ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நாட்டை ஆளும் தலைவரைத் தெரிவு செய்ய ஒரு தேர்தல். இந்தத் தேர்தலில் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவெடுப்பது அவரவர் ஜனநாயக உரிமை.
சுதந்திரம் பெற்று 70 வருடங்களைக் கடந்துள்ள போதிலும் தேச அபிவிருத்தி இன்னும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடங்கிக் கிடக்கிறது. அதற்கு ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு காரணம். ஆனாலும் அனைவரும் இணங்கக் கூடிய பொதுக் காரணி அரசியல். ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்விலும் அரசியல் தாக்கம் செலுத்திக் கொண்டிருப்பதனால் அறிந்தும் அறியாமலும் இதில் ஒவ்வொருவருக்கும் ஈடுபாடுண்டு.
நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் தலைவரைத் தீர்மானிக்கத் தேவையான காரணியை ஒவ்வொருவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அன்றைய தினம் வாக்குச் சீட்டில் போடப் போகும் புள்ளடிக்குப் பின்னால் ஓராயிரம் பிரச்சினைகள்.
துரதிஷ்டவசமாக, அந்த பிரச்சினைகள் என்னவென்ற பட்டியலோ இது தான் என்ற நிச்சயிக்கப்பட்ட வரையறையோ இல்லை. அது பல வடிவங்கள், பல கோணங்கள், பல்வேறு எதிர்பார்ப்புகள் கொண்டது. பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடக் கூடியது. பொதுத் தன்மையற்றது. ஆதலால் அறுதியிட்டுக் கூற முடியாதது. ஆழமாக ஆராய்ந்தால், முஸ்லிம்களுக்குப் பொதுப் பிரச்சினையென்று ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வியும் எழும்.
ஜப்பானில் ஒரு பேரரசரின் ஆட்சி முடிவுற்று இன்னுமொருவரின் ஆட்சி ஆரம்பிக்கும் போது அதனை அந்நாட்டு மக்கள் ஒரு புதிய 'யுகம்' எனக் கொள்கிறார்கள். அந்த வகையில் பேரரசர் அகிஹிட்டோவிடமிருந்து அவரது புதல்வருக்கு ஆட்சி கைமாறியதும் தற்போது 'ரேவா' யுகம் ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில் பேரரசர் அக்கிஹிட்டோவி;ன் சமாதானத்துக்கான யுகம் (Heisei) முடிவுற்று தற்போது அவரது புதல்வாரன நருஹிட்டோவின் அழகான நல்லிணக்கம் (Reiwa) என்று பெயரிடப்பட்டுள்ள யுகம் ஆரம்பித்துள்ளது. ஜப்பானிய மக்களைப் பொறுத்தவரை அவர்கள் இதன் தத்துவ பரிமாணத்தை நன்குணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
2010க்கு முற்பட்ட இலங்கையின் அரசியல் சூழ்நிலைக்கும் அதன் பின்னான சூழ்நிலைக்குமிடையில் பாரிய வித்தியாசம் உருவாகியிருக்கிறது. இதனை ஜப்பானில் போன்று ஒரு யுகமாகக் கருத முடியுமா? என்பது அறுதியிட்டுக் கூற முடியாதாயினும் 2010 முதல் உருவான சித்தார்ந்தப் பேரெழுச்சியைக் கட்டாயம் வரையறுக்க முடியும்.
இவ்வாறான தேசிய விடயங்களுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் சற்று இடைவெளி அதிகம் என்பதால் இந்த சித்தார்ந்த எழுச்சியின் தாக்கத்தினை சிங்கள சமூகத்திலிருந்தே அலச வேண்டும். அதற்கேற்ப இத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையான சிங்கள இளைஞர்களின் சமூக வலைத்தள கருத்துப் பரிமாறல், செயற்பாட்டினை அவதானித்து வந்தோம். அதில் கணிசமானோர் இத்தேர்தலை தமது வாழ்நாளில் மிக முக்கிய தேர்தலாகக் கருதுவதை அறிந்து கொள்ள முடிந்தது.
இவ்வாறு இதனைக் கருதும் சிங்கள இளைஞர்கள் இரண்டு வகைப்படுகிறார்கள். முதல் வகையினர் 'அப்பே ரட்ட – அப்பேம நாயக்கயா' எனும் தொனிப் பொருளை உறுதியாக நம்புகிறவர்களாகவும் இரண்டாவது வகையினர் 'அளுத் ரட்டக்' என்ற அடிப்படையை நம்புபவர்களாகவும் இருக்கிறார்கள். முதலாவது வகையினர், அதாவது 'எங்கள் நாடு – எங்களுக்;கான தலைவர்' என்ற உணர்வுப் பெருக்கில் இத்தேர்தலை எதிர்கொள்பவர்கள் பெரும்பாலும் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவையே விரும்புகிறார்கள், அவருக்கே வாக்களிக்கப் போவதாக பகிரங்கமாக தெரிவித்து வருகிறார்கள்.
இரண்டாவது வகையினர் இரு உப பிரிவுகளாகக் காணப்படுகிறார்கள். அதில் ஒரு பிரிவு இதற்கு முந்தைய கறைபடிவுகள் எதுவுமற்ற சஜித் பிரேமதாச ஊடாக நாடு முன்னேறும் என்று நம்புகிறவர்களாகவும் மற்றைய பிரிவினர் சமத்துவ கொள்கையூடாக நாட்டை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அநுர குமார திசாநாயக்கவை ஆதரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில், இந்த இரண்டாவது வகையினரைப் பொறுத்தவரை அவர்கள் உலக நடைமுறையுடன் ஒப்பீட்டளவில் தமது நாட்டை முன்நிறுத்திய வழிமுறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதானால், உலகின் போக்கோடு வேகமாக முன்னேற வேண்டிய ஒரு தேசம் முடங்கிப் போயிருப்பதாகக் கருதுவதோடு, வளர்ச்சியடைந்த நாடுகளைப் போன்று நம் நாடும் முன்னேற முடியும், அதற்கு தூய நோக்குடனான அரசியல் நிர்வாகமே அவசியம் எனக் கருதுகிறார்கள்.
ஆயினும் முதலாவது வகையினர் நமது நாடு – நமக்கான தலைவர் என்ற அடிப்படையை ஒரு இனத்தின் எழுச்சியென்ற அடிப்படையிலேயே விரும்புகிறார்கள். ஆக, இதனடிப்படையில் அநகாரிக தர்மபால காலத்து சித்தார்ந்த எழுச்சியின் மீள் வடிவமாக அல்லது இதனை ஒரு புதிய யுகமாகக் கருதலாம் என்றும் விவாதிக்கலாம். 2010ல் மேலெழுந்த இந்த எண்ணப்பாடு ஐந்து வருடங்களுக்குள் முடங்கிப் போனதும் தற்போதைய எழுச்சி உணர்வுக்கு ஒரு காரணமாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை.
2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், 2010 முதல் உருவான பேரினவாத சிந்தனையெழுச்சி மீதான வெறுப்பின் அடையாளமெனக் கொள்வதே தகும். இன்றளவும் சிங்கள வாக்குகள் மாத்திரம் கிடைத்தாலே போதும் என கோட்டாபய ராஜபக்சவின் முகாம் நம்பி வருவதன் அடிப்படையை வைத்தே ஆராய்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களும் ராஜபக்ச சிந்தனைகளை நிராகரித்திருந்தமையினைப் புரிந்து கொள்ளலாம். இம்முறை, தம்மைக் கைவிட்ட சிங்கள மக்களை வென்றெடுப்பதிலேயே கோட்டாபய ராஜபக்சவின் முகாம் மும்முரமாக செயற்பட்டு வருவதையும் அவதானிக்கலாம்.
இதன் செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே இளைஞர்கள் மத்தியில் உருவாகியிருக்கும் இந்த அப்பே ரட்ட – அப்பேம நாயக்கயா என்ற மகுடவாசகத்தின் அர்த்தம் புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. உலகிலேயே சிங்கள பௌத்த மக்களுக்கான ஒரே நாடு இலங்கை, அதனை சிங்கள இனத்தின் மீது பற்றுக் கொண்ட ஒருவரே ஆள வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த உணர்வு வெளிப்படுத்தப்படுகிறது. 2015ல் தேர்தலில் தோல்வியுற்ற போதிலும் இந்த சிந்தனையை இளைஞர்கள் மத்தியில் விதைப்பதில் மஹிந்த ராஜபக்ச சார்பு செயற்பாட்டாளர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு கிராமப்புற இளைஞர்கள் மத்தியிலும் இவ்வெண்ணம் தீவிரமாக ஊற்றெடுத்துள்ளது.
ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதனால் அது ஒரு காலத்தில் உண்மையெனவே நம்பப்படும் எனும் வழக்கத்தில், இதில் பெரும்பாலானோர் நாட்டை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள், சிங்கள மக்களின் சனத்தொகை குறைந்து வருகிறது, நாடு தம் கையை விட்டு நழுவிப் போகிறது என்றே கருதுகிறார்கள். ஆதலால், சிங்கள இனத்தைக் காப்பாற்ற வந்திருக்கும் இரட்சகராக கோட்டாபயவும் அவர் ஊடாக பிரதமராக வரக்கூடிய மஹிந்த இவ்வெண்ணக் கருவின் தந்தையாகவும் போற்றப்படுகிறார்கள்.
எது எப்படியாயினும் வரலாற்றில் முதற்தடவையாக இரண்டு அடி நீளமான வாக்குச் சீட்டு உருவாகியுள்ள போதிலும் இந்த வகை வாக்காளர்கள் தமது தெரிவில் மிகத் தெளிவானவர்களாகவும் தமது பொதுத் தேவை என்னவென்பதில் சந்தேகங்களுக்கு அப்பால் முடிவெடுத்தவர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆயினும், சிங்கள மக்களின் வாக்குகள் முழுமையாகத் தமக்குக் கிடைக்கப் போவதில்லையென்பதால் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளையும் வேட்டையாட வேண்டிய தேவை பெரமுனவுக்கு இருக்கிறது. அதற்கு எவ்வித சிரமுமில்லாமல், அந்த வழியில் தம்மை நிலை நிறுத்தப் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பல சிறுபான்மை சமூக அரசியல்வாதிகள் அதற்கான முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள், சில இடங்களில் தமது சமூகத்தையே மறைமுகமாக மிரட்டவும் செய்கிறார்கள்.
இன்னார் வெற்றி பெற்றால் தான் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று கூறுவது ஒரு வகையில் மிரட்டலும் ஜனநாயக அத்துமீறலுமாகும். ஆயினும் எமது அரசியல்வாதிகள் அதனைத் தாராளமாக செய்து வருகிறார்கள். இருப்பினும், பொது உடன்பாடு ஒன்றை எட்ட முடியாத சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்துக்குள் இது எத்தனை தூரம் எடுபடும் என்பது சந்தேகத்துக்குரியது. ஒப்பீட்டளவில் முஸ்லிம் இளைஞர்களின் மனப்பாங்கும், செயற்பாடும் எவ்வாறு இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் நாங்கள் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் அடிப்படையில் மிகக் குறைந்த அளவான முஸ்லிம் இளைஞர்களிடையேயே அரசியல் புரிதலும் அதனடிப்படையிலான தெரிவும் காணப்படுகிறது.
பெரும்பாலானோர், தம்மால் பேசப்படும் நியாயங்களுக்கும் அது தொடர்பிலான அடிப்படைகளிலும் கூட முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால், அவர்களைப் பொறுத்தவரை வேறு வழி காட்டல் அவசியப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் நிலவும் உணர்வோட்டத்தைப் பிரதிபலித்தே தமது பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வரும் பைசர் முஸ்தபா போன்ற அரசியல்வாதிகள், அடிக்கடி 'கோட்டாபயவை பார்த்துப் பயப்படாதீர்கள்' என்றும் கூறி வருகிறார்கள். இவ்வாறு கூறுவதும் மறைமுகமான அச்சத்தை உருவாக்குவதோடு, முஸ்லிம்கள் வாக்களிக்காவிட்டாலும் சிங்கள வாக்குகளால் கோட்டா ஜனாதிபதியாவார், அதன் பின்னர் எம்மால் நிம்மதியாக வாழ முடியாது என்று இவர்கள் கூறுவது நேரடியான மிரட்டலாகவும் இருந்து வருகிறது. கோட்டாபே ராஜபக்சவோ, சஜித் பிரேமதாசவோ, அநுர குமார திசாநாயக்கவோ அல்லது முப்பத்தைந்து வேட்பாளர்களில் யாராக இருந்தாலும் அதனைத் தேர்வு செய்யும் உரிமை அந்த மக்களுக்கு இருக்க வேண்டும்.
தெரிவை நோக்கிய அழுத்தம் மனித உரிமை மீறலாகும். இதற்கடுத்ததாக தாமாகச் சுயமாக முடிவெடுக்காத ஒரு தொகையினர் தாம் சார்ந்த அரசியல் கட்சித் தலைவர்களின் தெரிவையே தமதாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இரு பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இம்முறை சஜித் பிரேமதாசவுக்கே தமது ஆதரவை வழங்கி வருவதனால் கட்சி மோதலுக்கு இடமில்லை. அக்கரைப்பத்தில் ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ள அத்தாவுல்லாவின் தொண்டர்களும் இதே வழியில் தமது தலைமையின் தெரிவான கோட்டாபே ராஜபக்சவை ஆதரிக்கிறார்கள்.
இவ்வாறான பின்னணியில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியி;ல் சஜித் - கோட்டா வாதமும் கருத்து மோதலும் வலுத்து வருகிறது. பொதுவாகவே கோட்டாபய ராஜபக்ச மீதான அதிருப்தியென்பது எந்தவொரு முஸ்லிமினதும் தனி நபர் பிரச்சினையில்லை. 2012 – 2014 வரையான காலப்பகுதியில் வடிவம் பெற்ற பேரினவாத, கடும்போக்குவாத செயற்பாடுகளைக் கண்டும் காணாமல் இருந்தமை மற்றும் பொது பல சேனா போன்ற கடும்போக்குவாத பௌத்த அமைப்புகளை ஆதரித்தமை மற்றும் 2014 – 2019 காலப்பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் நேரடியாக தொடர்பு பட்டிருந்தமை அல்லது அவ்வாறான தொடர்புள்ளவர்களே பெரமுனவின் முக்கியஸ்த்தாகளாக செயற்பட்டு வருகின்றமை போன்ற பொதுவாக சமூக மத்தியில் நிலவும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த கோபம் காணப்படுகிறது.
அதே போன்று, 2015 – 2019 வரை நிலவும் தற்போதைய ஆட்சியின் கீழும் கிந்தொட்ட, அம்பாறை, திகன, குருநாகல், மினுவங்கொட வன்முறைகள் நடைபெற்றுள்ளன, அவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறியுள்ளது, ஆதலால் இவர்களும் தான் வன்முறையாளர்களுக்கும் பௌத்த கடும்போக்கு வாதிகளுக்கும் இடமளித்துள்ளார்கள் என்று நடைமுறை அரசின் மீதும் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கக் கூடிய முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள் மாத்திரமன்றி, சமூகத்தின் பெரும் பகுதி நம்புவது போல் வன்முறைகளுக்குப் பின்னால் மஹிந்த ராஜபக்சவோ அவர்களது சகோதரர்களோ இல்லையென வாதிடுகிறார்கள்.
இவ்வாரம் அக்கரைப்பத்துக்குச் சென்ற நாமல் ராஜபக்சவும் தனது பங்கிற்கு ராஜபக்சக்கள் ஒரு போதும் இனவாதிகள் இல்லையெனவும் தெரிவித்திருந்தார். இதேவேளை, தனியார் வானொலியொன்றுக்கு செவ்வியொன்றை வழங்கியிருந்த முன்னாள் இராணுவ தளபதியும் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளருமான மஹேஷ் சேனாநாயக்கவோ, ஏப்ரல் 21ம் திகதி முதல் தினசரி ஒவ்வொரு நிமிடமும் முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பேரினவாத சக்திகள் எல்லாம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மௌனமான மாயம் என்ன? என்று கேள்வியெழுப்புகிறார். அத்துடன், அவர்களின் தலைவர் போட்டியிடுவதனாலேயே இவர்கள் தற்போது அமைதியாகி விட்டார்கள் என்றும் விளக்கமளித்திருந்தார்.
ஒரு புறத்தில் சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் போட்டி போட்டுக் கொண்டு கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்ற போதிலும் அதை விட முனைப்பாக செயற்பட்டு, சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லையெனக் கூறி பேரினவாத தூண்டலைக் காப்பாற்றுவதற்கு விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதேவேளை, சில மாதங்களுக்கு முன்பாகவே தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வை நல்லவராக்குவதற்கும் எஸ்.பி. திசாநாயக்க, பந்துல குணவர்தன போன்றோர் போட்டி போடுகிறார்கள்.
இந்த சதுரங்க ஆட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகள் புதையுண்டு, சிக்குண்டு எட்டிப் பார்ப்பதும் அடங்கிக் கொள்வதுமாக எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் அடிப்படையில் நமக்கொரு ஜனாதிபதி வேண்டும் என்ற தெளிவும் இன்றி நிலை குலைந்து போயுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில், சிங்கள இளைஞர் சமூகம் நம்புவது போல் இது மிக முக்கியமான ஒரு ஆரம்பமாகவே இருக்கப் போகிறது. ஜனாதிபதி தேர்தலையடுத்து மாகாண மற்றும் பொதுத் தேர்தலும் இடம்பெறவுள்ளது. ஒட்டு மொத்தத்தில் நாட்டின் நிர்வாகத்தை மீளக் கட்டியெழுப்பக் கூடிய சிறந்த வாய்ப்பாகவே இது அமையப் போகிறது. அப்படியானால், இங்கு வாக்காளர்கள் சிந்திக்க வேண்டிய அடிப்படை என்ன? என்ற கேள்விக்கு விடை காணப்பட வேண்டும்.
எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட தெரிவு, தனி நபர் மீதான விருப்பு வெறுப்பானதாகவன்றி அவர் சார்ந்த கட்சி மற்றும் கொள்கை, எதிர்கால திட்டங்கள் மீதான திறந்த வாசிப்பின் அடிப்படையிலானதாக இருந்தால் சமூகமும், நாடும் நன்மை பெறும்!
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
No comments:
Post a Comment