MMDA சீர் திருத்தம்: அடைவுகளும் இழப்புகளும் - sonakar.com

Post Top Ad

Friday, 19 July 2019

MMDA சீர் திருத்தம்: அடைவுகளும் இழப்புகளும்


நீண்டகால இழுபறியின் பின் முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டம் (Muslim Marriage and Divorce Act) தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பைசர் முஸ்தபா ஊடாக தகவல் வெளியானது. இதனையடுத்து மீண்டும் இது தொடர்பில் ஏதோ ஒரு அளவில் மக்கள் அவதானம் திரும்பியுள்ளது. 



சிங்கள மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே தமது தனித்துவத்தைக் கட்டிக் காத்து வந்த முஸ்லிம் சமூகம் தமக்கான பிரத்யேக சலுகைகள் பலவற்றை வென்றெடுத்திருந்தது. இத்தீவு அந்நியர் ஆதிக்கத்துக்குள்ளான போதிலும் கூட இங்கு வாழ்ந்த சமூகங்களின் பன்முகத்தன்மை மற்றும் பல் கலாச்சாரம் ஓரளவுக்கு மதிக்கப்பட்டும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுமிருந்தது.

இப்பின்னணியில், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த இந்தோனேசியாவில் நடைமுறையிலிருந்த முஸ்லிம்களின் சமூக விவகாரங்களுக்கான சட்டங்கள் சிலவும் 1770ல் இலங்கையை வந்தடைந்தது. இலங்கையில் ஏலவே பயன்பாட்டில் இருந்து வந்த முஸ்லிம்களுக்கான பிரத்யேக சட்டச்சலுகைகள் இதனூடாக ஆவண வடிவம் பெற்றதுடன், பின் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1806ம் ஆண்டு முஹம்மதியர்களுக்கான பிரத்யேக சட்டமாக (Mohammedan code) உருப்பெற்றது. இதன் நிமித்தம் செயற்பட்ட ஆணைக்குழுவில் அசன்லெப்பை ஊதுகன்டு மரிக்கார் என அறியப்பட்ட அப்போதைய சோனக சமூகத் தலைவரும் பங்கேற்றிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் கொழும்பு உட்பட பிரதான துறைமுகப் பகுதிகளிலேயே பின்பற்றப்பட்டு வந்த இச்சட்ட விதிகள், நாடு ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் 1852 அளவிலேயே நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்துக்கான பிரத்யேக சட்டமாக அமுல்படுத்தப்பட்டது. எனினும், ஆரம்பம் தொட்டே சமூக விவகாரங்கள் தொடர்பில் பல்வேறு பிணக்குகளும் முரண்பாடுகளும் நிலவி வந்ததாகவே வரலாற்றுச் சம்பவங்களை ஆராயும் போது காணக்கிடைக்கிறது. 

முஸ்லிம் தனியார் சட்டத்தில், விவாக – விவாகரத்துக்கான சட்ட விதியே முக்கியம் பெறுகிறது. சமூகத்தில் நிலவிய முக்கிய சர்ச்சையாகவும் இது காணப்பட்டதால் இதனைக் கையாள்வதற்கான பொறிமுறையொன்றின் அவசியம் உணரப்பட்ட 1925 கால கட்டத்தில் பிரத்யேகமான காதி நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு, அங்கிருந்து உருவான எண்ணக்கருவுக்கமைவாகவே 1937 அளவில் காதி நீதிமன்ற உருவாக்கம் சாத்தியமானது.

ஜஸ்டிஸ் அக்பர், T.B. ஜாயா, M.C அப்துல் காதர், மாக்கான் மார்க்கார் போன்ற சமூக முக்கியஸ்தர்கள் இது தொடர்பில் பல கட்;ட கலந்துரையாடல்கள், ஆலோசனைகளை மேற்கொண்டு, 1929ம் ஆண்டு முன் வைத்த பரிந்துரையே பின் 1930 மற்றும் 1934ம் ஆண்டுகளில் மேலதிக திருத்தங்கள், மாற்றங்களுடன் 1937ல் காதி நீதிமன்ற உருவாக்கத்துக்கு வழி சமைத்தது. 1930ம் ஆண்டு பி.ஈ. பீரிஸ் தலைமையில் மீளாய்வுக்காக அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை இன்று வரை வெளியிடப்படவே இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னும், எதிர்பார்த்த அளவு பயனைத் தராத இச்சட்டமூலம் 1939ல் மீண்டும் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு 1951ம் ஆண்டின் முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டமாக உருப்பெற்று 1954ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இவ்வாறு இதனை மேலோட்டமாக வாசிக்கும் போதே இச்சட்ட மூலத்தின் சிக்கலான பின்னணியை உணர்ந்து கொள்ள முடியும்.

அதன் பின்னரும் கூட காதி நீதிபதிகளின் நியமனம், அதற்கான தகுதி மற்றும் நியமிக்கும் அதிகாரம் போன்ற விடயங்கள் தொடர்ச்சியான சவால்களை சந்தித்து. 1951ம் ஆண்டு முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டம் காதி நீதிபதிகளின் நியமன அதிகாரத்தை உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கே வழங்கியிருந்தது. எனினும், 1965ம் ஆண்டு அதற்கான அதிகாரத்தை நீதி சேவைகளுக்கான ஆணைக்குழுவுக்கு (Judicial service commission) வழங்கும் வகையிலான மாற்றங்கள் உருவானதோடு 2005ம் ஆண்டு வரையிலும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழேயே நிர்வகிக்கப்பட்டும் வந்தது.

இவ்வாறான பின்னணியும் - சிக்கலும் கொண்ட முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டமே; கடந்த 2009ம் ஆண்டு முதல் மீண்டும் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு இழுபறிக்குள்ளானது. 

2009ம் வருடம் ஜுலை மாதம் 30ம் திகதி அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொட, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சலீம் மார்சுப் தலைமையில் 19 பேர் கொண்ட குழுவொன்றை இதற்கென நியமித்திருந்தார். அதில் இருவர் இயற்கையெய்திய நிலையில் ஏனைய 17 பேர் கொண்ட இக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து 2017ம் ஆண்டு சமூக மட்டத்தில் சலசலப்புகளும், எதிர்மறை விமர்சனங்களும், கருத்து முரண்பாடுகளும் உருவாகின.

இதில் பிரதானமாக, 2009 முதல் 2017 வரையான காலப்பகுதியில் இக்குழு என்ன செய்து கொண்டிருந்தது? பெண்களின் கருத்துக்கு அங்கு எவ்வகையான முக்கியத்துவம் தரப்படுகிறது? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டதோடு காதி நீதிபதிகளாக பெண்கள் இயங்குவது தொடர்பிலான அபிப்பிராய பேதங்கள் மற்றும் இதர செயற்பாட்டுச் சிக்கல்களும் பொது மக்களை வந்தடைந்தது.

சீர்திருத்தம் தொடர்பில் பரிந்துரைகளை முன் வைப்பதே நீதியரசர் சலீம் மார்சுப் தலைமையிலான குழுவின் அடிப்படைச் செயற்பாடாக இருந்த போதிலும், நாளடைவில் இக்குழுவுக்குள் இரு வேறு கருத்து முரண்பாடு நிலவுவது தொடர்பில் ஏட்டிக்குப் போட்டியான தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, பெண்களின் பங்களிப்பு மற்றும் பெண் காதி நீதிபதிகளை அனுமதிப்பது தொடர்பிலான விடயத்தில் இக்குழுவுக்குள் இரு வேறு நிலைப்பாடுகள் நிலவியது.

முஸ்லிம் சமூகத்துக்குள் இவ்வாறான சிக்கல் காணப்படுவது ஆச்சரியப்படுவதற்கான ஒரு விடயம் இல்லை. குறிப்பாக முஸ்லிம் பெண்களின் திருமண வயது எதுவாக இருக்க வேண்டும் என்பதில் மார்க்க புரிதல் அடிப்படையிலான கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றமை 1956ம் ஆண்டின் ஏ.ஆர்.எச் கனகரத்ன அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயம் மாத்திரமன்றி இன்றளவும் அபிப்பிராய பேதங்களுடனேயே அணுகப்படுகிறது.

ஆதலால், நீதியரசர் சலீம் மார்சுப் தலைமையிலான குழுவின் மீளாய்வும் இச்சிக்கலை எதிர்நோக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. அதற்கமைவாக 2017 முதல் பொதுத்தளத்தில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் உருவானதோடு அபிப்பிராய பேதங்கள் பகிரங்கப்பட்டிருந்தது. இக்குழு அமைக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் 10 வருடங்கள் நிறைவடையவுள்ள சந்தர்ப்பத்தில் அண்மையில், குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் அதிர்விலிருந்து சமூகம் முழுமையாக மீளாத நிலையில் அரசியல்வாதிகள் தலையிட்டு சில விடயங்களில் இணக்கம் கண்டுள்ளதுடன் தற்போது அதுவே பரிந்துரையாக முன் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பலரோடு நான் உரையாடியிருந்தேன். எனது அடிப்படைக் கேள்வி இத்தனை காலம் என்ன நடந்தது? அல்லது ஏன் இவ்விடயம் இழுபறிக்குள்ளானது என்பதே. அக் கேள்விக்கு எனக்குக் கிடைத்த மிகத் தெளிவான பதிலானது 2017ல் இவ்விடயம் பொதுத்தளங்களில் விவாத மற்றும் பேசு பொருளாக சூடு பிடிக்கும் வரை, பெரும்பாலான குழு அங்கத்தவர்கள் கூட்டங்களுக்கே சமூகமளிக்கவில்லையென்பதாகும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள் அவ்வாறு வராமலிருந்ததற்கும் காரணம் இருந்திருக்க வேண்டுமே? எனும் கேள்வியின் அடிப்படையில் கண்டு கொண்ட விடை ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடாகவும், குழுவில் அங்கம் வகித்த பெண்கள் தொடர்பிலான மாற்றுக் கருத்து அடிப்படையிலானதுமாக இருந்ததாக எனக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அவ்வாறு நடந்து கொண்டவர்கள் யார்? என்கிற பெயர் விபரமும் இருக்கின்ற போதிலும், எதிர்கால மாற்றம் தரக்கூடிய நன்மைகளுக்கே முக்கியத்துவம் என்பதால் கடந்த கால பெயர்கள் நமக்கு இங்கு அவசியமில்லையென்பது எனது அபிப்பிராயம். ஆயினும், இதில் போலியாக பெண்ணுரிமை, பெண்கள் கல்வி முன்னேற்றம் குறித்து முன்னால் பேசிக்கொண்டு, திரைமறைவில் பெண்கள் பங்கெடுக்கும் குழுவில் தாம் பங்கெடுக்க முடியாது என்று கூறிக்கொண்ட கனவாண்;களும் உண்டென்பது அறிந்து வைப்பதில் தவறில்லாத விடயம்.

இன்றளவில் முஸ்லிம் சமூகத்தில் காதி நீதி மன்றங்கள் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாடு அல்லது அபிப்பிராயம் நிலவுகின்றது என்பதும் மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விடயமே. ஆயினும், தமது பணியில் மும்முரமாக இருந்த இக்குழு தமது பரிந்துரையில் அதற்கு வேறு வகையான தீர்வை முன் வைத்ததாக கருதுகிறது.

பொது மக்கள் தரப்பிலிருந்து நான் உரையாடிய அல்லது என்னுடன் கருத்துப்பகிர்ந்து கொண்ட பத்தில் ஒருவர் கூட முழு மனதுடன் காதி நீதிமன்ற செயற்பாடுகள் தமக்குத் திருப்தியளிப்பதாக முதற்தடவையே கூறவில்லை. மாறாக, நீதியற்ற முறையிலேயே காதி நீதிமன்றங்கள் செயற்படுவதாகவும், பணபலம் படைத்தவர்களுக்கு பக்க சார்பு காணப்படுவதாகவும், மரியாதைக் குறைவு மற்றும் சார்பான தீர்ப்பை வழங்குவதற்கான பேரம் பேசல் கூட இடம்பெறுவதாகவும் மக்கள் மத்தியிலிருந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது.

இந்நிலையில், காதி நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கான ஆகக்குறைந்த தகைமை சட்டத்தரணியாக (Attorney at Law) இருத்தல் என்கிற பரிந்துரை ஏற்புடையதாகவும், காதி நீதிமன்றங்கள் ஊடாக பெண்கள் சந்தித்து வரும் மரியாதைக் குறைவு மற்றும் வேற்றுமையுணர்வு, பாகுபாட்டுக்குப் பகரமாக பெண் காதி நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரை முக்கியம் வாய்ந்ததாகவும் தென்படுகிறது. இதேவேளை, இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியிலேயே ஒரு பெண் வீற்றிருந்த நிலையில் காதி நீதிபதியாக பெண்கள் ஏன் நியமிக்கப்படக் கூடாது என்ற கேள்வியையும் கருத்திற்கொள்வது நியாயமானது.

தமது திருமணப் பதிவின் போது சம்பந்தப்பட்ட பெண் பிரசன்னமாகி அதனை ஏற்றுக் கையொப்பமிடுவதற்கான பரிந்துரையும் கட்டாயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகவே காணப்படுகின்ற அதேவேளை, திருமணங்களுக்கான மத்திய தகவல் கோவை (Database) ஒன்று அமைப்பதற்கான யோசனை இன்னும் முக்கியமானதாக அமைகிறது. நான்கு திருமணங்கள் எனும் பேரில் ஊருக்கு நான்கு திருமணங்களை செய்யும் மன்மதர்களைக் கட்டுப்படுத்த இது பயனுள்ள யோசனை. இவ்விடயம் மாத்திரமன்றி நீதியரசர் சலீம் மார்சுப் தலைமையிலான குழுவினர் சுமார் 80 வீதமான யோசனைகளுக்கு தமக்கிடையில் ஏலவே இணக்கம் கண்டிருந்தனர் என்பது கடந்த வருடம் இது பற்றி ஆராய்ந்த போது நான் அறிந்து கொண்ட செய்தி. எனினும், முரண்பட்டுக் கொண்ட 20 வீத விடயங்களே பொதுத்தளத்தில் பேசு பொருளாக மாறியதுடன் முக்கிய விவாதப் பொருளாகவும் ஆனது.

அதில் பிரதானமான விடயம் தான் பெண்களின் திருமண வயதை நிர்ணயிப்பதாக அமைந்தது. இது விடயத்தில் இன்றும் சமூகத்தில் பல்வேறு அபிப்பிராய பேதங்கள் நிலவுகிறது. குறிப்பாக ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் நிமித்தமே அரசாங்கம் முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 18 என நிர்ணயிக்க முயல்கிறது என்ற செய்தியே கூட்டாட்சிக் காலத்தில் பரவியதனால் அதன் பால் ஈர்க்கப்பட்டே இவ்விவகாரம் பேசப்பட்டது.

கடந்த வாரம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய திருத்தப் பரிந்துரைகள் தொடர்பில், குறிப்பாக பெண்களின் திருமண வயதை 18 என வரையறுத்துக் கொள்ளும் விடயத்திலும் இணக்கம் கண்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அச்சந்திப்புக்குத் தலைமை தாங்கிய சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எச்.எம் பௌசியைத் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசியிருந்தேன். அப்போது அவரிடம் நான் கேட்ட கேள்விகளுள் ஒன்றுதான், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாம் கண்டுள்ள இவ்விணக்கம் நிர்ப்பந்தத்தின் பேரிலானதா? என்பதாகும்.

ஈஸ்டர் தாக்குதலை முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு சிலர் நடாத்தினார்கள் என்ற குற்ற உணர்விலிருந்து இன்னமும் சமூகம் முழுமையாக மீளவில்லை. தொடர்ச்சியான அழுத்தம், கைதுகள் மற்றும் சோதனை நடவடிக்கைளாலும் வெறுப்பும், சலிப்புமடைந்திருக்கும் சமூகம் தற்சமயம் ஓங்கிக் குரல் கொடுக்க முடியாது துவண்டு போயுமுள்ளது. இவ்விடைவெளியிலேயே முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தில் பெண்களுக்கான திருமண வயது 18 என திருத்தப்படும் என்கிற தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருந்தார். அதற்கடுத்ததாக தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் அதில் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிததுள்ளனர்.

இந்நிலையில், இச்சட்டத்திருத்தத்தில் அரசியலின் பங்கு என்ன? என்கிற கேள்வியும் தவிர்க்க முடியாதது. ஆயினும் என் கேள்விக்கு பதிலளித்த ஏ.எச்.எம். பௌசி, இவ்விவகாரங்கள் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பாகவே இணக்கம் காணப்பட்டிருந்த விடயங்கள் என தெரிவித்திருந்தார். நவீன காலத்தில் பெண் பிள்ளைகளை 12, 13 வயதில்; திருமணம் முடித்துக் கொடுக்கும் வழக்கம் இல்லையாயினும், ஒரு பெண் பூப்பெய்ததும் திருமணத்துக்கான தகுதியைப் பெற்று விடுகிறாள் எனும் நிலைப்பாடு மார்க்க ரீதியானது எனவும் அது ஷரீயா சட்டம் எனவும் வாதிப்போரும் உள்ளனர். அவ்வாறான ஒரு விடயத்தை மீற அனுமதிப்பதன் ஊடாக ஏனைய மார்க்க விடயங்களிலும் ஊடறுப்பு நிகழும் என்பது அவர்கள் தரப்பு வாதம்.
இவையனைத்தையும் தாண்டி, நீண்ட இழுபறி வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தில், குறிப்பாக விவாக – விவாகரத்து சட்டத்தில் தற்போது முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் எதிர்காலத்துக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் நன்மை தரக்கூடியதா? எனும் முக்கிய கேள்வியை சம்பந்தப்பட்டவர்களிடம் தொடுத்திருந்தேன். அதற்கு எனக்கு கிடைத்திருந்த முக்கியமான பதில் என்னவென்றால், இன்றைய சூழ்நிலை, அறிவு மற்றும் தெளிவைக் கொண்டே நாம் இந்த பரிந்துரைகளை முன் வைக்கிறோம், எதிர்காலம் அதற்கான தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

பதில் யதார்த்தமாகவே இருந்தது. தமக்கென ஒரு பாதிப்பு வரும் வரை நாட்டின் சட்டத்தைப் பற்றியே அறிந்து – தெரிந்து வாழத் தயக்கம் காட்டும் சமூகம் இது போன்ற விடயங்களை பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை. ஆயினும், நாளை தானும் ஒரு காதி நீதமன்ற வரிசையில் நிற்கும் போது அங்கலாய்க்காமல் விடப் போவதும் இல்லை.

அவ்வப் போது பாய்ந்து விட்டு ஓய்ந்து விடும் சூரர்களுக்கு இது வெறும் விவாதப் பொருள், ஆனால் சமூகம் என்ற அளவில் கடந்த காலத்தில் கற்றுக் கொண்டு எதிர்காலத்துக்காக எதை விட்டுச் செல்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டியது நமது கடமையென்பதை ஒவ்வொரு முஸ்லிமும் மறக்கலாகாது.


-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment