முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத்திருத்த விவகாரத்தில் இரு தரப்பும் சமரசத்துக்கு வருவதற்கான வாய்ப்புள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.
இன்றைய தினம் அவரது நாவல அலுவலகத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்ட நீதிபதி சலீம் மார்சுப் தலைமையிலான குழுவின் பரிந்துரையில், குறிப்பாக முஸ்லிம் பெண்களின் திருமண வயது, பெண் காதிகளின் நியமனம் தொடர்பில் முரண்பாடுகள் தோன்றியுள்ள நிலையில், அவற்றை ஆதரித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாரம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க முற்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, இன்று இது தொடர்பில் கூடி ஆராயப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் புதன்கிழமை 24ம் திகதி மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடவுள்ளதுடன் அதற்கடுத்த இரு வாரங்களுக்குள் நீதிபதி சலீம் மார்சுப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரின் பரிந்துரைகளை ஒன்றிணைத்த சமரச இணக்கப்பாடொன்றை எட்ட முடியும் என முன்னாள் ஆளுனர் அசாத் சோனகர்.கொம்மிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இப்பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பிலான நீண்டகால இழுபறி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment