சுகாதார அமைச்சின் ஊடாக சுகாதார உதவியாளர் பதவிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பலரையும் ஏமாற்றி இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்ற குழுவினரைக் கைது செய்வது தொடர்பில், மருதானை மற்றும் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் பின்னணியில், இம்மோசடியுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் சுங்கப் பணியகத்தின் உதவியாளரொருவர், மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மத்திய பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சொய்ஸா தெரிவித்துள்ளார்.
மருதானை பொலிஸ் நிலையத்துக்கு நான்கு முறைப்பாடுகளும், புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளதாகவும், நிஷாந்த சொய்ஸா குறிப்பிட்டுள்ளார். இக்குழுவினர், 14 இலட்சம் ரூபா பணத்தை இவர்களிடமிருந்து மோசடி செய்துள்ளதாக முறைப்பாடுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இம்மோசடி நடவடிக்கைகள், திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், போலி நியமனக் கடிதங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சொய்ஸா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment