இலங்கைக்கும் - தமிழகத்துக்குமிடையிலான உறவின் புதிய அத்தியாயம் ஒன்று கடந்த வாரத்தில் கொழும்பில் ஆரம்பமானது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பில் இலங்கை வந்திருந்த தமிழகத்தின் அரசியல் தலைவர்களது விஜயத்துடன் இந்த உறவு ஆரம்பமானது என்று கூறலாம்.
தமிழ் தரப்பினால் நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக இலங்கைக்கும் தமிழகத்துக்குமான உறவு சீரானதாக இருக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் தமிழரது போராட்டத்தை மானசீகமாக ஆதரித்ததனால் தமிழகத்துக்கும் இலங்கைக்குமான உறவில் விரிசல்கள் காணப்பட்டன.
கடந்த சில தசாப்தங்களாக இலங்கை அரசியல்வாதிகளுக்கு தமிழகத்துக்கு செல்ல முடியாத நிலையே காணப்பட்டது. அதேபோன்று தான் தமிழகத்திலிருந்த இலங்கைக்கு அரசியல்வாதிகள் வருவது அபூர்வமாக இருந்தது.
நல்லாட்சி அரசு உருவான பின் இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிய போதும் நெருங்கிய உறவுகள் தளிரவில்லை. அண்மைக்காலமாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தமிழக அரசியல்வாதிகள், கலைஞர்கள் வரத் தொடரங்கியுள்ளனர்.
அமைச்சர் ரவூப் ஹக்கிமின் மகளின் திருமணத்துக்காக தமிழ்நாட்டிலிருந்து சுமார் 30 பேர் கொண்ட தூதுக்குழு ஒன்று வந்திருந்தது. இதில் அரசியல்வாதிகளும், கலைஞர்களும், ஊடகவியலாளர்களும் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் முக்கியமாக கலைஞர் கருணாநிதியின் மகளான பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியைக் குறிப்பிடலாம்.
கனிமொழி இந்த விஜயத்தின் போது மீனவர் பிரச்சினை குறித்து மீன்பிடித்துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் அமைச்சர் அமீர் அலியின் ஏற்பாட்டில் சந்தித்துரையாடினார். அது மட்டுமன்றி இந்தத் தூதுக்குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள், மீனவர் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர். திருமண நிகழ்வின்போது கனிமொழி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட அரசின் முக்கிய அமைச்சர்கள் பலரையும் சந்தித்துரையாடினார். இந்த கலந்துரையாடல்கள் இதற்கு முன் இடம்பெற்றதே இல்லை. அந்த வகையில் இந்த விஜயம் புதிய அத்தியாயத்துக்கான ஆரம்பம் என்று கூறுவதில் தவறு இருக்காது.
தமிழகத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி வந்த இந்தியாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவருமான பேராசிரியர் காதர் முகைதீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடத்திய இலங்கை - இந்திய உறவுப்பாலம் தொடர்பான கருத்தரங்கில் வலியுறுத்தியது போன்று தமிழக இலங்கை உறவு இரு தரப்பினருக்கும் முக்கியமானது.
தமிழகத்துக்கும் - இலங்கைக்குமான உறவை மேம்படுத்துவதில் தமிழ் நாட்டின் முஸ்லிம் தலைவர்களுக்குப் பெரும் பொறுப்புள்ளது. கடந்த சில தசாப்தங்களாக நிலவிய கசப்பான நிகழ்வுகளை மறந்து இரு தரப்பினருக்குமிடையே நல்லெண்ணத்தையும் நட்புறுவினையும் கட்டியெஐப்புவதில் தமிழகத்தின் முஸ்லிம்களுக்கு ஒரு முக்கிய பொறுப்புள்ளது. தமிழகத்திலுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல இயக்கங்கள் தமிழகத்துக்கும் இலங்கைப் பெரும்பான்மை மக்களுக்குமிடையே தடைப்பட்டிருக்கும் நல்லுறவினைக் கட்டியெழுப்புவதற்கு முன்வர வேண்டும். இது இரு நாட்டுக்கும் ஆரோக்கியமானதாக அமையும்.
-நவமணி
18.09.2019
No comments:
Post a Comment