கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்து கல்லெறிய வேண்டாமென்று இனவாத இலத்திரனியல் ஊடகங்களை தான் எச்சரிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி தெரிவித்தார்.
இன்று காலை (07) ராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
தினமும் காலையில் எழுந்தவுடன் இவர்களின் பொய்களையும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளையுமே நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது . வீணாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். சதொச நிறுவனத்துடன் என்னை தொடர்பு படுத்தி பொய்யான செய்திகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மொட்டுக்கட்சியினரை ஆட்சியில் கொண்டுவருவதற்காக இந்த இனவாத ஊடகங்கள் முஸ்லிம்களை பலிக்கடவாக்கின்றனர்.
குருநாகல் பிரதி பொலீஸ் மாஅதிபர் கித்சிறிஜெயலத்தின் இடமாற்ற விடயத்தில் பொலிஸ் ஆணைக்குழு, காலையில் ஒரு முடிவும் மாலையில் ஒரு முடிவும் மேற்கொண்டதிலிருந்து இந்த ஆணைக்குழுவினர் முள்ளந்தண்டில்லாதவர்களென நிரூபித்துள்ளனர். எனவே உடனடியாக பொலிஸ் ஆணைக்குழு பதவி விலக வேண்டும். அழுத்தங்களுக்காக வேலை செய்தால் எவ்வாறு இதனை சுயாதீன ஆணைக்குழு என்றழைப்பது?
48 நாடுகளுக்கு ஆறு மாதங்கள் தங்கக்கூடிய இலவச விசா வசதியை அரசு வழங்கியுள்ளது. இவற்றில் எந்தவொரு முஸ்லிம் நாடும் இல்லை. இலங்கைக்கு கோடிக்கணக்கான நிதியுதவியை வழங்கும் முஸ்லிம் நாடுகளுக்கு ஏன் இந்த இருட்டடிப்பு? அவர்கள் உதவி செய்வதற்காக நீங்கள் காட்டும் நன்றிக்கடனா இது? அதுரலிய ரதன தேரர், ஆனந்த சாகர தேரர் மற்றும் ராவண பலயக்கள் முஸ்லிம் நாடுகளில் இருந்து எதுவுமே வேண்டாமென கூறுவது நகைப்புக்கிடமானது.
நெலும் பொகுணவில் இன ஐக்கிய மாநாடு என்று கூறி ஆட்களை கொண்டுவந்து நிரப்பி முஸ்லிம்களையும் குர்ஆனையும் கொச்சைப்படுத்தியுள்ளார்கள். இஸ்லாமிய விரோதிகளை மேடையில் அனுமதித்து இந்த அவமானத்தை தேடித்தந்தவர்கள், உலக முஸ்லிம் லீக் தலைவரை தரக்குறைவாக நடத்துவதற்கும் உதவி அளித்துள்ளார்கள்.
நான் பதவிக்கு பின்னால் என்றுமே ஓடியவனல்ல; பதவிதான் எங்களை தேடி வரும். எங்கள் கை சுத்தமானது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட எங்களில் ஏதாவது குறை இருக்குமென்று தேடிக் களைத்துபோனவர். அவரால் முடியாத ஒன்றையா இவர்கள் செய்யப்பார்க்கின்றார்கள்?
நிகாப் மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தில் எழுந்தமான முடிவுகளையோ சீர்திருத்தங்களையோ செய்வதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.” இவ்வாறு ஆசாத் சாலி தெரிவித்தார்.
-AS
No comments:
Post a Comment