் பாரிய அநீதியாகும்.
எனவே, முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், அவர்களுக்குரிய கௌரவங்களை வழங்குவதும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கும் ஒரு பங்கிருக்கின்றது.
முஸ்லிம் பெண்களின் இருப்பு, இன்று மிகவும் இக்கட்டான நிலையில் இருந்து வருவதை அவதானிக்கின்றேன். இதுவும் எனக்கு கவலை அளிக்கின்றது. உடனடியாக இதற்கு மிக அவசரமாக தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என்றார்.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment