முஸ்லிம் MPக்கள் எப்போதும் ஜம்மியாவை மீறி செயற்பட்டதில்லை: ரிசாத் - sonakar.com

Post Top Ad

Monday, 5 August 2019

முஸ்லிம் MPக்கள் எப்போதும் ஜம்மியாவை மீறி செயற்பட்டதில்லை: ரிசாத்



முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது  தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின்றி எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மேற்கொண்டதில்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.



கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் இணைந்து தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசலில் நேற்று (04)  நடாத்திய விசேட மாநாட்டில் உரையாற்றிய போது அமைச்சர் மேலும் கூறியதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட அச்சம்,மன உளைச்சல்கள்  மற்றும் பாதிப்புக்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பௌசியின் வீட்டில் பல நாட்களாக  ,பல மணித்தியாலங்கள் அமர்ந்து பேசியிருக்கின்றோம். ஜம்யத்துல் உலமாவுடன் பல தடவைகள் கலந்துரையாடியிருக்கின்றோம் , அரசியல் வாதிகள் சமூக பிரச்சினைகளை தீர்க்காமல் வெறுமனே  பார்த்துக்கொண்டிருக்கிறார்களென உங்களில் யாராவது நினைத்தால் அது தவறானது , உரிமைகளையும் அடையாளங்களையும் இழந்துவிடுவோமா என்ற அச்சம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது போன்று எமக்கும் இருக்கின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலைக்கு நான் சென்றிருந்த போது உலமாக்களில் சிலர் "எமது உரிமைகளை பறிக்க இடமளித்து விடாதீர்கள் என்று கண்ணீர் ததும்ப தெரிவித்தனர்.இவ்வாறான அச்சம் நாட்டில் பரவலாக காணப்படுகின்றது. சமூகவலைத்தளங்களின்  தாக்கமும் இதிலுள்ளதா ? என்ற கேள்வியும் எழுகின்றது.

அமைச்சுப்பதவிகளை மீண்டும் பொறுப்பேற்று அடுத்த நாள் காலை 7;30 க்கு இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்திற்கு சென்றபோது ,நிகாப் தடை தொடர்பில்  அமைச்சரவை பத்திரத்தில் சேர்க்கப்பட்டிருந்ததை காண முடிந்தது. அமைச்சரவை பத்திர நகலை படித்துப்பார்ப்பதற்கு எங்களுக்கு அவகாசம் கிடைத்திருக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் 03ம் திகதி அமைச்சர் தலதா அத்துகோரளையுடன் பேசினேன்.இந்த பத்திரத்தை சிறிது காலத்திற்கு நிறுத்திவைக்க முடியுமா என கோரிய போது, ஜனாதிபதி அவசரப்படுத்துவதாக கூறினார். அவசரகால சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த தடை, அந்த சட்டம் நீக்கப்பட்டால் இயல்பாகவே காலாவதியாகிவிடும் என்பதாலும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அது அனுப்பப்பட்டு பாராளுமன்றத்தில் சட்டமாகுவதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தேவைப்படுமெனவும் தெரிவித்தார். எனவே இது தொடர்பில் நாம் ஜனாதிபதியுடனும் பேசவேண்டியிருக்கின்றது.

முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்துச்சட்டத்தை மாற்றவேண்டும் என்ற கோஷம் ஒரு சாராரிடமிருந்து எழுந்துள்ளது. நமது சமுதாயத்திலுள்ள சிலர் முனைப்புடன் இதற்காக காரியமாற்றுவதுடன் முழுநேரத்தொழிலாகவும் கொண்டு இயங்குகின்றனர். சமூகத்திலுள்ள பெண்களில் சிலர் ஆய்வுகளை செய்து அதற்கு வலுச்சேர்க்கின்றனர். சில பெண்களுக்கு நடந்த அநியாயங்கள் மற்றும் துன்பியல் சம்பவங்களை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு கவசம் தேவையென வாதிடுகின்றனர். மாற்றுமத பெண்களையும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு இவ்வளவு அநியாயம் நடக்கிறது என்ற மாயையையும்  ஏற்படுத்த முனைகின்றனர்.

எனவே இந்த நிலையில் எதிர்காலம் நமக்கு ஆபத்தானதாகவே இருக்கின்றது. எல்லா விடயங்களிலும் நாம் திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

-RB

No comments:

Post a Comment