நாட்டின் கல்வி துறையில் நான்கு ஆண்டுகளில் பாரியளவில் சேவை செய்ய முடிந்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டல் அதற்கு பக்கபலமாக இருந்ததாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இலங்கையின் இரண்டாவது மும்மொழி கல்வியுடன் கூடிய கலப்பு தேசிய பாடசாலையாக நிர்மாணிக்கப்படவுள்ள தொன் ஸ்டீவன் கல்லூரிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் மீரிகமயில் இன்று (20) அடிக்கல் நாட்டப்பட்டது. நாட்டின் சிறார்களின் பெருமளவிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அருகிலுள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் நடடிவக்கைகளின் முக்கியமான செயற்பாடாக இது அமைந்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் 1,142 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. 12 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த பாடசாலையில் திறன் வகுப்பறை உட்பட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன
இங்கு கல்வி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், தேசிய பாடசாலைகளின் இடை நிலைய வகுப்புக்களுக்கு மாணவர் வெற்றிடங்கள் 45,000 இருப்பதை நாம் இனங்கண்டுள்ளோம். தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் 15,000 வெற்றிடங்கள் உள்ளன. இதன்படி குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக முதற்கட்டமாக நேர்முகப் பரீட்சைகளில் தெரிவான 4000 மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு அடுத்த வாரம் இணைத்துக்கொள்ளவுள்ளோம்.
நகர பாடசாலைகளில் மாணவர்களுக்கு காணப்படும் இட நெருக்கடிகளை குறைத்து நகர பாடசாலைகளில் காணப்படும் அனைத்து வசதிகளையும் கிராமிய பாடசாலைகளுக்கும் வழங்குவதற்காக அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தை ஆரம்பித்ததுடன் அந்த திட்டத்தின் கீழ் புதிய தேசிய பாடசாலையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தேன் என்றார்.
-MOE
No comments:
Post a Comment