2020 ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மை சமூகங்களின் தெரிவுகளும் - sonakar.com

Post Top Ad

Sunday, 8 September 2019

2020 ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மை சமூகங்களின் தெரிவுகளும்


சுதந்திரக் கட்சியின் 68வது மா நாட்டில் நேரம் வரும் போது சரியான தீர்மானத்தை எடுப்பதாக கோதாவுக்கும் சஜித்துக்கும் ஒரு எதிர்பார்ப்பைக் கொடுத்திருக்கின்றார் ஜனாதிபதி மைத்திரி. தற்போதய சு.கட்சியின் பெருமானம் பற்றி நாம் ஏற்கெனவே பல முறை பேசி இருக்கின்றோம். மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியாமல் போனதற்கு முழுக்காரணம் பிரதமர் ரணிலே என்றும் அவர் அங்கு சாடி இருக்கின்றார். 


பிணைமுறி கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் கடிதங்கள் தயார் என்றும் ஜனாதிபதி பேசினார். ரணில் விவகாரத்தில் மைத்திரி கோபம் தனிந்ததாகத் தெரியவில்லை. இதற்கிடையில் வரும் செப்.15-ஒக்.15 இடையில் வேட்புமனு. நவ.10-திச.08 இடையில் ஜனாதிபதித் தேர்தல் என்று கூறுகின்றது தேர்தல் ஆணைக்குழு. அப்படியானால் கொள்ளையர்களைப் பிடிக்க மைத்தரிக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்று நாம் கேட்காமல் இருக்க முடியுமா.? சு.கட்சி மீண்டும் தமது கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பற்றிப் பேசுகின்றது. இது பேரம் பேசுகின்ற நடாகம்.சு.கட்சிக்குள் ஆதரிப்பவர் தொடர்ப்பில் மைத்திரிக்கும் சந்திரிக்காவுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன.

குருனாகலையில் நடக்கின்ற சஜித் கூட்டத்திற்கு எவரும் போகக் கூடாது என்று ரணில் கண்டிப்பான உத்தரவு போட்டாலும் அவை எதையும் கண்டுகொள்ளாமல் பெரும் தொகையான கட்சிக்காரர்கள் அங்கு போய் நமது வேட்பாளர் சஜித்தான் என்று உறுதி செய்திருக்கின்றார்கள். அதே போன்று என்ன ஒழுக்காற்று நடவடிக்கைகள் வேண்டுமானாலும் எடுக்கட்டும் என்று  மேடையேறினார்கள் பெரும் எண்ணிக்கையான பாராளுமன்ற உறுப்பினர்கள். இது ரணிலுக்குப் பெறுத்த அவமானமும் அரசியல் பின்னடைவுமாகும். 

நாடு விடுதலை பெற்று 71 வருடங்கள். இங்கு முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 1947ல் நடைபெற்றிருக்கின்றது. அன்று முதல் இன்று வரை ஐ.தே.க.வும் ஸ்ரீ.ல.சு.க.வும் மாறி மாறி நாட்டை ஆட்சி செய்து வந்திருக்கின்றன. அப்போதிருந்தே இவர்கள் நமக்குச் சொல்லி வருகின்ற கதைதான் நாட்டை சுவர்க்கபுரியாக மாற்றித் தருகின்றோம் என்ற ஒரே கதைதான். அவர்களே சிங்கப்பூர் எங்களைவிட எவ்வளவோ பின்தள்ளி இருந்தது. 1960களில் இலங்கைபோல் நாம் வளரவேண்டும் என்று சிங்கப்பூர் தலைவர்கள் சென்னார்களாம்.! என்று இங்கு பரவலாக சொல்லிக் கொள்கின்றார்கள். 

உண்மையில் சிங்கப்பூர் தலைவர்கள் எவராவது அப்படிப்பேசி இருந்தார்களா என்று எங்களுக்குத் தெரியாது. 1980களின் பின்னர் போர்தான் நாட்டைப் பின்னுக்கு தள்ளிப்போட்டது. அது நடந்திருக்காது போனால், நாமும் முன்னோறி இருப்போம் என்றும் இவர்கள் சில காலம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் கதைகளையும் நாமும் எமது இளைய தலைமுறையுனரும் கேட்டுத்தான் வந்திருக்கின்றோம்.

மஹிந்த போரை முடிவுக்கு கொண்டுவந்தார் மக்கள் பலகாரமும் பாச்சோரும் தெருவில் சமைத்தார்கள். நாடே விழாக்கோலம் பூண்டது. இப்போது எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டது. நமது சந்ததியினருக்கு வளமான வாழ்வு நல்லதொரு எதிர்காலம் பிறக்கப்போகின்றது. என்று எல்லோரும் கனவு கண்டார்கள். எதிர் பார்த்த அந்த வாழ்வும் நமக்கு கிடைக்கவில்லை. 

நாட்டில் குடும்ப ஆட்சியும் அராஜகமும்தான் நடந்தது. பொது மக்கள் பணத்தைத்தான் ஒரு குடும்பம் சூரையாடி விட்டது, என்று கூறி நமக்கு நல்லாட்சி தருவதாகவும், இனப்பிரச்சினைக்கு தீர்வும் நிம்மதியான வாழ்வும் தருவதாக  சொல்லி மைத்திரி-ரணில் நமக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி சிறுபான்மை சமூகங்கள் இந்த ஆட்சியைக் கொண்டு வருவதில் 90முதல்94 சதவீதம் அளவில் வாக்குகளை அவர்களுக்குக் கொட்டினார்கள்.  

நல்லாட்சி பண்ண வந்தவர்கள் வந்த வேகத்திலே மத்திய வங்கியிலுள்ள பணதைப் பட்டப் பகலில் கொள்ளையடித்தார்கள். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல நல்லாட்சி முகத்தில் கறியைப் பூசிக் கொண்டது. மைத்திரி-ரணில் பிளவு. கொள்ளையடித்தவர் தப்பி ஓடிவிட்டார். அதில் பங்கு வாங்கிக் கொண்டவர்கள் இன்னும் தமது அரசியல் அரங்கில் வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

வழக்கம் போல் சிறுபான்மை சமூகங்கள் தமது தலைமைகளை நம்பி இவர்களுக்காக தமது பிரதேசங்களில் மேடை போட்டார்கள் கொடி கட்டினார்கள் ஆரவாரம் பண்ணினார்கள். இன்று நமக்கு அந்த வாக்குறுதிகளைத் தந்த நல்லாட்சிக்காரர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகின்ற நிலை. வாக்குறுதிகளை நமக்குத் தந்த மைத்திரி-ரணில் அரசியல் எதிர்காலம் கூட முடிவுக்கு வந்திருக்கின்றது?. அவர்களே தமது பிழைப்புக்காக தெருவின் நிற்க்கின்ற இந்த கடைசி நேரத்தில், நமது விமோசனத்துக்கு அவர்களை நம்பி இதன் பின்னரும் அவர்கள் பின்னால் அழைவது எந்த வகையில் ஏற்புடையது என்று நமது தலைவர்களிடமும் சமூகத்திடமும் கேட்க வேண்டி இருக்கின்றது.

பேரினப் பலத்தில் ராஜபக்ஸ தரப்பினர் மோடி பாணியில் அதிகாரத்துக்கு வர முனைகின்றார்கள். ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகங்களும் இவர்கள் தரப்பிலிருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு நிறுத்தப்பட்டிருக்கின்ற கோதா மீது பெருத்த சந்தேகத்தில் இருக்கின்றார்கள். அதே நேரம் எங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் இனப்பிரச்சினைக்கு எப்படித் தீர்வை எதிர்பார்க்கப் போகின்றீர்கள் என்று ஒரு கேள்வியை சில தினங்களுக்கு முன்னர் கேட்டிருந்தார் மஹிந்த. அந்த வார்த்தையில் ஒரு அச்சுறுத்தலும்-தீர்வு கிடையாது என்ற எச்சரிக்கையும் உள்ளடங்கி இருக்கின்றது.

கோதாவுக்கு வேட்டுப் போட்டால்தான் சிங்களவர்கள் முஸ்லிம் கடைகளிலில் பொருள் வாங்க வருவார்கள் என்று கூறுகின்றார் விமல் வீரவன்ச. இதுவும் ஒரு அச்சுருத்தால் என்று குறிப்பிடுவதுடன் இந்தக் கோஷத்தை முன்னெடுத்தச் செல்பவர்களும்-வழிநடாத்துபவர்களும் இவர்கள்தான் என்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது. இன்னும் சிறுபான்மை சமூகத்தினரை ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத் திட்டங்களையோ, அரவணைத்துக் போவதற்கான மனநிலையையோ இவர்களிடம் இல்லை என்பதும் தெரிகின்றது. அச்சுறுத்தி வாக்குகளைக் கேட்க்கின்ற பாணியில்தான் அவர்களது அனுகுமுறைகள் சிறுபான்மை விடயத்தில் இருந்து வருகின்றது. 

71 வருடங்களாக பெரும்பான்மை மக்கள் மட்டுமல்லாது சிறுபான்மை சமூகங்களும் வாக்குறுதி மழைகளினால் நணைந்து போய் இன்று அரசியல் நிமோனியாவால் கடும் பாதிப்புக்களுக்கு இலக்காகி இருக்கின்றார்கள். பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அச்சுறுத்தல், துன்புறுத்தல்கள் உரிமைகள் பறிபோய் இருக்கின்றது என்று சொல்லிக் கொள்வதற்கு எதுவும் இல்லை. ஆனால் சிறுபன்மை மக்கள் மீது அடக்கு முறை, ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள், துன்புருத்தல்கள் என்று தொடர்ந்து கொண்டே போகின்றது. அனோகமாக இவை அரச அனுசரணையுடன் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன என்பது வெளிப்படை.

இதற்குப் பின்னரும் எம்மை காலம் காலம் ஏமாற்றியவர்களினால் எமக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை-அதற்கான வாய்ப்புக்களும் இல்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே இவர்களுக்கு அரசியல் ரீதியாக ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க ஏன் சிறுபான்மை தலைமைகள்-சமூகங்கள் முனையக் கூடாது என்று நாம் கேள்ளி எழுப்புகின்றோம்.

இனப்பிரச்சினை என்று ஒன்று இருக்கின்றதா? அதனைத்தான் நாம் யுத்த வெற்றியில் தீர்த்துப் போட்டோமே! யாருக்கு தன்னாட்சி, யாருக்கு தனி அலகு அப்படி எல்லாம் இந்த நாட்டில் எதுவும் கிடையாது.! வாய்திறக்கவும் கூடாது.! என்ற நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். அப்படி இருந்தால் தருகின்றோம் என்று அரசியல் தலைவர்கள் பகட்டுக்குச் சொல்வார்கள். அதனைக் கொடுக்கக்கூடாது என்றும் அதே ஆட்சியாளர்கள் வீதியில் இறங்கி அட்டகாசம் பண்ணவும் அடி ஆட்களை தயார்நிலையில் வைத்திருக்கின்றார்கள். அதுதான் இங்கு நடக்கின்றது.

பேச்சு வார்த்தை, அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் எல்லாமே நாம் பார்த்து விட்டோம். இப்போது பேச்சுவார்த்தை இனக்கப்பாடு என்று ஏழு தசாப்தங்களுக்குப் பின் நாம் இருந்த இடத்திற்குத்தான் மீண்டும் வந்திருக்கின்றோம். இது அழுத்துப்போன ஒரு நிலை. எனவே தற்போது நாட்டிலுள்ள அரசியல் பின்னணயில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு இது நல்ல தரணம்.

நாம் இங்கு குறிப்பிடுகின்ற அதிர்ச்சி வைத்தியம் தொடர்ப்பில் பல அனுகுமுறைகள் இருக்கின்றன. அத்துடன் இங்கு முன்வைக்கின்ற விடயங்கள் தொடர்ப்பில் கடுமையான விமர்சனங்களுக்கும் இடமிருக்கின்றது என்பதும் எங்களுக்கத் தெரிந்ந விடயம்தான். அது எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப்போகட்டும். நாம் எமது கருத்தை முன்வைப்போம்.

இந்த நாட்டிலுள்ள பழைய கட்சிகளாக ஐ.தே.க.வும், சுதந்திரக் கட்சியும் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றன. பேரின சமூகத்தின்  செல்வாக்குடன் புதிதாக தோன்றி இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற மொட்டுக்கள் அணி இந்த நாட்டில் பெரும் செல்வாக்கச் செலுத்துகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நடக்கின்ற உட்கட்சி மோதல்களினால் அந்தக் கட்சி மீது மக்கள் நம்பிக்கையில்லாத நிலையிலும் மொட்டுக்கள் அணிக்கு எதிரான பிரதான போட்டியாளராக சஜித் வருவார் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது. சு.கட்சி என்னதான் வீராப்புப்பேசினாலும் அந்தக் கட்சியிலிருந்து ஒருவர் ஜனாதிபதி தேர்தலுக்கு வருவதும் வாக்குப் பொறுவதும் சாத்தியம் இல்லாத விடயம்.

ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளராக யார் களமிறங்கினாலும் அவர்களின் பரப்புரைகள் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் எடுபடப் போகின்றது என்று தெரியாது. பலமான மொட்டுக்கள் வேட்பாளர் கோதாவுக்கு எதிராக பரப்புரைகளை இந்தத் தேர்தலிலும் ஜேவிபியால் மட்டுமே முன்னெடுக்க முடியும். அதனை அவர்கள் செய்வார்கள். இது அவர்களுக்கு வாக்குகளைக் கொண்டு வந்து சேர்க்குமா என்பது வேறு விடயம். இன்னும் பலபேர் 2020 ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க இருக்கின்றார்கள் அவர்களைப் பற்றி நாம் இங்கு பேசுவது அவசியமில்லாத விடயம். 

சிறுபான்மை சமூகங்களின் சார்ப்பில் வேட்பாளர்கள் என்று உச்சரிக்கப்பட்டு வந்தாலும் அவர்கள் எந்தளவு வாக்குகளைப் பெறப்போகின்றார்கள்.? என்ன நியாயாங்களைச் சொல்லி அரங்கிற்கு வரப்போகின்றார்கள் என்பது தெளிவில்லை. இப்படி கடந்த காலங்களில் தமிழர்களும் முஸ்லிம்  வந்திருக்கின்றார்கள். பெரிதாக சாதிக்க முடியவில்லை. அவர்கள் தமக்கென ஒரு பிரபலம் தேட வந்தவர்கள். சமூகம் அவர்களைக் களமிறக்கவுமில்லை. ஏற்றுக் கொள்ளவுமில்லை.

இன்று வடக்கு,கிழக்கில் அரசியல் செய்பவர்கள் சம்பந்தர் தலைமையிலான அணியும் முன்னாள் வடக்கு முதல்வர் விக்ணேஷ்வரர் தலைமையிலான அணியும் அவர்களுடன் இணைந்திருக்கின்ற சிறுகட்சிகளும், 2020 ஜனாதிபத் தேர்தலில் பிரதான வேட்பளர்களுடன் தமிழ் மக்களுக்காக எந்த வாக்குறுதிகளையும் யாரும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படித்தான் பெற்றுக் கொண்டாலும் தேர்தலுக்குப் பின்னர் அதற்கு என்ன நடக்கும் என்பதும் தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

முஸ்லிம் அரசியலைப் பார்க்கின்ற போது ஹக்கீமும், ரிஷாடும்தான் முக்கிய தலைவர்கள். தெற்கில் பேரினக் கட்சிகளில் முஸ்லிம் அரசியில் தலைவர்கள் இருந்தாலும் அஷ்ரஃப் வருகைக்குப் பின்னர் முஸ்லிம் அரசியலில் அவர்கள் செல்லாக் காசாகி விட்டார்கள்.

மலையகத்தைப் பொருத்தளவில் சில வருடங்களுக்கு முன் ஏக அதிகாரங்களையும் தன்வசப்படுத்தி இருந்த தொண்டாக்கள் தற்போது அங்கு முத்தரப்பு அரசியல் கூட்டணியின் சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. ஜூனியர் தொண்டா எதிர் கூட்டணி யானைக் கூட்டணியில் இணைந்து சாதிக்க முனைகின்றது.

இந்த நாட்டிலுள்ள கிருஷ்தவ சமூகத்தினர் சிங்ளவர்களாயிருந்தாலும் தமிழர்களாயிருந்தாலும் அவர்கள் கடந்த காலங்களில் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கின்ற கூட்டமாகவே இருந்து வந்திருக்கின்றது. இதற்கு நல்ல உதாரணம் கம்பஹ மாவட்டத் தேர்தல் முடிவுகளாகும். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சிங்கள கிருஷ்தவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எமது ஆய்வுகள் சொல்கின்றன.

சிபாரிசுகள்!

இது ஜனநாயக நாடு இங்கு யார் வேண்டுமானாலும் கட்சிகளை வைத்திருக்கலாம். யார் வேண்டுமானாலும் தேர்தல்களில் நிற்கலாம் என்று சொன்னாலும் பிரதான கட்சிகளின் ஊடாக ஒரு தமிழனோ முஸ்லிமோ ஜனாதிபதித் தேர்தலில் நிற்கமுடியாது என்பது யார்த்த நிலை. நாட்டில் ஜனாதிபதியாக வருகின்ற ஒருவர் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகள் பெற வேண்டும் என்ற விதியும், இந்த இலக்கு எட்டப்படாது சமயம் இரண்டாம் தெரிவு என்று ஒரு விவகாரமும் இருக்கின்றது. இரண்டாம் தெரிவு என்ற இன்னும் மக்கள் நேரடியாக அனுபவப்படாத (விருப்பு:1,2,3.) விடயத்தில் பேரம் பேசலுக்கும் நல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றன. இது விடயத்தில் சமூகம் முதிர்ச்சி பெறவில்லை-தெளிவு பெறவில்லை என்பது எமது கருத்து. இதனை நமது அரசியல், வெகுஜன இயக்கங்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இப்போது நாம் முன்வைக்கின்ற இந்த அதிர்ச்சி வைத்தியம் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் தனித்தோ அல்லது கூட்டாகவோ தமது பலத்தை காட்ட முடியும். 


தெரிவு-1 சிறுபான்மை கூட்டு

நமது வாக்காளர்களில் 47 இலட்சம் பேர் சிறுபான்மையினர். இது மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் அளவில். சிறுபான்மை சமூகங்கள் ஐக்கியப்பட்டு ஒரு வேட்பாளரை களமிறக்கி தமது வாக்குப் பலத்தை காட்சிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டாலும். ஆம் இது நல்ல கருத்துத்தான் என்று சொல்பவர்கள் கூட வாக்குச் சாவடிக்குப்போய் அதனைச் செய்ய மாட்டார்கள் என்பதும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். அத்துடன் நாம் சொல்கின்ற இந்த தமிழ் முஸ்லிம்களிடத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தலைவர் நம்மத்தியில் இல்லை. அப்படி இருந்தாலும் சமூகங்களிடம் நல்லுறவு எந்தளவுக்கு இருக்கின்றது என்பதும் கேள்விக்குறி. 

தெரிவு-2 தனித்துக் களமிறங்கள்

அடுத்த தெரிவாக: அப்படியானால் தத்தமது சமூகங்களில் உள்ளவர்கள் ஐக்கியப்பட்டு தமது சமூகங்கள் சார்பில் செல்வாக்கான வேட்பாளர்களாகக் களமிறக்க முடியும். ஆரம்பத்தில்  இப்படி சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. என்றாலும் அது தற்போது அடங்கி இருக்கின்றது. எனவே இதுவும் பேச்சளவில்தான் இருக்கின்றது. தனி நபர்களாக சமூகத்தின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு வாக்குகளை எந்த வேட்பாளரும் பெறமுடியாது அவர்களுக்கு சமூகம் அங்கிகாரம் கொடுக்கவும் மாட்டாது என்பது தெளிவு. அப்படி களத்தில் இறக்கிவிடப்படுபவருக்கு அரசியல் கட்சிகளினதும் சிவில் சமூகங்களினதும் சமூக, மதத் தலைவர்களின் ஒட்டு மொத்த ஆதரவும் தேவைப்படும். இப்படிப்பட்டவர்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களில் இருக்கின்றார்களா?

தெரிவு-3 மூன்றாம் தரப்பை ஆதரித்தல்

இது வரையும் எங்களுக்கு வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றி வந்திருக்கின்றீர்கள். இந்து முறை நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்றுத் தருகின்றோம் என்ற ரீதியில் ஒரு கடும்போக்குத் தீர்மானத்தைக்கூட எடுத்து பிரதான வேட்பாளர்களைத் தவிர்த்து மற்றொருவரை ஆதரித்து அவர் கரத்தை பலப்படுத்தி இலங்கை அரசியலில் ஒரு அதிர்ச்சியான செய்தியை உலகம் பார்க்கச் செய்ய முடியும். இன்று பிரதான வேட்பாளர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களை மண்கவ்வும் செய்ய முடியும்.

எமது பிரதான சிபார்சுகள் இப்படி இருந்தாலும், நாம் முன்வைக்கின்ற விடயங்களுக்கு சிறுபான்மை சமூகங்களின் பெயரில் அரசியல் கட்சி வைத்திருப்பவர்கள் இதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள்.  அடுத்த பொதுத் தேர்தலில் நாடளுமன்றம் போக பிரதான கட்சிகளுக்கு வால் பிடிப்பதில் அவர்கள் ஆர்வமாக இருப்பதால் சமூகத்தின் பேரால் இப்படியான தீர்மானங்களை எடுக்க அவர்கள் தயாரில்லை என்பதும் தெளிவான விடயம் தான்.

தெரிவு-4 தனிமனித அதிரடி

பிரதான பேரின அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் நம்மை ஏமாற்றியவர்கள். எமக்கு உரிமைகள் பெற்றுத் தருவதாகக்  வாக்குகளைக் கொள்ளையடிக்கின்ற நமது சமூகக் கட்சிகளும் சொன்னபடி எதையும் செய்யவில்லை என்ற நிலையில் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளுக்கும் தனிமனிதனாக சிந்தித்து நாம் மேற்சொன்ன ஏதாவது ஒரு தெரிவை மேற்கொண்டு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுப்பது. இது தனிமனித அரசியல் அதிரடியாகவும் இருக்கும். இதற்கு கட்சிகளோ தலைமைகளோ அவசியப்படாது நல்ல அரசியல் தெளிவு மட்டும் இருந்தால் போதும்.

விரக்தி நிலையில் சமூகம் இப்படியான முடிவுகளை எடுத்து அரசியல் தலைமைகளுக்கு ஒரு பாடம் புகட்டுவது எந்த வகையிலும் தப்பே கிடையாது என்பது எமது கருத்து. குறைந்தது இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு செய்தியை உலகிற்குக் கொடுத்தோம் என்று அத்ம திருப்திகூட இதனால் ஏற்பட இடமிருக்கின்றது. எமது கருத்துக்கள் தொடர்பில் சமூகம் சிந்திக்கலாம். சுதந்திரமாக விமர்சிக்கலாம். குட்டக் குட்டக் குனிபவனாக தொடர்ந்தும் வாழ்வதா? ஏமாற்ற ஏமாற்ற தொடர்ந்தும் ஏமாளியாகவே மடிவதா?

-நஜீப் பின் கபூர்




No comments:

Post a Comment