முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகக் காண்பிக்க முனையும் அரசியல் சூழ்ச்சியை சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பதன் ஊடாக முறியடிக்க வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம்.
இந்த நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் குழப்பங்களை ஏற்படுத்தியதாக வரலாறு கிடையாது. நாமும் நமது பாடும் என்றே வாழ்ந்து வந்திருக்கிறோம். நாம் தனிநாடு கேட்டுப் போராடவில்லை. நாம் ஆட்சியைக் கைப்பற்ற புரட்சி செய்யவில்லை. அன்றாடம் வாழ ஒரு தொழில்; அல்லாஹ்வை தொழ பள்ளி; குர்ஆன் கற்க மத்ரசா என இவற்றை விட அதிகம் நாம் வேண்டி நின்றதில்லை. அதற்கான தேவையும் நமக்கு எழவில்லை.
யாருக்காவது வாக்களிப்போம். யார் வென்றாலும் ஏற்றுக்கொள்வோம். நம்மைச் சுயமரியாதையோடு அவர்கள் நடத்தினால் போதும் என்று எண்ணி இருப்போம். உரிமைகள் அதிகம் கிடைக்காவிடினும்; கிடைத்ததை கொண்டு திருப்தியுற்றோம். இணக்கப்பாட்டினூடாக எதையும் சாதிக்க எண்ணினோம். எந்த அரசிலும் முஸ்லிம்கள் இணைந்திருந்திருந்தார்கள். இலங்கையின் இறைமையில் கவனமாக இருந்தார்கள். கஷ்டமாக இருந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று நாட்டைக் காக்க உதவினார்கள்.
ஆனால், இலங்கையில் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னர் ஏற்பட்ட தொய்வு நிலையைச் சரி செய்ய; அன்றைய அரசாங்கத்தின் ஆதரவோடு 2012 யிலிருந்து ஒரு அரசியல் சதி அரங்கேற்றப்பட்டது. முஸ்லிம்கள் குறியாக்கப்பட்டு குரோதம் வளர்க்கப்பட்டது. பௌத்த கடும்போக்குவாதிகள் நம்மீது ஏவிவிடப்பட்டு, நமது சமய, சமூக, கலாசார, பொருளாதர அம்சங்கள் இலக்கு வைக்கப்பட தொடங்கின. விடுதலை புலிகளைப் போன்று முஸ்லிம் அடிப்படைவாதமும் - தீவிரவாதமும் தலைதூக்கி; இலங்கைக்கு ஆபத்தானதாக வளர்வதாகக் குற்றம் சாட்டப்பட்டது. முஸ்லிம்கள் சிங்கள மக்களின் எதிரிகள் என்ற கருத்துருவாக்கம் வலுவடைய செய்யப்பட்டது.
அதனூடாக, அப்பாவி நாட்டுப்புற சிங்களவர்களின் இன உணர்வைத் தூண்டி; அவர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதூடாக; ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற எடுகோளில்; முஸ்லிம்களுக்கு எதிரான நெருக்குவாரங்களும் பரப்புரைகளும் வெகுவேகமாக முடுக்கிவிடப்பட்டன. ஆனால், 2015 இல் முஸ்லிம்களும் தமிழர்களும் அன்று மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக எடுத்து நின்ற வலுவான அரசியல் நிலைப்பாட்டில்; அத்தனையும் தவிடுபொடியாகி இறுதியில் மண்கவ்வ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஆனால், அவர்கள் ஓயவில்லை. இழந்த அதிகாரத்தை மீண்டும் பெற வேண்டும் என்ற இலட்சியத்தில் சற்றும் தளரவில்லை. அம்பாரை பள்ளி உடைப்பை பின்னிருந்து இயக்கினர். கண்டி கலவரத்தைக் கச்சிதமாக அரங்கேற்றினர். அதில் அவர்களுக்கு எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவில்லை. அல்லது கிடைத்தும் நீடிக்கவில்லை. அதனால், சம்பளம் கொடுத்து வளர்த்த சஹரான் போன்ற கடாக்கள் பலியாக்கப்பட்டன. இரத்தமும் சகதியுமான தற்கொலை தாக்குதல் வெளிச்சக்திகளின் ஆதரவுடன் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டது.
ஒரே பொழுதில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாயினர். நமது பெண்கள் அபாயா போட்ட தற்கொலைதாரிகளாயினர். நமது பிள்ளைகள் தீவிரவாதிகளாயினர். நாம் நாட்டின் எதிரிகளானோம். இந்த நேரத்தில் ஒரு அறிவிப்பு வந்தது. கோட்டாபாய ராஜபக்ச அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார். குண்டுவெடிப்பு நிகழ்ந்து மூன்றாவது தினம் இதை அறிவித்தார். தான் ஜனாதிபதியாகி தீவிரவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் அழித்தொழிக்க போவதாக அறிவிப்பு செய்தார். அப்பாவி முஸ்லிம்கள் மீதான போர்ப் பிரகடனத்தை போன்று அது இருந்தது. குண்டு வெடிப்பின் நோக்கம் அதில் புரிந்தது.
பிந்திய நாட்களில், சிங்கள மக்களை முற்றிலும் கையில் எடுக்கும் வண்ணம் குருநாகலிலும், மினுவான்கொடயிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம் உயிர்கள் மற்றும் உடைமைகள் காவுகொள்ளப்பட்டன. தீவிரவாதிகளின் மீதான அடக்குமுறையைப் போன்று அதற்கு உருக்கொடுக்கப்பட்டது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற பிரச்சாரங்கள் உதய கமன்வில, ரத்ன தேரர், விமல் வீரவன்ச, மகிந்த ராஜபக்ச, மகிந்தானந்த அழுத்கமகே, கெஹலிய ரம்புக்வல, ஞானசார தேரர், மதுமாதவ அரவிந்த போன்றவர்களால் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அது இன்று முழு சிங்கள மக்கள் மத்தியிலும் விதைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் "தீவிரவாதிகள்" என்ற இந்த எண்ணப்பதிவை; சிங்களவர்கள் மத்தியிலிருந்து அகற்ற முடியாமல் போனால்; இந்த மண்ணில் நமது எதிர்கால சந்ததிகள் வாழ முடியாத நிலை ஏற்படும். "தேசிய பாதுகாப்பு" என்ற போர்வையில் நாம் தமிழர்களைப் போன்று அநியாயமாக நசுக்கப்படுவோம். நமக்கு அடிக்கும்போது ஏனென்று கேட்க நாதியற்றவர்களாகி விடுவோம். எனவே, தீவிரவாதிகள் என்ற முத்திரையை நாம் என்ன விலை கொடுத்தும் அழித்தே ஆக வேண்டும்.
அது தனித்து முஸ்லிம்களால் மட்டும் முடிந்த காரியமல்ல. சிங்கள மக்களின் பேராதரவை பெற்ற, சிறுபான்மை இனங்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய சிங்கள தலைமை ஒன்றோடு இணைந்தே அதனைச் செய்ய முடியும். அவ்வாறான தலைமையை முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று; முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக்கும் "மொட்டு" முகாமில் இருப்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. பௌத்த கடும்போக்குவாத சிந்தனையை ஊட்டி வளர்த்த கோட்டாபே ராஜபக்சவிடமும் எதிர்பார்க்க முடியாது. அனுரகுமார திசநாயக்க சிங்கள மக்களின் பேராதரவை பெறாதவர் என்ற ரீதியில் அவரும் அதற்குப் பொருத்தமானவரல்ல.
இருக்கின்ற தெரிவுகளில் சஜீத் பிரேமதாசவே இதற்குப் பொருத்தமானவர். அவரும், அவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாசவும் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கி இருக்கும் நற்பெயரினூடாக; முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற மனநிலையில் மாற்றங்கொண்டு வர முடியும். சஜீத் பிரேமதாச அதற்கான உறுதிமொழியையும் தந்திருக்கிறார். அவருக்கும் அவருடைய தந்தைக்கும், முஸ்லிம்களும் முஸ்லிம் காங்கிரஸும் செய்திருக்கும் கைங்கரியங்களுக்காக நன்றிக் கடனாக அதனைச் செய்ய அவர் முன்வந்திருக்கிறார்.
எனவே, இந்தத் தேர்தலை, முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி - அரசியல் லாபம் அடைய எண்ணும் சக்திகளைத் தோற்கடிக்க பயன்படுத்துவோம், அப்பாவி முஸ்லிம் சமூகம் மீண்டும் தலைநிமிர்ந்து வாழ வழிசமைக்க பயன்படுத்துவோம், நமது சந்ததிகள் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ விதி செய்யப் பயன்படுத்துவோம். சஜீத் பிரேமதாசவின் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து நமது சமூகத்தினதும் வெற்றியை உறுதி செய்வோம் என அவர் விளக்கமளித்துள்ளார்.
-SLMC
No comments:
Post a Comment