இன்று (01-09-2019) ஆம் திகதி காலை ஆங்கில நாளிதழ் ஒன்றில் “Niqab gradually returns amid uncertainty, police action” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. அவசரகாலச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நாட்டின் பேசு பொருளாக “நிகாப்” மீண்டும் மாறி இருக்கிறது. கடந்த வெள்ளிக் கிழமை நான்கு முஸ்லிம் பெண்கள் காலிமுகத் திடலில் நிகாப் அணிந்தமைக்காக விசாரிக்கப்பட்டமையே இவ்விடயம் மீண்டும் பேசுபொருளாக மாறுவதற்குக் காரணமாக அமைந்தது.
ஒரு நாட்டின் சிறந்த பிரஜையாக நடுநிலைமையுடன் சிந்திக்கின்ற பொழுது, நமது நாட்டின் பிரச்சினை ‘நிகாப்’ மட்டும்தானா என சிந்திக்கத் தூண்டுகிறது. ஒரு காலத்தில் சிங்கப்பூர் நாட்டின் முன்மாதிரியாக (Role Model) இலங்கை இருந்ததாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். இன்று சிங்கப்பூரின் கால்வாசியை நெருங்குவதே இமாலய இலக்காக மாறிக் கொண்டிருக்கிறது.
இணையத்தின் அபரிமித வளர்ச்சியினால் கட்டணங்களை கையடக்கத் தொலைபேசியில் செலுத்துகிறோம். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாசல் கதவிற்கு வர வைக்கிறோம். 5000 மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் முகம் பார்த்துப் பேசுகிறோம். வளர்ந்து விட்டதாகத் தம்பட்டம் அடிக்கிறோம். உண்மையில் வளர்ந்து விட்டோமா? அல்லது வளர்ந்து விட்டதாக Multiple Personality Disorder யில் இருக்கிறோமா?
இன்றையத் தேதியில் நன்கு வளர்ச்சி அடைந்த அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை எடுத்து நோக்குகையில் அவர்கள் வானளாவ உயர்ந்திருப்பது புரியும். உலகிலுள்ள நாடுகளை அபிவிருத்தி அடிப்படையில் தரப்படுத்தும் Human Development Index, GDP போன்ற பல சுட்டிகள் உண்டு. அபிவிருத்தி அடைந்த பல நாடுகளை இதில் முதல் இடங்களில் காண முடியும். இலங்கை நாடானது இத்தகைய சுட்டிகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது என்பதே மிகவும் மன வேதனைக்குரிய விடயமாகும்.
எமது நாடு இயற்கை எழில் பொருந்திய, நல்ல கல்வி நிலையைக் கொண்ட மிகவும் வளமான ஒரு நாடாகும். இயற்கை வளங்கள் எதுவுமற்ற சிங்கப்பூர் அபிவிருத்தியில் உலகில் முதற்தர வரிசைகளைப் பிடித்திருக்கிறதென்றால் எமது நாட்டினால் அந்த நிலையை அடைய முடியாதிருப்பது ஏன் என்பது ஒவ்வொரு பிரஜையினாலும் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.
உலகில் முன்னேற்றம் கண்ட நாடுகள் நிகாப் தொடர்பில் அல்லது இன்னுமொரு மார்க்கத்தின் ஒழுங்குகள் தொடர்பில் எத்தகைய நிலைப்பட்டினைக் கொண்டிருக்கின்றன என்று பார்ப்போம். ஆஸ்திரேலியாப் பாராளுமன்றத்தில் Senator Hanson என்பவரால் “புர்கா” தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது அங்கு பிரசன்னமாகி இருந்த ஆஸ்திரேலிய Attorney-General George Brandis அவர்களால் கடும் தொனியில் அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. “நிகாப்” சரி அல்லது பிழை எனும் தொனியில் அவர் பேசவில்லை. மாறாக, இன்னுமொருவரின் உரிமை எனும் அடிப்படையிலேயே அந்தக் கூற்று அமைந்திருந்தது. இது தொடர்பான காணொளியை பின்வரும் இணைப்பில் பார்க்க முடியும். (https://www.youtube.com/watch?v=XExggl6Q-vo)
ஆக, சக பிரஜைகளின் அபிலாஷைகளை, உணர்வுகளை, சுதந்திரங்களை, உரிமைகளை, விருப்புக்களை, கலாச்சார மாண்புகளை, நலன்புரியினை மதிக்கின்ற நாடுகள் துரிதமாக அபிவிருத்தி அடைந்திருக்கின்றன. பொதுவாக வளர்ந்த நாடுகள் இப்படியான விடயங்களை யோசிப்பதே இல்லை. அவர்களுக்கு அதற்கு நேரமும் இல்லை. சக மனிதர்களை, அவர்களின் கலாச்சாரங்களை மதிக்கின்ற நாடுகளே முன்னேறி இருக்கின்றன. காரணம் பல்லின நாட்டின் பல்துறை மக்களின் ஒருமித்த மனம் திறந்த தேசிய பங்களிப்பாகும்.
அப்படி அல்லாமல், இப்படியான சின்னச் சின்ன விடயங்களை பூதாகரமாக்கி அவற்றை ஆராய்ந்து கொண்டு, நேரத்தை வீணடித்துக் கொண்டு இருக்கின்ற தேசங்கள் அப்படியே நின்ற இடத்தில் பேசிப் பேசி நிற்கின்றன. இதில் இன்னும் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் இது தொடர்பில் நம்மைக் காட்டிக் கொடுக்க முற்படுவதாகும். ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பலத்த சவால்களுடன் வாழ்ந்து வருகின்றோம். எல்லோரும் சேர்ந்து எல்லோரையும் காப்பதே நமது தந்திரோபாயமாக இருக்க வேண்டுமே அன்றி நம்மை நாம் காட்டிக் கொடுப்பது நம்மை இன்னுமின்னும் வீழ்ச்சியுற வைக்கும் என்பது திண்ணம்.
என்ன செய்ய, அரைகுறை ஆடைகளை நாகரீகம் என்ற போர்வையில் அணிந்து திரிகின்ற விடயத்தை சத்தமில்லாமல் அனுமதிக்கின்ற சமூகத்தின் மத்தியில் தங்களை மறைத்துக் கொள்ள முயலும் சமூகமொன்றின் முயற்சி அசாதாரணமானதுதான். எப்படி இருப்பினும், ஆடைத் தெரிவு அவரவர் தனிப்பட்ட அடிப்படை உரிமை என்பதும் அதனை விமர்சிக்கும் உரிமை இன்னுமொருவருக்கு இல்லை என்பதும் ஆணித்தரமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.
-F.H.A. Amjads
No comments:
Post a Comment