இன்று இலங்கையின் அரசியற் களத்தில் பேசுபொருளாக பரப்புரை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவித்தும் , அறிவிக்காமலும் பல சர்ச்சைகள் முன்வைக்கப்பட்டுகொண்டிருக்கின்றன. இதில் முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளாராக களம் இறங்குவது பற்றியும் முஸ்லிம் சமூகத்துக்கான பேரம் பேசும் சக்தி என்றொரு கதையாடலும் தொடக்கி வைக்கப்பட்டிருகின்றது. அது குறித்தான எமது பார்வையை செலுத்துவதே இக்கட்டுரையின் அடிப்படை நோக்கமாகும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முஸ்லிம்களுக்கு சாதகமானதென்றும் அந்தத் தேர்தல் சூழலில்தான் முஸ்லிம் சமூகத்துக்கு தேவையானவற்றை பேரம் பேசிக்கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கின்றது என்கின்ற கருத்தாடல் நம்மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகின்றது. ஆயினும், அதனூடாக முஸ்லிம் சமூகம் தமது பேரம் பேசுதலை முன்வைத்து சமூக நலன்களை அடைந்திருக்கின்றதா என்கின்ற ஒரு கேள்வியை நாம் எழுப்பி அதற்கான விடையை கண்டறிய வேண்டிய கட்டாயத்தை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நமக்கு உணர்த்தி நிற்கின்றது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
உண்மையில் இலங்கையின் இரண்டாம் குடியரசு யாப்பின் ஊடாக 1978களில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இன்றுவரை நமது நாட்டில் இருந்து வருகின்றது. இதற்கிடையில் சந்தித்த பல தேர்தல் களங்களில் இம்முறைமை முற்றாக ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி தேர்தல் களத்தை சூடாக்கி வெற்றி வாகை சூடிக்கொண்ட நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீடித்து வருவது நாமறிந்ததே.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்கின்ற போது அதற்கு முக்கிய காரணங்களாக முன்வைக்கப்பட்டவற்றில் நிலையான ஆட்சியின்றி திடீர் திடீரென ஒரு பாராளுமன்றத்தின் உரிய காலத்தை பூர்த்தி செய்யாத நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதும் அதனால் நிலையான அரசாங்கம் இல்லாமல் போவதினால், முழுமையாக நாட்டுக்கு தேவையான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கின்றது.
அதேநேரம் தேர்தலில் கட்சி மாறுகின்ற செயற்பாடுகளினாலும் அரசாங்கம் கவிழ்ந்து விடுகின்ற சூழல் தோற்றுவிக்கப்படுகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கட்சி மாறுதலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கட்சிகளுக்கு உரித்திருப்பதையும் நிலையான அபிவிருத்திகளுக்கும் அரசாங்கத்திற்கும் வலுவூட்டக்கூடியதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வழிவகுக்கும் என்ற கருத்துக்கு மாற்றுக்கருத்திருந்த போதிலும் , அவற்றினை கருத்தில் கொள்ளாது இரண்டாம் குடியரசு யாப்பு நிறைவேற்றி வைத்திருக்கின்றது.
இந்த நிலவரத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை நமது நாடு அடைந்திருக்கின்றதா என்று ஆராய்ந்தோமேயானால் இல்லை என்ற பதில் தெளிவாகவே நமக்கு கிடைக்கின்றது. ஏனெனில், இம்முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கூட கட்சி மாறுதல் , அரசாங்கம் இடையில் கலைதல் , நிலையான அபிவிருத்திகள் தடைப்படுதல் என்பன நடந்த வண்ணமே இருக்கின்றது. அத்தோடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படல் வேண்டும் என்கின்ற கருத்து இன்றுவரை முன்வைக்கப்பட்டு வருவதினாலும் இது மிகவும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
அப்படியானால், எதிர்பார்க்கப்பட்ட பலன்களை இது தரவில்லை என்பதினால், இதற்கு மாறான தேடல்களில் நமது கவனக்குவிப்புகளை செலுத்துவதுதான் சரியான அணுகுமுறைமையாக அமையும். அந்த வகையில் ஒரு அரசியற் கட்சியில் நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றால் அந்தப் பாராளுமன்றக் காலம் முடியும் வரை குறித்த கட்சியை விட்டு விலகிச் செல்லக்கூடாது என்கின்ற தெளிவான வாசகத்தின் ஊடாக சட்டம் ஆக்கப்படல் வேண்டும். இன்றிருக்கின்ற சட்டத்தில் காணப்படுகின்ற மயக்ககரமான சொற்கள் தவிர்க்கப்பட்டு சட்டமாக்கப்படுவதன் ஊடாகத்தான் கட்சி மாறுதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இதற்கு இன்றிருக்கின்ற ஒரு பொதுத்தேர்தலை அடுத்து அமைகின்ற அரசாங்கம் நான்கரை வருடங்களுக்கு மூன்றில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்காத நிலையில் கலைக்கப்படலாகாது என்கின்ற சட்டம் இருப்பதும் அரசாங்கம் இடையில் கவிழுகின்ற சூழலை தோற்றுவிக்காது வலுப்படுத்தும்.
இந்நிலையானது நிலையான அபிவிருத்திகளுக்கு தடையாக இராத சூழலை இலகுவாக ஏற்படுத்தித்தரும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகின்ற ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம் என்பதுதான் இது விடயத்தில் நிலையாக இதுவரை இருந்து வருகின்றது. இதில் இரண்டு தடவைகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக செயலாற்றியவர்களாக ஜே.ஆர்.ஜயவர்தன, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகிய மூவருமே காணப்படுகின்றனர்.
இவ்விருவர்களின் நடைமுறைகளை அவதானிக்கின்றபோது அவர்களின் இரண்டாம் கட்ட பதவிக்காலம் என்பது இலங்கையில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்கின்ற போக்கிலிருந்து விடுபட்டு பெரும் தேசியவாத சிந்தனையிலும் , பௌத்த-சிங்கள ஆதிக்க குணாம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டதையே நிரூபித்து நிற்கின்றன. இதனால், ஜனாதிபதியானவர் கட்சி சார்பில் வெற்றி பெற்ற போதிலும் அவர் அனைத்து சமூகங்களையும் சமநிலையில் நடத்துபவராக இருக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு நடைபெறாமலே போயிருக்கின்றது. இதனாலும் இம்முறைமையில் சில மாற்றங்களை வேண்டி நிற்பதை அது நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
இதற்கு மாற்று வழியாக ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதியாக கடமையாற்ற முடியும் என்றிருந்தால்தான் அவர் தமது அடுத்த வெற்றி நகர்வை பாதுகாத்து உறுதி செய்யும் வகையில் எல்லா மக்களினது நியாயங்களையும் ஓரளவேனும் ஏற்று மதிப்பளிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்நிலை இல்லையெனில், இம்முறைமையின் ஊடாக குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்கள் உரிய பயன்களை அடைந்து கொள்வதில் எப்போதும் ஒரு தடை இருந்தே வரும் என்பதில் ஐயமில்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் தமிழ் சமூகம், முஸ்லிம் சமூகம் பேரங்களை பேசி இதுவரை ஏதாவது சாதித்திருக்கின்றார்களா என்று பார்த்தால் அங்கும் வெறுமைதான் நமக்கு பதிலாக கிடைகின்றது. எத்தனை பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள்:, தீர்வுத்திட்டங்கள் என்று முடிவுறுத்தப்பட்டு முன்வைக்கப்பட்டு அதன் ஊடாக தேர்தல் வெற்றியை அடைந்த பின்னரும் கூட அவை எதுவும் நடைமுறைக்கு வராமல் செயலிழந்து போனதே வரலாறாகி இருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி இணக்கம் காணப்பட்ட எந்த தீர்வுகளும் இதுகாலவரை சாத்தியப்படவில்லை என்றால், இனிவரும் காலங்களில் மாத்திரம் அது ஏற்புடையதாக மாறி உரிய ஏற்றங்களையும், மாற்றங்களையும் நமக்கு தரும் என்று எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் நம்பிக்கை வைப்பதென்பதனையும் நாம் சிந்தித்தாக வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் 1988களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஆர்.பிரேமதாஸா உடன் ஓர் வாய்மொழி மூலமான இணக்கப்பாட்டிற்கு வந்ததன் அடிப்படையில் விகிதாசார தேர்தல் முறைமையில் காணப்பட்ட உறுப்புரிமையை பெறுவதற்கான தகுதிகாண் வெட்டுப்புள்ளியாக இருந்த 12.5 வீதத்தை 5 வீதமாக குறைத்தார் என்கின்ற தடயத்தை தவிர வேறென்னதான் நடந்திருக்கின்றது?
இது கூட தனியே முஸ்லிம்களுக்கு மட்டும் பிரயோசனப்படுகின்ற ஒன்று போன்ற பிரம்மையை கட்டமைத்துக்கொண்டாலும் அது பொதுவாக சிறிய கட்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு உபயோகமாகும். இதில் முஸ்லிம் கட்சிகள் சிறிய கட்சிகள் என்ற வகைக்குள் வருவதினால், இதன் அனுகூலங்களை அனுபவிக்கின்றனரே அன்றி தனியே முஸ்லிம்களுக்கு மாத்திரம் பயனுடையது என்று மட்டுப்படுத்த இயலாது.
இதுகாலவரை முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கென்று தங்களை அறிமுகம் செய்துகொண்டு வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட கடந்த சில ஜனாதிபதி தேர்தல்கள், பொதுத் தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்களில் கூட பல ஒப்பந்தங்களை செய்தவை. இதில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் 1994களில் எழுதிக்கொண்ட ஒப்பந்தமும் நம்மிடையே இருக்கின்றது
அஷ்ரஃபின் மரணத்திற்கு பின் அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீமின் காலத்திலும் பல்வேறு பேரங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேசப்பட்டு எழுத்து மூலமான ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டும், அவற்றில் கூறப்பட்டிருந்த வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், அம்பாரை மாவட்டத்திலான கரையோர மாவட்டம் உருவாக்குதல் போன்ற சாதாரண விடயங்கள் கூட நிறைவேற்றப்படாமல் இன்றுவரை இருந்து வருகின்றது. அவ்வாறானால், ஜனாதிபதி தேர்தலில் மாத்திரம் வலுவுடைய ஒப்பந்தங்களை எழுதிக்கொள்ள முடியும் என்கின்ற கருத்தும், எதிர்பார்ப்பும் வீணடிக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில் முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளாரக நிறுத்தி , அவருக்கு முஸ்லிம் வாக்குகளை கூட்டுமொத்தமாக அளித்தும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறைமையில் காணப்படுகின்ற இரண்டாம், மூன்றாம் தெரிவு அடிப்படையை பாவித்து சிங்கள மக்களின் பெரும்பாலான ஆதரவை பெறகூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரை இனங்கண்டு அவருக்கு தமது இரண்டாம் தெரிவு வாக்கை முஸ்லிம்கள் வழங்குவதின் ஊடாக தமது பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்த முடியும் என்கின்ற ஒரு கதையை முஸ்லிம் அரசியல்வாதிகளில் ஒரு சிலர் இன்று பேசவும், பகிரவும் தொடங்கியிருப்பதானது முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமான விளைவுகளை தருமா? என்பது ஒரு முக்கிய கேள்வியாகும்.
இதில் காணப்படக்கூடிய இரண்டு சிக்கலான விடயத்திற்கு தீர்வை அறிந்துகொள்வது அல்லது ஏற்படுத்துவது எப்படி என்பதில் நாம் பின்னடைவு அடையக்கூடிய ஒரு நிலையும் இருக்கின்றது. ஒன்று, அடிக்கடி கட்சி மாறுதலுக்கு தன்னை உட்படுத்தாத, முஸ்லிம் சமூகத்தின் மீதான அக்கறையை மாத்திரம் முதல் நிலையாகக் கொண்டு, எந்த விதமான அரசியல் விமர்சனத்திற்கும் உள்ளாகாத ஒர் முஸ்லிம் வேட்பாளரை அடையாளம் காண்பது. மற்றொன்று, அவர்பால் முஸ்லிம் மக்களின் அனைத்து பார்வையும் குவிக்கப்பட்டு ஆதரித்துக்கொள்கின்ற மனோ இயல்பில் நமது மக்களை திசைதிருப்புதல்.
இவ்விரண்டு கடின நிலைப்பாட்டிற்கு அப்பால் நமது நாட்டு வாக்காளர்களைப் பொறுத்தவரை தமது விருப்பை வெளிப்படுத்துவதற்கு பெரும்பாலானவர்கள் தெரிந்து வைத்திருப்பதும் , கடைப்பிடித்து வருவதும் புள்ளடி இடுவதேயாகும். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு சொல்லப்பட்டிருக்கின்ற ஒன்று, இரண்டு, மூன்று இலக்கங்களின் ஊடாக வாக்களிப்பது என்பது நடைமுறை ரீதியாக மக்கள்மயப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரவில்லை.
ஜனாதிபதி தேர்தல் முறைமை அறிமுகமான காலத்திலிருந்து இலக்கங்களால் வாக்களிக்கும் முறைமை இருந்தும் வழக்கத்தில் புள்ளடி இடுகின்ற வகையிலேயே வாக்களிப்பதை ஊக்கப்படுத்தியும் கட்சிகள் வந்திருப்பதினால் பலருக்கு இம்முறைமையை சொல்லுகின்ற போது வாக்களிப்பில் ஒரு தடுமாற்றம் ஏற்படலாம். நமது நாடு படிப்பறிவு மக்களை அதிகமாக கொண்ட நாடு. அதனால், இம்முறைமையை சொல்கின்ற போது மக்களால் முற்றாக புரிந்துகொள்ள முடியாது என்றும் கூற முடியாது.
எது எப்படி இருப்பினும், ஜனாதிபதி வேட்பாளாராக ஒரு முஸ்லிமை அடையாளம் காண்பதில் ஏற்படக்கூடிய சவால் பலமானதாகும். உதாரணமாக, மக்கள் விரும்பினால், நான் தயார் என பிரகடனம் செய்திருக்கின்ற முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வை எடுத்துக்கொண்டால், இவர் மீது பலத்த அரசியல் விமர்சனங்கள் இருக்கின்றன..
அதிலும் குறிப்பாக இவர் 2004களிலிருந்து மகிந்த , மைத்திரி போன்ற அணியினர்களோடு தமது அரசியல் உறவை இறுக்கமாகவும் நெருக்கமகவும் பேணி வந்தவர் என்பதினாலும் , தான் ஜனாதிபதி வேட்பாளராக வந்தால் தன் மீது வாக்களிக்கும் முஸ்லிம் மக்களின் இரண்டாவது தெரிவாக சிங்கள் மக்களின் பெரும்பாலானவர்களினால், ஆதரிக்கப்பட்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஒருவருக்கு பிரயோகிக்க வேண்டும் என்று கூறாது பெயர் குறித்தே கோத்தபாயா என சுட்டி இருப்பதிலிருந்தே இவர் மீதான விமர்சனங்கள் எழ தொடங்கிவிட்டன.
அதுமட்டுமன்றி முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி வேட்பாளருக்கு தயார் என்ற அறிவிப்பு வந்த உடனே ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பு மாபெரும் காட்டிக்கொடுப்பு என்ற கண்டன எச்சரிக்கை உடன் மேற்கிளம்பி இருக்கின்றது. அதுவும் தலை இருக்க வால் ஆடும் கதையாக முன்வைக்கப்பட்டிருப்பது ஹிஸ்புல்லாஹ்விற்கு சாதகமான நிலையைத் தோற்றுவிக்காது என்கின்ற பார்வையை இது தருகிறது எனலாம்.
இவ்வாறான கருத்தாடல்கள் முஸ்லிம்களின் நலனுக்கு உதவக்கூடிய அல்லது உவந்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வை அடையாளப்படுத்தி சந்தைப்படுத்துவது ஆரம்பத்திலேயே கடினமாகிவிடுவதை திட்டவட்டமாக குறித்துக் காட்டுகின்றது. பொதுவாக முஸ்லிம் அரசியல் களத்தில் இன்று பிரபல்யமாக அரசியலில் ஈடுபடுகின்ற எல்லோர் மீதும் ஏதோ ஒரு பெரும் தேசிய கட்சியின் ஆதரவாளர்களாக அடையாளப்படுத்தும் வகையில் தமது கடந்த கால நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களாக இருப்புக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய போக்கிற்கு மாறானவர்களை தேடியாக வேண்டும் என்பதை நம்மீது இன்றைய சூழல் கட்டாயப்படுத்தி வைக்கின்றது. இதுவொரு சாத்தியமான தேடல்களுக்குள் கை கொடுக்குமா? என்பதைத் தாண்டி நாம் ஒருவரை கண்டுபிடித்து ஜனாதிபதி வேட்பாளராக ஒரு முஸ்லிமை நிறுத்துகிறோம் என கொள்வோம். இனி இதன் அடுத்த கட்ட நகர்வு பாரிய சவலாக அமைவதற்கான அதிகரித்த சாத்தியம் இருப்பதனையே பின்வரும் நமது அரசியல் களம் உறுதி செய்யாதா என்பதை நிறுத்துப்பார்க்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கின்றது.
பேரம் பேசுதலுக்குட்படுகின்ற இரண்டு தரப்புகளிடமும் கைமாறக்கூடிய அடிப்படை இருக்க வேண்டும். உதாரணமாக ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை பெரும் தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களாக வருகின்றவர்களிடம் அடிப்படை வாக்கு வங்கி நிலையும் ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடிய பலமும் இருக்கும். இத்தகைவயவர்களோடு பேரத்தை பேசச் செல்கின்ற முஸ்லிம் தரப்புக்களிடம் ஆகக்குறைந்தது வாக்குப்பலமாவது இருந்தாக வேண்டும். இந்நிலையானது சடுதியாக தெரிகின்ற ஒன்றல்ல. மாறாக ஏற்கனவே காணப்பட வேண்டிய ஒரு பண்பாகும்.
முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துகின்றபோதே அவரின் வாக்குப்பலம் என்பது பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்கும். அது மட்டுமன்றி இவரது வாக்கிலிருக்கக்கூடிய இரண்டாம் தெரிவு வாக்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஒருவருக்கு வழங்குகின்ற நிலை என்பது வாக்கெண்ணும் நிலையங்களில் நடைபெறுவதாகும். அந்த நேரத்தில் பேரம் பேசிக்கொள்வதற்கான சாதகத்தை அது தராது ஏனெனில், அது வாக்கெண்ணும் முறைமைக்குள் அகப்படும் ஒன்றாக மாறிவிடும்.
ஆகவே , இந்நிலை இருப்பதினால் இதனூடாக இது ஒரு பேரம் பேசுவதற்கான வாய்ப்பென்று திடமாக கூற முடியாது. அதேநேரம் வாக்களிக்கும் காலம் நெருங்கும் சூழலில் கருத்துக்கணிப்பு, மக்கள் அலை எனக் கணித்து வெல்லுவதற்கு சாத்தியமான ஒருவரோடுதான் பேரம் பேசுதலை செய்ய வேண்டும். அப்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க கூடிய சாத்தியமுள்ளவரின் கடந்த கால முஸ்லிம் விரோத போக்குகளை கவனத்தில் எடுக்காத நிலை நமக்கு ஏற்படும். இதனையும் மீறி நாம் ஒப்பந்தங்களை மேற்கொண்டாலும் அவரது பதவிக்காலத்தின்போது நடைமுறைப்படுத்துவாரா என்பதும் நிச்சயமற்ற ஒன்றாகும்.
முஸ்லிம் மக்களின் பெரும்பகுதியினர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி என்பதை அடையாளப்படுத்துவதற்காகத் தனித்து களமிறங்க வேண்டிய தேவை இல்லை. இதற்கு நல்லதொரு உதாரணமாக இன்று ஜனாதிபதியாக வீற்றிருக்கும் மைத்திரிபால சிரிசேனவை தெரிவு செய்வதில் முஸ்லிம்களுக்கு பாரிய பங்கு இருந்தது என்பது மிக தெளிவானது. அப்படியிருந்தும் முஸ்லிம்களின் நலன் என்பதில் தனித்து அக்கறை காட்டவில்லை. இவ்வாறான பின்னடைவுகளும், ஆபத்துக்களும் இனி வரும் காலங்களிலும் இது ஒரு தொடர்கதையாக இருப்பதற்கான வாய்ப்புத்தான் இலங்கையின் தேசிய அரசியற் களம் இருக்கின்றது என்பதில் ஐயமில்லை.
முஸ்லிம் வேட்பாளராக வருபவரை இன்று நம் மத்தியில் இருக்கக்கூடிய பிரதான முஸ்லிம் கட்சி தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், அதாவுல்லாஹ் ஆகியோர்கள் இலகுவில் அங்கீகரித்து விடமாட்டார்கள் ஆதலால் இவர்களின் பின்னால் இருக்கக்கூடிய வாக்கு வங்கியை இலகுவில் உடைத்தெறிந்துவிட முடியாது. முஸ்லிம்களின் நலன்கள் என முன்வைக்கப்படக்கூடிய அம்பாரை மாவட்டத்தில் கரையோர மாவட்டத்தை உருவாக்கல், தீர்வுத்திட்டத்தில் தென்கிழக்கு அலகு, வடக்கு முஸ்லிம்களின் முழுமையான குடியேற்றம், காணிப்பிரச்சினை, இன நல்லுறவு சீர்குலைவு, மதவெறுப்புணர்வு போன்ற அடிப்படைகளை முன்னிறுத்துவதினால் ஒன்றுபடுதல் என்பதும் நடந்துவிடும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. ஏனெனில், தனித்தனியாகவும் இவர்களிடம் இவ்வாறான திட்டம் என்பது ஏலவே இவர்களிடம் இருக்கின்றது.
இவற்றுக்கப்பால், வடக்கு , கிழக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், தென்னிலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைக்கு இடையில் வேறுபாடுகள் இருப்பதுபோல் இருப்பியல்,, தொழிற்துறைக, வாழ்வுமுறை என்பன மாறுபட்டே காணப்படுகின்றன. இதனாலும், நாடுபூராகவும் வாழக்கூடிய முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஒரு முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதென்பதும் அதனூடாக இரண்டாம் தெரிவை ஜனாதிபதியாக வரக்கூடிய ஒருவருக்கு வழங்கி பேரம்பேசுதலின் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் நலன்களை பாதுகாக்கலாம் என்றும் நடைமுறைப்படுத்த முயல்வதும் ஒரு பொருத்தமான நிலைப்பாடு இல்லை என்பதையே கடந்த கால வரலாறுகள் சான்றுப்படுத்தியிருக்கின்றன.
ஆகவே, உபயோகம் குறைந்த பேரம் பேசுதல் என்ற தொனிப்பொருளில் தொடர்ந்தும் தங்கியிராது அதனூடாக எதிர்பார்க்கப்படுகின்ற பெறுபேறுகளை அடைந்துகொள்வதற்கான மாற்று வழியை நோக்கி பயணிக்க வேண்டிய அவசியத்தை நமக்கு அவசரப்படுத்தியிருக்கின்றது. இதற்கு இக்கட்டுரையில் முன் சொல்லப்பட்ட வழிகாட்டலை பின்பற்றி விரிவான திட்டங்களை வகுத்துக்கொள்வது அல்லது இதனைவிடவும் சரியான மாற்றுவழிகளை நோக்கிப் பயணிப்பதும் நமது முஸ்லிம் சமூகத்திற்கு விடிவைத்தரும் என்பதை தெளிவாக நம்பலாம்.
-எம்.எம்.எம்.நூறுல்ஹக்
-எம்.எம்.எம்.நூறுல்ஹக்
No comments:
Post a Comment