2014 அளுத்கம இனவன்முறை தேசிய அளவில் முஸ்லிம்கள் மனதில் பாரிய அச்சத்தையும் வெறுமையையும் உருவாக்கியிருந்தது. 2009 யுத்த வெற்றியை பௌத்த சமூகத்தின் வெற்றியாக்கிக் காண்பிப்பதன் ஊடாக அரசியல் இலாபம் காண முயன்ற அன்றைய ஆட்சியாளர்கள் அடுத்து வந்த காலங்களில் பேரினவாத சக்திகளுக்கு வழங்கிய அங்கீகாரம் இந்த அச்சம் வன்முறையாக வடிவம் பெற காரணியாக அமைந்தது.
தமிழருக்கு அடுத்த படியாக முஸ்லிம்களையும் அரசியல் ரீதியாக அடக்குவதன் ஊடாக பௌத்த – சிங்கள மேன்மை வாதத்தினை நிரூபிக்க முனைந்த சக்திகள் முஸ்லிம் சமூகத்தின் பலவீனத்தை நன்கு புரிந்து கொண்டே இயங்க ஆரம்பித்தன. அன்றைய காலங்களில் இதன் தாக்கம் பெரிதும் உணரப்பட்டிருக்காவிடினும் கூட அண்மைய ஈஸ்டர் தாக்குதலின் பின் இச்சமூகம் எத்தனை தூரம் சிதைந்து போயிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
இன்றைய கால முஸ்லிம் சமூகம் தம்மைத்தாமே பிரித்தறிய பல்வேறு அடிப்படைகளை உருவாக்கிக் கொண்டுள்ளது. சமயமும் - அரசியலும் இரு பிரதான விடயங்களாகும்.
சமய ரீதியிலான முஸ்லிம் சமூகத்தின் பிளவு 2019ம் ஆண்டு வேறு தளத்தை அடைந்துள்ளது என்றால் மிகையில்லை. தம்மை இத்தீவின் பாரம்பரிய முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்திப் பார்க்கும் ஒரு கூறு, தமக்கு அநீதியிழைக்கப்பட்டதாகவும் தமது தரப்பின் மீளெழுச்சியின் அவசியம் இருப்பதாகவும் கருதுகிறது.
இதே போன்று, தாம் சிறு கூட்டமாக இருப்பதே தாம் வெற்றியாளர்கள் என்பதற்கான அடையாளம் என தெரிவிக்கும் பிறிதொரு குழு ஏகத்துவத்தின் பேரில் பல்வேறு சிறு பிரிவுகளாகப் பிரிந்து தமக்குள்ளும் பிரதான சமூகத்துடனும் சண்டையிட்டுக் காலம் கடத்துகிறது.
இது தவிரவும், தம்மை புத்திசாலிக் குழுவாக அடையாளப்படுத்திக் கொள்ளும் இன்னொரு பிரிவு, இச்சமூகத்தின் தலைமைத்துவத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நீண்ட காலமாக போராடிக் கொண்டிருப்பதோடு சர்வதேச முஸ்லிம் உம்மத்து என்ற அடிப்படையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைப் போக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கு கடுமையாக உழைக்கிறது.
அதற்கடுத்ததாக முஸ்லிம் சனத்தொகையின் 90 வீதம் தமது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் தம்மையே பின்பற்றுவதாகவும் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கக் கூடிய பிரிவு, தாம் சார்ந்த வட்டத்தினை விட்டு வெளி வர மாட்டாது, உணர்வோங்கிய நிலையிலேயே காலத்தைக் கழிக்கிறது.
இப்படி ஒவ்வொரு காரணத்துக்காக இச்சமூகத்தின் ஒவ்வொரு கூறும் கொதி நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதேவேளை, சமூகத்தின் வாழ்வியலில் ஆதிக்கம் செலுத்தும் அடுத்த காரணியாக அரசியல் காணப்படுகிறது.
அரசியலைப் பொறுத்தவரை, இரு வேறு நிலைகளில் சமூகம் இவ்விவகாரத்தில் பிரிந்து நிற்கிறது. ஒன்று பிராந்திய அளவாகவும் மற்றையது தேசிய மட்டமாகவும் இருக்கிறது. பிராந்திய விவகாரங்களைப் பொறுத்தவரை அது இரு முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான ஏட்டா போட்டியாகவும் தேசிய அளவு என்று வரும் போது அது பச்சைக்கும் - நீலத்துக்குமிடையிலான போட்டியாகவும் காணப்படுகிறது. நீலம் என்ற நிலைப்பாடு கையிலிருந்து வெற்றிலையாக மாறி தற்போது அது மொட்டுக் கட்சியின் ஆதரவுத் தளமாகவும் மாறிக்கொண்டு வருகிறது.
இலங்கையின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இவ்விரு பிரிவினைகள் ஊடாகவுமே தமது அபிப்பிராயம் மற்றும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வாழ விரும்புகின்றனர். இன்னும் சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் தாம் எந்த ஜமாத்? என்பதையும் எந்த அரசியல் கட்சியின் ஆதரவாளர் என்பதையும் நிரூபிப்பதைத் தம் தலையாய கடமையாக எண்ணி வாழப் பழகிக் கொண்டுள்ளனர்.
இந்த அடிப்படையிலேயே பிராந்திய – தேசிய தேர்தல் காலத்திலும் முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கைகள் மற்றும் உணர்வோட்டம், பிரதிபலிப்பு அமைந்து வருகிறது. வெளிப்படையாகவே பேசுவதானால், மாகாண சபைத் தேர்தலாக இருந்தால் அது இரு முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான போட்டியாகவும் ஜனாதிபதி தேர்தலாக இருந்தால் பேரினவாத கட்சிகளின் பங்காளியாக இருப்பதிலான போட்டியுமே அரசியல் பிரதிபலிப்பாக இருக்கிறது. சமூக மட்டத்தில் இப்பிரதிபலிப்பை உருவாக்குவதற்கான காரணிகளும் சில வகைப்படும்.
இரு பெருந்தேசிய கட்சிகளே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலைப்பாட்டை மீறிய மூன்றாம் சக்தியொன்று உருவாவதற்கு இலங்கையில் நீண்ட நாட்களாக போராட்டம் இடம்பெற்று வருகிறது. இப்பின்னணியிலான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மீது குவிக்கப்படுகின்ற போதிலும் ஆளுமையுள்ள மூன்றாம் அணியாக இக்கட்சி உருவாவதற்கு இன்னும் பல வருடங்களாகலாம் என்ற நிலையில் இவ்வாறான மாற்று சக்திகளோடு ஒன்றிணைந்து பயணிப்பது தற்கால முஸ்லிம் கட்சிகளின் தெரிவில்லை.
தேசிய அரசியலில் தம்மை ஒரு சக்திவாய்ந்த இனக்குழுமமாக நிரூபிப்பதில் ஆரம்பித்து, பேரம் பேசும் சக்தியாக இருக்க வேண்டும் என்ற வீரக் கோசம் எழுப்பி, ஈற்றில் சமூகத்தின் பெயரால் நன்மைகளையடைந்து கொள்ளும் வியாபார அரசியலுக்கு தொடர்ச்சியாகப் பலியாகும் இச்சமூகத்தின் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பும் மிகக் குறுகியதாகவும் பிராந்திய மற்றும் தனிநபர் நலன்களோடு சுருக்கப்பட்டதாகவுமே இருக்கிறது.
இப்பின்னணியில் தற்போது மீண்டும் ஒரு உணர்வுபூர்வமான ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகி வருகிறது சமூகம். 2014ம் ஆண்டும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளி வந்த போது ஒட்டுமொத்த இலங்கையையும் மாற்றம் வேண்டிய உணர்வலை ஆட்கொண்டது. 2009 யுத்த முடிவின் போது ஏற்பட்ட காயம், இழப்பு மற்றும் அநீதிகளுக்கு எதிரான கோபத்தைக் காட்டுவதற்கு தமிழ் சமூகம் காத்திருந்த அதேவேளை, 2012 முதல் தீவிரமடைந்து 2014ல் அளுத்கமயில் இன வன்முறையாக வெடித்த முஸ்லிம் விரோத பேரினவாத நிலைப்பாடு தொடர்பில் கை கட்டிப் பார்த்திருந்த அரசுக்கு பாடம் புகட்ட முஸ்லிம் சமூகம் அணி திரண்டது.
அதேவேளை, குடும்ப ஆட்சியின் ஆதிக்கம், சர்வாதிகாரம் மற்றும் ஊழல் மலிந்த சூழ்நிலையை மாற்றியமைத்தாக வேண்டும் எனப் புறப்பட்ட ஜனநாயக சக்திகளும் அணி திரண்டு, மாற்றத்திற்கான மக்கள் உணர்வு தானாகவே உருவெடுத்திருந்தது. 2010ல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக முன் நிறுத்தி சாதிக்க முடியாமல் போனதை 2015ல் மைத்ரிபால சிறிசேன ஊடாக சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இவ்வுணர்வலை ஊடாக ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமன்றி தேசத்தின் அபிவிருத்தியை விரும்பிய அனைத்து சக்திகளும் பெற்றுக் கொண்டன.
இன்னும் ஒரு வகையில் சொல்வதாக இருந்தால் மக்கள் உணர்வலையை முறையாகப் பயன்படுத்திக் கொண்ட சிறப்பான வரலாற்று நிகழ்வாகவே அன்றைய காலம் அமைந்திருந்தது. இதேவேளை, அன்றைய சூழ்நிலையில் மைத்ரிபால சிறிசேனவன்றி வேறு யாரை பொது வேட்பாளராக களமிறக்கியிருந்தாலும் வெற்றிக்கான வாய்ப்பு வலுவாகவே இருந்தது.
எனினும், அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரே வெளியேறி விட்டார் என்ற உணர்வூட்டலும் வெற்றியில் முக்கிய பங்கை வகித்திருந்தமையை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இதற்குப் பகரமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அமைச்சுப் பதவியைக் கொடுத்துத் தம் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டிய தேவை மஹிந்த ராஜபக்சவுக்கு உருவாகியிருந்தமை இதற்கான சான்றாகும்.
தேசிய அளவில் உருவான உணர்வலை ஊடாக அரசியல் மாற்றம் ஒன்று நிகழ்ந்தாக வேண்டும் என்ற கருத்தியல் பலமாக விதைக்கப்பட்டது. அதன் பின்னணியில் வெளிநாடுகளின் ஆளுமையும், முதலீடுகளும் கூட இருந்தது. இலங்கை எடுத்துக் கொண்ட சீன ஆதரவு நிலைப்பாட்டை முறியடிக்கும் தேவையுடனிருந்த இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இத்தேர்தல் முக்கியமானதாகவும் மாற்றம் அவசியமானதாகவும் இருந்தது.
18ம் திருத்தச் சட்டம் ஊடாக வாழ்நாள் ஜனாதிபதியாக வீற்றிருக்க வழி சமைத்துக் கொண்ட மஹிந்த ராஜபக்ச, மேலை நாடுகளால் புறக்கணிக்கப்பட்டு வந்த அதேவேளை மைத்ரிபால சிறிசேன பதவிக்கு வந்ததும் அதே மேலை நாடுகள் வேக வேகமாக இலங்கைக்குப் படையெடுத்து வந்து தமது ஆதரவைத் தெரிவித்து, அதுவரை யாரோ ஒருவராக இருந்த மைத்ரிபாலவுக்கு மிகப்பெரும் சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியிருந்தமையை மீட்டிப் பார்க்கையில் இதனை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
எனினும், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டும் கூட வாக்களிப்பு அண்மிக்கும் வரைக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தமது மஹிந்த ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயங்கியிருந்தன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவும், முழுமையான சர்வாதிகாரியாகவும், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களையும், அரச வளங்களையும், பெரும் பண பலமும் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சவின் வெற்றி வாய்ப்பு அறவே இல்லையென்ற நிலை உறுதிப்படுத்தப்படும் வரை மக்களின் உணர்வலையை முஸ்லிம் கட்சிகள் ஏற்றுக்கொள்ளவோ அதன் பால் பணியாற்றி சிந்தனைக்கு வலுவூட்டவோ மறுத்திருந்தன.
தேர்தல் நெருங்கி வந்த நிலையில், இனியும் தவிர்க்க முடியாது என்ற சூழல் உருவாகியிருந்த நிர்ப்பந்தத்திலேயே தந்திரமான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது உணர்வூட்டலுக்காகப் பயன்படுத்தப்படும் தென்கிழக்கு நிர்வாக அலகு மீண்டும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருந்த அதேவேளை, அப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்து பின் நீக்கப்பட்டிருந்த ஹசன் அலி, குறித்த நிலை மாற்றத்தின் பின்னணியில், பாரிய பணப் பேரம் இருந்ததாக குற்றஞ்சாட்டியிமிருந்தார்.
மக்கள் உணர்வலை மேலோங்கியிருந்த போதிலும் கூட அரசியல் பிரதிநிதித்துவம் எங்கிருந்ததோ அங்கேயே பண மற்றும் பதவிப் பேரங்கள் இடம்பெற்றிருந்தது. 2015 ஜனவரியில் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு 6.2 மில்லியன் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்ட மைத்ரிபால சிறிசேன, அடுத்து உருவாக்கிய 100 நாள் அரசிலும், அதன் பின் ஐக்கிய தேசிய முன்னணி ஊடாக 'நல்லாட்சி' அரசு எனும் போர்வையில் உருவான கூட்டணி அரசிலும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் பெருமளவு பதவிகளைப் பெற்றுக் கொண்டதோடு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூடப் பெற்றுக்கொண்டது.
அன்றிலிருந்து இன்று வரையிலும், முஸ்லிம் சமூகத்துக்காக நீர் என்ன செய்தீர்? ஏன்று வினவப்பட்டால் கோபத்தால் பொங்கியெழும் மைத்ரிபால சிறிசேன, தான் பெருமளவு பதவிகளை வாரிக் கொடுத்தமையையே அதற்கான பதிலாகக் கொண்டிருக்கிறார். இப்பதவிகள் ஊடாக சமூகம் என்ன நன்மைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறது? எனும் கேள்வி மீண்டும் தற்போது எழுந்துள்ளது. ஆயினும், இதுவும் கடந்து போகும் என்ற வலுவான நம்பிக்கையைக் கொண்டுள்ள அரசியல் தலைமைகள் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரும் மக்கள் உணர்வோடு விளையாடத் தவறவில்லை.
அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு இராஜினாமா நாடகம் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்ததை விட, முஸ்லிம் அரசியலின் பேர அரசியல் கல்முனையில் திண்டாடிக் கொண்டிருப்பது இக்கால கட்டத்தில் முக்கியம் பெறுகிறது. தமது சமூகத்தின் அபிலாசைகளை வெல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து வரும் பேர அரசியலுக்கும் சமூகத்தின் பேரில் முஸ்லிம் அரசியல் செய்து வரும் பேர அரசியலுக்குமிடையிலான வித்தியாசம் இங்கிருந்து உணரப்படக்கூடியது.
காலத்தின் நிர்ப்பந்தத்தில் சில வாரங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவிகளைக் கைவிட்டிருந்த போது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? என்ற கேள்வியையும் மீண்டும் பதவிகளை ஏற்றுக்கொண்ட பின்னர் முஸ்லிம் பிரதேசங்களில் கேட்ட வெடிச் சத்தங்களின் பின்னணியையும் ஒப்பிடுகையில் மக்கள் மீது திணிக்கப்படும் மாயை அரசியலின் வடிவத்தை உணர்ந்து கொள்ளலாம்.
பட்டும் படாமலும் வாழ்ந்து விட்டுப் போவதையே விரும்பும் முஸ்லிம் சமூகம் இச்செயற்பாடுகளை கேள்வி கேட்பதை விட பதவியிலிருப்பவர்களை அனுசரித்துப் போவதன் ஊடாக நமக்கென்ன என வாழ்ந்து கொள்ளப் பழகிக்கொண்டுள்ளது. அதிகபட்சமாக வேண்டுமனால், முஸ்லிம் அரசியல் தலைமைகளை கேள்வி கேட்கும் பேஸ்புக் பதிவுகளுக்கு ஒரு லைக் அல்லது வட்ஸ் அப் மெசேஜுகளை ஷெயார் பண்ணுவதோடு தமது சமூகக் கடமையை செய்து முடித்துக் கொள்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில், சமூகத்தின் தேர்தல் கணக்கு வழமை போன்று அரசியல்வாதிகளாலேயே சமப்படுத்தப்படப் போகிறது. இக்கால கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஆளுனர்கள் என பல தரப்பட்ட அரசியல்வாதிகளை நேரலையில் இணைத்து நான் நடாத்தியிருந்த அனைத்து நேர் காணல் நிகழ்ச்சிகளிலும் தவறாது கேட்கப்பட்ட அப்பாவித்தனமான நேயர் கேள்விகளுள் ஒன்று, 'அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் யாரை ஆதரிக்க வேண்டும்' என்பதாகவிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
பொதுவாகவே அனைத்து தலைமைகளும் சொன்ன ஒரே பதில், அது பற்றி இப்போது சிந்திக்க வேண்டிய அவசியமில்லை என்பதாகும்.
இந்நிலையிலேயே சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய, கோட்டாபே ராஜபக்ச, அநுர குமார திசாநாயக்க என்று பல பெயர்கள் தொடர்பில் எண்ணங்கள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. ஆயினும், சுயாதீன சிந்தனைக்கு இச்சமூகம் எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது, தமது வாக்குப் பலத்தின் ஊடாக என்ன மாற்றத்தைக் காண விரும்புகிறது? ஏன்பது வழக்கம் போல சூழ்நிலை உணர்விலேயே தங்கியிருக்கப் போகிறது.
- Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
No comments:
Post a Comment