
முல்லைத்தீவில் நேற்றைய தினம் நீதிமன்ற உத்தரவையும் மீறி இறந்த தேரர் ஒருவரது உடலத்தை இந்து கோயில் வளாகத்தில் தகனம் செய்த சம்பவத்தின் பின்னணியில் ஞானசார மற்றும் கடும்போக்குவாதிகளை கைது செய்யக் கோரி வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
நீண்ட நாட்களாக கோயில் நிர்வாக சபையுடன் சர்ச்சையை வளர்த்திருந்த குறித்த தேரர் புற்று நோய் காரணமாக கொழும்பில் உயிரிழந்திருந்தார். எனினும் அவரது உடலத்தை அங்கு தான் எரிக்க வேண்டும் என கடும்போக்குவாதிகள் சர்ச்சையை உருவாக்கியிருந்த நிலையில் வேறு ஒரு இடத்தில் எரிக்க உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம்.


இந்நிலையில், தீர்ப்பை உதாசீனம் செய்த ஞானசார குழு கோயில் வளவிலேயே உடலைத் தகனம் செய்ததோடு இதன் போது ஏற்பட்ட முறுகலில் பூசாரி ஒருவர் உட்பட பொதுமக்கள் பொலிசாரின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே இன்று காலை 11 மணியளவில் இவ்வாறு ஆர்ப்பாட்டம் ஏற்பாடாகியிருந்தமையும் நீதிமன்றத் தீர்ப்புக்கு மேலாக 'சங்க சபா' தீர்மானித்ததற்கிணங்கவே தாம் உடலை அந்த இடத்தில் எரித்ததாக ஞானசார விளக்கமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment