நிகாப் தடை தொடர்பில் அவசரப்பட வேண்டாம்: முஸ்லிம் கவுன்சில் - sonakar.com

Post Top Ad

Monday, 26 August 2019

நிகாப் தடை தொடர்பில் அவசரப்பட வேண்டாம்: முஸ்லிம் கவுன்சில்


இலங்கையில் கடந்த நான்கு மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கீழ் தடை செய்யப்பட்ட முகத்தை முழுமையாக மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்குமா இல்லையா என்பது தொடர்பில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா வேண்டுகோள் விடுக்கிறது.


அவசர கால சட்ட விதிகளின் கீழ், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிய தடை விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டது. இந்நிலையில் அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், முகத்தை மூடி ஆடை அணிய விதிக்கப்பட்ட தடையும் நீங்கியுள்ளதா இல்லையா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கின்றது.

இந்நிலையில் சில தனி நபர்கள் நிகாப், புர்கா தடை நீங்கி விட்டதென் பிரசாரம் செய்து வருகின்றர். அவர்களது பிரசாரங்களுக்கமைவாக செயற்படுவதனை விடுத்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகள், தகவல்களுக்கமைவாக மக்கள் செயற்படுவது அவசியம்.

நிகாப் அணியும் முஸ்லிம் பெண்கள் அவசர கால சட்டம் அமுலில் இருந்தபோது பொறுமையாகவும் நிதானமாகவும் எவ்வாறு கவனமாக நடந்து கொண்டார்களோ அவ்வாறு தொடர்ந்தும் நடந்து கொள்வது தற்போதுள்ள சூழலில் பாதுகாப்பானது என்றே  முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா கருதுகிறது.

எனவே, இது விடயத்தில் நாட்டு சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு மிகவும் சாணக்கியமாக முஸ்லிம் சமூகத்தை வழிநடத்துமாறு முஸ்லிம் மார்க்க தலைமைகளிடம் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா வேண்டுகோள் விடுக்கிறது.

-NM Ameen

No comments:

Post a Comment