முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டச் சீர்திருத்தத்துக்கான தேவை நீண்டகாலமாக இருந்து வருகிறது. அதற்கான அடிப்படை, காதி நீதிமன்றங்களில் குறிப்பாக பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
காதி நீதிபதிகள் எனக் கூறிக் கொள்வோர் தமது இச்சைப்படியும், பல இடங்களில் இலஞ்சம் பெற்றுக் கொண்டு பணம் படைத்தவர்கள் பக்கம் தீர்ப்பு சொல்வதும் மற்றும் காதி நீதிமன்றங்களில் வைத்தே மற்றவர் முன் பெண்களை மிகவும் மோசமான முறையில் திட்டுவதும், போதிய கல்வியறிவில்லாதவர்களை மிகவும் தரக் குறைவாக நடாத்துவதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு கடந்த 50 வருடங்களாக போதியளவு ஆதாரங்கள் உள்ளன.
ஆனால், இது காலம் வரையிலும் இதற்கு முறையான தீர்வோ காதி நீதிமன்றில் இடம்பெறும் அநீதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை. அங்கிருந்தே முஸ்லிம் பெண்கள் மத்தியில் நீதிக்கான குரல் எழுந்தது. ஒரு கட்டத்தில் இப்பிரச்சினைகளில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவு அவர்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறது. நாம் பின்னணி - முன்னணி பற்றி பேச முன்னர் எமது சமூகத்தில் எமது கண் முன்னே இடம்பெறும் அநீதிக்கு 'தீர்வை' வைத்தோமா? என்ற கேள்வியிலிருந்தே இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு எதையும் செய்யாத நாம், பிற செயற்பாட்டாளர்களின் உதவியோடு தமது குரலை வெளியுலகுக்குக் கொண்டு சென்றதை கண்மூடித்தனமாக விமர்சிப்பதோடு திருப்தி காண்பது இந்த சமூகம் இன்னும் முன்னேறவில்லையென்பதையே எடுத்துக் காட்டுகிறது. 1951லிருந்தும் பல தடவைகள் இச்சட்டத்தில் சீர் திருத்தம் அவசியப்படுவது குறித்து சமூகத்தில் குரல் எழுந்துள்ளது. ஆனாலும், உணர்வு ஓங்கிய நிலையில் மார்க்கத்தில் கை வைக்கிறார்கள் என்ற பிரச்சாரம் ஊடாக நீதியை வழங்காதிருப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் அநியாயமே தவிர வேறு எதுவும் இல்லை.
அதனால் தான், இன்று பாதிக்கப்பட்ட பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ சிங்கள ஊடகங்களை நாட ஆரம்பித்துள்ளார்கள். அத தெரன மற்றும் ஹிரு, திவயின போன்ற ஊடகங்கள் இவ்விடயங்களை ஊதிப் பெருப்பிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவ்வாறு தம் மனக்குறைகளை வெளியே சொல்லி நீதி கேட்பவர்களை அசிங்கப்படுத்துவதை விட நாம் தவற விட்ட சமூக நீதியை மீள நிறுவும் கடமை நமக்கிருக்கிறது என்பதை இச்சமூகம் சிந்திக்குமா? மார்க்க உணர்வு மேலோங்கல் அவசியமா - அல்லது மனித சமூகத்துக்கே நீதி சொல்லும் மார்க்கத்தின் பெயரால் இடம்பெறும் அநீதிகளுக்கு தீர்வு வழங்குவது அவசியமா? என்பதை உணர மறுக்கும் நிலை எதிர்கால சமூகத்துக்குச் செய்யும் துரோகமாகும்.
-சோனகர்.கொம்
No comments:
Post a Comment