மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜுனைத் இன்று (26.08.2019) ஒய்வு பெற்றுச் சென்றுள்ளார்.
கல்விப்பணியில் பல்வேறு சாதனைகளைப் படைத்த இவர் 1959 ம் ஆண்டு 8ம் மாதம் 26 ம் திகதி மீரா லெவ்வை மகுமூது லெவ்வை மற்றும் சீனி முகம்மது போடி கதீஜா உம்மா ஆகியோர்களுக்கு மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை அப்போதிருந்த வாழைச்சேனை அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் தற்போது (அந்நூர் தேசிய பாடசாலை) கற்றார் அத்தோடு இடைநிலைக் கல்வியை ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தொடர்ந்த இவர் உயர்தரக் கல்வியை வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் கற்றார்.
அதன் பின்னர் 1978 ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி உதவி ஆசிரியராக நியமனம் பெற்று மீராவோடை சக்தி வித்தியாலயத்தில் தனது கடமையினைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம், பலாலி ஆசிரியர் கலாசாலைக்கு 1981 ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்காக சென்று பயிற்சியின் பின்னர் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள அழிஞ்சிப் பொத்தானை முஸ்லிம் வித்தியாலயம், திருகோணமடு முஸ்லிம் வித்தியாலயம், மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயம் போன்றவற்றில் கடமையாற்றிய இவர் 1984 ம் ஆண்டில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையிலும் 1987 ல் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் 1987 ல் மீண்டும் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் சேவையாற்றியுள்ளார்.
அத்தோடு இவர் 1991 ம் ஆண்டு அதிபர் சேவை போட்டிப் பரீட்சைக்கு தோற்றி அதில் சித்தியடைந்து 1993 ம் ஆண்டு ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டார்.
ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர் அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு மிகவும் பங்காற்றி, 1994 ல் முதல் தடவையாக ஒரு மாணவனை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய்தார். அதிலிருந்து தொடர்ச்சியாக மாணவர்கள் தகமை பெற்று வந்ததுடன் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்தின் ஒரு முன்மாதிரி ஆரம்பப்பிரிவு பாடசாலையாக சகல துறைகளிலும் மிளிர்ந்தது. பெளதீக வள மேம்பாட்டிலும் சிறிய வீட்டு வளவு காணியில் அமைந்திருந்த பாடசாலைக்கு மாடிக்கட்டடம் பெறப்பட்டதுடன் மேலதிகக் காணியைப் பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 1993 ம் ஆண்டு தொடக்கம் 2006ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்காற்றிய இவர் கல்வி அமைச்சினால் அதிபர்களுக்கான வெளிநாட்டு பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு 2013 ம் ஆண்டில் மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு தலைமைத்துவப் பயிற்சிக்காக சென்றுவந்தார்.
2006 ல் ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு தற்காலிகமாக அதிபராக நியமிக்கப்பட்டு 2007 ம் ஆண்டு தொடக்கம் கல்வி அமைச்சின் மூலமாக நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டார்.
2008 ம் ஆண்டு பாடசாலை வரலாற்றில் உயர்தரத்தில் முதன்முறையாக மருத்துவ, பொறியியல் துறைக்கு தலா ஒரு மாணவர் வீதம் தகமை பெற்றனர். 2008 ம் ஆண்டு தொடக்கம் விஞ்ஞான, கணித, மருத்துவம், பொறியியல், உள்ளிட்ட ஏனைய துறைகளிலும் பல்கலைக்கழக தகமைகளை மாணவர்கள் பெற்றுவந்தமை, வர்த்தகத்துறையில் முதற்தடவையாக மாவட்டத்தில் முதன் நிலையை ஒரு மாணவர் இக்காலத்திலே பெற்றுக் கொண்டார்.
2013ம் ஆண்டு தொழில்நுட்பத்துறை ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2015 ல் முதல் தடவையாக பொறியியல் தொழில்நுட்பத்துறையில் மாவட்ட ரீதியில் பாடசாலை முதலாம் நிலையைப் பெற்றுக் கொண்டது.
அத்தோடு 2016 ம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் தேசிய மட்ட மூன்றாம் நிலை சாதனையையும் மாகாண மட்ட மட்டத்தில் முதன் நிலையையும் உயரியல் தொழில்நுட்பத்துறையில் சாதனையைப் பெற்றுக்கொண்டது.
பாடசாலை வரலாற்றில் 2013 ம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரத்திற்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் நூறு வீதம் சித்தியடைந்து சாதனை படைத்ததும் இவருடைய காலத்திலேயாகும். அதேபோன்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையிலும் 2011 ல் தோற்றிய மாணவர்களில் மூவர் ஒரே பாடசாலையில் மாவட்டத்தில் முதல்நிலையைப் பெற்றதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இவரது காலப்பகுதியில் இக்கல்லூரியின் கட்டமைப்பும் முற்றாக மாற்றப்பட்டு பெளதீக வளங்களிலும் வளர்ச்சி கண்டு தற்போதைய கல்வியின் நிலையைப் பெற்றுக்கொண்டது.
2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு விழாவின் சாதனைகள் அனைத்தும் 2007 தொடக்கம் 2016 வரை இவரது அதிபர் முகாமைத்துவ காலப்பகுதியில் பெறப்பட்டவைகளே.
2016 ம் ஆண்டு செப்டம்பரில் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்டு கடமையாற்றிய இவர் அதே ஆண்டு நடைபெற்ற இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சையில் திறமை, மூப்பு பிரிவில் சித்தியடைந்தார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலமாக இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சையில் தெரிவு செய்யப்பட ஒரேயொருவர் என்பதுடன் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இரு முஸ்லிம் அதிகாரிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2017 ல் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிருவாகத்திக்கு பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியதோடு 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் வலயக்கல்விப் பணிப்பாளர் ஒய்வு பெற்றுச் சென்றமையால் அதே வருடம் நவம்பர் மாதம் வரை பதில் வலயக் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றியதுடன் சேவையிலிருந்து ஒய்வு பெறும்வரை பிரதிக்கல்விப் பணிப்பாளராக சேவையாற்றினார்.
இவருக்கு சேவைக்கால பாராட்டாக 2011, 2013 ஆகிய இரு ஆண்டுகளில் பிரதீபா பிரபா விருதும் கிடைக்கப்பெற்றது.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நூற்றாண்டு விழா ஆரம்பிக்கப்பட்ட செயற்பாடுகளையும் சேவையையும் பாராட்டும் வகையில் இவரால் முன்மொழியப்பட்டு, ஆரம்பிக்கப்பட்டு, பொறுப்புக் கொடுக்கப்பட்ட பாடசாலைக்கான பஸ் வண்டி ஒன்றை பெற்றுக்கொள்ளல் செயற்றிட்டத்திற்காக கட்டார் பழைய மாணவர் சங்கம் இவரை கட்டாருக்கு அழைத்து கெளரவிப்பு நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
சமூக சிந்தனையும், செயற்பாடுகளையும் கொண்ட இவர் ஓட்டமாவடி முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிருவாத் தலைவராக தற்போது செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment