முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் விகாரை அமைத்து தங்கியிருந்து கொழும்பில் இறந்த மேதாலங்கார கீர்த்தி தேரர் அவர்களின் உடலை ஆலய வளாகத்தினுள் தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கியும் நீதிமன்றத் தீர்ப்பை பொருட்படுத்தாது அங்கு கூடியிருந்த பொது மக்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஆலய நிர்வாகத்தனர் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பையும் மீறி பிக்குவின் உடலை தகனம் செய்து இந்து மதத்தையும், அதன் பாரம்பரியங்களையும் அவமதிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்பட்ட இச் செயற்பாட்டை யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் வண்மையாகக் கண்டிக்கின்றது.
பொலிஸ் பாதுகாப்பு பிரிவினர் முன்னிலையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றிருப்பதானது மிகுந்த வேதனையையும், இலங்கையின் நீதித்துறையின் மீது அச்சத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நீதி மன்றத்தின் தீர்ப்பை மீறி செயற்பட்ட இந் நடவடிக்கைகளுக்கு அரசும், நீதித்துறையும் என்ன செய்யப்போகின்றது? இலங்கையில் சிறுபான்மை இனமான தமிழ் பேசும் மக்களுக்கு மாத்திரமா நீதித்துறையும் - நீதி மன்றங்களும் - தீர்ப்புக்களும்? இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றதா? பேரினவாதத்தை அரசு தொடர்ந்தும் கண்மூடித்தனமாக பார்த்துக் கொண்டிருக்கப்போகின்றதா? என்ற வினா சிறுபான்மை மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப்போகின்றா?
அண்மையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழ் - முஸ்லிம் நல் உறவில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக தமிழ் பேசும் மக்களை குறிவைத்து பல இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. தமிழ் பேசும் மக்களாக வடக்கு கிழக்கில் ஒன்றினைந்து பேரினவாதத்தை தோற்கடிக்க வேண்டியது குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் - முஸ்லிம் மக்களினதும், அரசியல் தலைவர்களினதும் பொறுப்பாக இருப்பதாக உணர்கின்றேன்.
தமிழ் பேசும் மக்களை கூறு போடும் பேரினவாதத்தின் முயற்சிகள் பல அரங்கேறியிருக்கின்றது. அவற்றில் சிலதை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். பயங்கரவாதிகளால் ஏப்ரலில் அரங்கேற்றப்பட்ட குண்டுத்தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் அதன் விளைவுகளையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் - முஸ்லிம் மக்களை குறிவைத்து பிரிப்பதற்கான ஆயுதமாக பேரினவாதிகள் பயன்படுத்தினர். இருப்பினும் தமிழ் பேசும் மக்களை பிரிக்க முடியாது போனது.
அடுத்து அண்மையில் இடம்பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம். ஏனெனில் சுமூகமாக தமிழ் முஸ்லிம் மக்கள் பேசித்தீர்மானித்திருக்க வேண்டிய விடயத்தை பேரினவாதிகள் கையிலெடுத்து தமிழ் மக்களுக்கு நன்மை செய்பவர்களாக தங்களை காண்பிக்க முயற்சித்து அதன் விளைவாக தமிழ் முஸ்லிம் மக்களை பிரிக்க திரை மறைவில் நாடகமொன்று அரங்கேற்றப்பட்டது. அதுவும் பிசுபிசுத்துப் போனது.
இவ்வாறாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களை கூறு போட முயற்சித்த சிங்களப் பேரினவாதிகளின் உண்மை முகம் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பிக்குவின் உடலை அடாத்தாக தகனம் செய்ததில் தற்பொழுது வெளுத்துவிட்டது என்றே கூற வேண்டும். எப்பொழுதும் இலங்கை சிறுபான்மை மக்களை (தமிழ் முஸ்லிம் மக்களை) தாக்குவதை இச் சிங்களப் பேரினவாதம் நிறுத்தப் போவதில்லை என்பதே உண்மை.
எனவே தமிழ் பேசும் மக்களாகிய நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது போன்று சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேரினவாதிகளால் ஏற்படுத்தப்படுகின்ற ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொள்ள தமிழ் பேசும் மக்களாக மொழியால் ஒன்று பட வேண்டிய காலகட்டத்தில் தற்பொழுது இருக்கின்றோம்.
ஆகவே தமிழ் பேசும் மக்கள் தமக்குள் உள்ள பிரச்சினைகளை ஆரோக்கியமாக பேசித்தீர்த்துக் கொண்டு பேரினவாதத்தின் தாக்குதல்களை எதிர்கொண்டு இலங்கையில் சுயத்துடன், சம அந்தஸ்தை பெற்று, எம்மை நாம் ஆளக்கூடிய அரசியல் தீர்வொன்றை பெற்று கௌரவமாக வாழவும் செம்மலை பிள்ளையார் கோவில் இடம்பெற்ற அநீதி போன்று இனி ஒருபோதும் நடக்காத வண்ணம் சிறுபான்மையினரின் பாரம்பரிய அடையாளங்கள், வழிபாட்டுத்தலங்கள், நிலங்கள் மற்றும் இருப்புக்களை பாதுகாக்க திடசங்கற்பம் எடுப்போமாக.
-என்.எம். அப்துல்லாஹ்
-என்.எம். அப்துல்லாஹ்
No comments:
Post a Comment