சமையல் எரிவாயு பதுக்கிய 31 வர்த்தகர்கள் கைது - sonakar.com

Post Top Ad

Thursday, 31 October 2019

சமையல் எரிவாயு பதுக்கிய 31 வர்த்தகர்கள் கைது



நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் காணப்படும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, இவ்வார இறுதிக்குள் நிறைவடையுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.


இத்தட்டுப்பாடு தொடர்பாக இரு பிரதான சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கும் வர்த்தக வாணிப அமைச்சுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்க உடன்பாடு காணப்பட்டதாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

கடந்த 4 ஆம் திகதி முதல் 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு 240 ரூபாவினால்  குறைக்கப்பட்டது. அதனையடுத்து, கடந்த சில தினங்களாக சந்தையில் சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகங்கொடுத்தனர்.

விலை குறைக்கப்பட்டதையடுத்து வியாபாரிகள் சமையல் எரிவாயுவுகளைப் பதுக்கிக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இது தொடர்பாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் முறையிடப்பட்டது.

சீரற்ற காலநிலை காரணமாக, சமையல் எரிவாயு கப்பல் வருவது தாமதமாவதாக கேஸ் கம்பனிகள் விளக்கமளித்திருந்தன. ஆனால், கையிருப்பிலுள்ள சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விடுமாறு வர்த்தக வாணிப அமைச்சு கம்பனிகளைக் கோரியுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமையாகும் போது சந்தையில் சமையல் எரிவாயு வழமை ​போல விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, மூன்று மாத காலத்திற்குத்​தேவையான கையிருப்பைப் பேணவும் கம்பனிகள் உடன்பட்டுள்ளதாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதுவரை சமையல் எரிவாயுக்களைப் பதுக்கிய 31 வர்த்தகர்கள் பிடிபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-ஐ. ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment