சூபிஸம் .. வஹாபிசம் .. சூனியம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 14 July 2019

சூபிஸம் .. வஹாபிசம் .. சூனியம்!



வஹாபிசம் என்பது என்னவென்று பெரும்பாலான முஸ்லிம்களுக்கே தெளிவில்லை, ஆனாலும் பௌத்த கடும்போக்குவாதிகள் அது பற்றிப் பேசுகிறார்கள், இலங்கை முஸ்லிம்கள் அதனால் சீரழிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள். இதே போல, தம்மை சூபிஸவாதிகள் என அடையாளப்படுத்துவதில் பெருமை கொள்ளும் இன்னொரு பிரிவினர் 'இது எங்கள் காலம்... வெற்றி அண்மித்து விட்டது' என பள்ளிவாசல்களுக்குள் வைத்து முழக்கமிடுகிறார்கள்.


இந்த இரு விடயங்களினாலும் சூனியத்துக்குள் தள்ளப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிமின் பார்வையிலிருந்தே என் பதிவை ஆரம்பிக்கிறேன். ஆதலால், என் கண்களுக்கு இவர்கள் எல்லோருமே முஸ்லிம்களாகவே தெரிகிறார்கள். பிரிந்து நிற்பவர்களை சார்ந்து நிற்க நான் தயாரில்லை.

முதலில், அரேபியாவிலிருந்து தூர கிழக்கு நாடுகளை வந்தடைந்த மார்க்கச் சித்தார்ந்தம், பிராந்திய சம்பிரதாய - கலாச்சார - செயற்பாட்டு மூலக்கூறுகளும் கலந்தே பயிற்றுவிக்கப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆதலால் தான், திராவிட – வட இந்திய – லக்சதீப கலாச்சார, வாழ்வியல் விழுமியங்கள் மார்க்கத்தின் பெயரால் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் ஊடுருவியிருந்தன. இதன் விளைவிலேயே, கால மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் சரிவரப் புரிந்து, தேவையான சீர் திருத்தத்தை உள்வாங்கிக் கொள்ளத் தவறிய பழக்கவழக்கங்கள் நவீன காலத்தில் கேள்விக்குட்படுபத்தப்பட்டு, கேலியும் செய்யப்படுகிறது என்பது எனது அபிப்பிராயம்.

தவிரவும், முன் சென்றோரது வாழ்வியலுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவது இங்கு நோக்கமில்லை, எனினும், இதற்கு முன்னைய சமூக வாழ்வியல் இன்றைய தலைமுறையினரிடம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அலசுவதன் ஊடாக எதிர்கால சமூகக் கட்டமைப்பை சீர் திருத்திக்கொள்ள முடியும் என்பதும் எனது நம்பிக்கை. இதற்கான ஒத்துழைப்பு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும் வரவேண்டியுள்ளது.

9/11 என அறியப்படக்கூடிய 2001 செப்டம்பர் 11ம் திகதி, அமெரிக்காவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து 'பயங்கரவாதத்துக்கு எதிரான' போர் எனும் போர்வையில் மத்திய கிழக்கைத் துண்டாடக் கிளம்பிய அன்றைய ஜோர்ஜ் W. புஷ் நிர்வாகம், உலகின் ஒவ்வொரு நாட்டின் மீதும் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் புரியும் கடமை உருவாகியுள்ளது என்று கூறி போர்த்திணிப்பை உருவாக்கியது. இதனை மேலும் ஆக்ரோஷமாக வெளிப்படுத்திய அன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ், எம்மைச் சார்ந்திரு அல்லது எமது எதிரியாயிரு (You're either with us, or against us ) எனும் கோட்பாட்டை பிரகடனப்படுத்தினார்.

விரும்பியோ விரும்பாமலோ, இலங்கையில் தம்மை முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் சமூகம் இன்று தமக்குள் உருவாக்கிக் கொண்டுள்ள கொள்கைப் பிரிவினைகளின் அடிப்படையில் இந்தக் கோட்பாட்டையே பின்பற்றுகின்றன. ஒன்றில் சார்ந்திரு அல்லது எதிரியாயிரு என ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொண்டுள்ள இச்சமூகத்தை வெளிக் கண்கள் 'முஸ்லிம்களாகவே' பார்க்கின்றன.

ஆயினும், கொள்கைப்பற்றினூடாகத் தம்மை அந்நியப்படுத்திக்கொண்டுள்ள சமூகம் அதனைப் பேரினவாதிகளின் பலமாகவும் மாற்றியமைக்க உதவிக்கொண்டிருக்கிறது. 2004ம் ஆண்டு முதல் இளைய தலைமுறையினர் மத்தியில் விதைக்கப்பட்ட மத அடிப்படையிலான ஆக்ரோஷ உணர்வுகளுக்கும் இதில் முக்கிய பங்குண்டு.

கலிமாச் சொன்ன முஸ்லிம்கள் எல்லோருமே ஏகத்துவவாதிகளாக இருக்க, இலங்கையில் ஏகத்துவ கொள்கையை மீள நிறுவும் தேவையிருப்பதாக சமூகத்தின் ஒரு கூறு உணர்ந்தது என்ற உண்மையினை ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் மேற்சொன்ன விடயத்தை மீளவும் வலியுறுத்த விரும்புகிறேன். அதாவது, கால மாற்றத்தையும் - பரிணாம வளர்ச்சியையும் சரிவரப் புரிந்து, தேவையான சீர்திருத்தத்தை உள்வாங்கிக் கொள்ளத் தவறியமையும் இதன் காரணிகளுள் ஒன்று.

என்னைப் பொறுத்தவரை, மனிதன் இன்னும் முழுமையாக வளரவும் இல்லை, தேடல்கள் முற்றுப் பெறவும் இல்லை. ஆதலால், ஒவ்வொரு கணத்திலும் சிந்திக்க ஆரம்பிக்கலாம்! விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தை நமது தெருவுக்குள்ளும், சுவர்களுக்குள்ளும், கொள்கை இயக்கங்களின் சித்தார்ந்தத்துக்குள்ளும் சுருக்கிக் கொள்வது அவரவர் தெரிவு. ஆயினும், நமது நடவடிக்கைகள் சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டியது நமது பொறுப்பாகிறது.

கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கடந்த நாற்பது தொடக்கம் ஐம்பது வருட காலப்பகுதிக்குள் பல்வேறு கொள்கை அமைப்புகள் தோற்றம் பெற்று, அவை இரத்தக்களறியான வரலாறுகளையும் அண்மைக்காலம் வரை நாம் கண்டிருக்கிறோம். அதன் ஒரு தீவிர முகமாக வளர்ந்த சஹ்ரான், ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதலை நடாத்தும் அளவுக்கு வளர்ந்ததிலிருந்து சிந்தனாவாதங்களின் பெயர்களும் பின்னணிகளும் பற்றிய பதற்றம், எச்சரிக்கை மற்றும் அவதானமும் எழுந்துள்ளது.

பல இடங்களில் உணர்வு மேலோங்கும் நிலையில் இது விவாதத்திற்குட்படுத்தப்படுவதுடன் கடும்போக்குவாதிகளால் இலங்கை முஸ்லிம்களுள் ஒரு சாரார் வஹாபிசவாதிகள் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். எனினும், பொதுவாகவே அனைத்து முஸ்லிம்களையும் அதற்குள் அடக்கும் பேரினவாத கடும்போக்குவாதிகள், இலங்கையின் பாரம்பரிய முஸ்லிம்கள் என ஒரு பிரிவினை அடையாளப்படுத்தி அவர்களுக்கு விதி விலக்களிப்பதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர்.

கேட்பதற்கும் அலசுவதற்கும் வேண்டுமானால் இவற்றைப் பிரித்தறிய முடியுமாக இருந்தாலும், நாளடைவில் மீண்டும் ஒரு வன்முறை வெடித்தால், அதன் போது இந்த பேதங்கள் - பிரத்யேக அடையாளங்களுக்கப்பால் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களே தாக்கப் படுவார்கள். ஆதலால், இந்த சூனியத்திலிருந்து விடுபட்டு ஒற்றைச் சமூகமாக சிந்திக்க வேண்டிய கடமைப்பாடு எம் சமூகத்துக்கிருக்கிறது.

Judenboykott (Juden Boycott) என ஜேர்மனியில் அறியப்பட்ட பிரபலமான புறக்கணிப்பினை இத்தருவாயில் நினைவூட்டுவது தகும். ஹிட்லரின் வளர்ச்சியோடு ஜேர்மனியில் வலுப்பெற்ற யூத எதிர்ப்பு சிந்தனையின் விளைவால் யூத தொழில்நிறுவனங்களின் தயாரிப்புகள், வர்த்தகங்களை புறக்கணிப்பதற்கான சிந்தனையாகவே 1933ம் ஆண்டு இப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

எனினும், ஹிட்லரின் தேசியவாத நாசிக் கட்சியின் இம்முயற்சி பாரிய வெற்றியளிக்கவில்லை.  அன்றைய ஜேர்மனிய சனப்பரம்பலுக்கள் யூத சமூகத்தின் கலப்பின் ஆழம் இதன் காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை.

இத்தனைக்கும் 1933 ஜனவரியில் சர்வதேச அளவில் ஜேர்மனிய தயாரிப்புகளைப் புறக்கணிப்பதற்கான சர்வதேச பிரச்சார நடவடிக்கையை அமெரிக்கா வாழ் யூத சமூகமே ஆரம்பித்திரு;நதது. வலுவான எதிர்வினை நோக்கி நகர்ந்த நாசி நிர்வாகம் 1933 ஏப்ரல் மாதம் 7ம் திகதி யூத சமூகத்தைச் சார்ந்தோர் ஜேர்மனியில் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக, நீதிபதிகளாக பணியாற்றுவதற்கு எதிரான Law for the Restoration of the Professional Civil Service என அறியப்பட்ட சிவில் நிர்வாக சேவை சட்டத்தை நிறைவேற்றியது.

அனுபவிமிக்க மருத்துவர்கள் தவிர பெரும்பாலான யூத சமூகத்தைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்கள் இச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வரலாறு கூறுகிறது.

தேசியவாத வளர்ச்சியின் பின்னணியிலான மேற்சொன்ன வரலாற்றுச் சம்பவங்களோடு ஒப்பிடுகையி;ல் இலங்கையில் எழுச்சி பெற்றுள்ள தேசியவாத அடிப்படையிலான பேரினவாதமும் இதனையொத்த முறையிலேயே முஸ்லிம் சமூகத்தை அடக்கியாள நினைப்பதை தெளிவுறக் காணலாம். கடந்த ஏப்ரல் மாதம் பொது நிர்வாக அமைச்சினால் முஸ்லிம் பெண் அரச ஊழியர்களின் ஆடைக் கலாச்சாரத்திற்கு எதிராக வெளியிடப்பட்டிருந்த சுற்று நிருபம், அவிஸ்ஸாவெல, புவக்பிட்டி தமிழ் பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு எதிராக எழுந்த இனவாத அடக்குமுறை சூழ்நிலையென அனைத்துமே இதற்குள் சங்கடமின்றிப் பொருந்திக் கொள்கிறது.

எனினும், அதற்கடுத்த ஒன்றரை மாதத்துக்குள் யாரையும் நோகாத வகையில் சர்ச்சைக்குரிய சுற்று நிருபத்தை மாற்றிக்கொண்ட சாணக்கியத்தைப் பொறுத்தவரையில் அதற்கான பாராட்டினை முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குக் கொடுத்தே ஆக வேண்டும். விமர்சனங்களுக்கு அப்பால் இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் தலைமைகள் சரியான வகையில் செயற்பட்டதன் விளைவிலேயே ஆடைக்கலாச்சாரத் திணிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

எனினும், 'அபாயா' என்ற தெளிவான வார்த்தைப் பிரயோகம் இருக்க வேண்டும் எனக் கருதும் சமூக ஆர்வலர்கள் சிலரால் தாமதமாகவேணும் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் விசாரணை எதிர்வரும் செப்டம்பரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எது எவ்வாறாயினும், Judenboykott  போன்ற அபாயத்தை நோக்கி முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது இங்கு கட்டாயம் அவதானிக்கப்பட வேண்டும்.

2014 முதல் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒவ்வொரு தாக்குதலும் இதற்கான முன்னோட்டமாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு வன்முறையின் போதும் முஸ்லிம் சமூகத்துக்குப் பொருளாதார ரீதியிலான இழப்பையேற்படுத்துவதும் வர்த்தக சமூகத்தைப் பலவீனப்படுத்துவதுமே பேரினவாதிகளின் இலக்காக இருந்தமை தெளிவாகியது.

இந்நிலையில், தற்போது எழுந்துள்ள சூழ்நிலை முஸ்லிம் சமூகத்தை இரு வேறு திசைகளில் நெருக்குதலுக்குள்ளாக்க முனைகிறது. ஒன்று முஸ்லிம்கள் இந்நாட்டில் அனுபவித்து வரும் பிரத்யேக சலுகைகள், சட்டங்களை நீக்கி 'பொதுச் சட்டத்துக்குள்' கொண்டுவருவது, இன்னொன்று வர்த்தக ரீதியான வளர்ச்சியை முடக்குவதன் ஊடாக பேரினவாத கொள்கைக்கு வலுச் சேர்ப்பது.

அளுத்கம, மாவனல்லை, அம்பாறை மற்றும் அண்மைய சூழ்நிலையில் மினுவங்கொட, குருநாகல், பதியதலாவ வரை இதற்கான உதாரணங்களை நாம் கண்டிருந்தோம். முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்த பேரினவாதிகள் அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயன்றதும், பொய்க் குற்றச்சாட்டுகளை உருவாக்கி அதனூடாக வன்முறையைத் தூண்டியதும், தாக்குதல்களை நடாத்தி வர்த்தக நிலையங்களை எரியூட்டியதும், சேதப்படுத்தியதும் அடிப்படைக் காரணத்துக்கான வலுப்படுத்தல்களே. எனவே, கடந்த ஏழு வருடங்களாக அவ்வப்போது பயிற்சிக்கப்பட்டு வரும் சிந்தனா வடிவத்தை முழு அளவில் கட்டவிழ்த்து விடுவதற்கு பேரினவாதம் தயாராகவே இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட வேண்டியது.

வட-கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தனி நாட்டுக்கான ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போது அதனைத் தம் இனவெழுச்சிக்கான சந்தர்ப்பமாக மாற்றிக்கொண்ட சிங்கள அரசியல், அடுத்ததாக முஸ்லிம்களை அடக்கியாள்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என்பது அப்போதே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. ஆயினும், தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் கலப்பு இதன் வேகத்தைத் தவிர்த்தது, தடுத்தது அல்லது குறைத்தது என்று சொல்லலாம். இருப்பினும், பேரினவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் சிந்தனையும் - பலமும் உள்ள அரசும் இல்லாததனால் பாதிக்;கப்படக்கூடிய சூழ்நிலையில், அச்சத்துடனும் - சந்தேகத்துடனுமேயே முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருகிறது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே இன்று இச்சமூகத்துக்குள் சூபிஸ – வஹாபிச உட்சமூக போராட்டம், பழி சுமத்தல் மற்றும் சச்சரவுகள் வலுத்து வருகிறது. முன்னைய காலம் போன்றில்லாது தற்கால தொழிநுட்பமும் வசதிகளும் மார்க்க மற்றும் உலக விவகாரங்களை விரல் நுனியில் தருகிறது. ஆதலால், கால் மடித்து ஆலிம்களுக்கு முன்னமர்ந்து கற்றுக்கொள்வதற்காக வாரத்தில் ஒரு நாள் காத்திருக்கும் தேவை இல்லாது போயுள்ளது. ஆயினும், இவ்வகைக் கற்றலால் இச்சமூகம் வழி நடாத்தப்படுகிறதா? அல்லது தம் இச்சைக்கேற்றபடி மார்க்கத்தை மாற்றிக் கொள்ள வழி செய்கிறதா? என்ற கேள்வியும் சமூக மட்டத்தில் கேட்கப்பட கேள்வியாக உள்ளது.

இவ்வுரையின் முதற்பகுதியில் தெரிவித்திருந்தது போன்று, கால மாற்றத்தைக் கருத்திற்கொள்ளத் தவறிய சம்பிரதாயங்கள், உணர்வு மேலோட்டத்தினால் தம்மை நவீனப்படுத்தத் தவறியது எத்தனை உண்மையோ அது போன்றே மார்க்கத்தைத் தெளிவுபடுத்துவதாகக் கூறி தெளிவற்ற – தீவிரப்போக்குடைய சமூகமொன்று உருவாகியுமிருக்கிறது. இவ்வகையறாவினர், தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எனும் நிலையில் அல்-குர்ஆனுக்கு விளக்கம் கூறுவதும் மார்க்கத்தைத் திரிபுபடுத்துவதும் கூட இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த வித்தியாசத்தை நன்குணர்ந்து அறிந்து கொண்டுள்ள பேரினவாதம் அதனை சரிவரப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

பிரித்தாள இடங்கொடுத்த சூழ்நிலையில், நான் மட்டுமே சரியெனும் மமதையில், சூனியத்துக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகத்தை அங்கிருந்து மீட்டெடுப்பது யார்? என்ற கேள்விக்கு அவரவர் பார்வையில் வெ வ்வேறு பொறுப்பாளிகள் இருக்கலாம். விரல் நீட்டுவதற்கு இலகுவாக வழமை போன்று மார்க்கத்தலைமைகளையும் அரசியல் தலைமைகளையும் இழுத்துக் குறை கூறலாம். ஆயினும், நமக்கு நாமே இழைத்துக்கொள்ளும் அநீதியிது என்ற உணர்வு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியப்படுகிறது.

இவ்வாறு கருத்தியல் கொண்டிருப்பது கூட, அதாவது சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நிலைப்பாடு கூட வஹிக்கு முரணானது என்று சிந்தித்து அடம்பிடிக்கும் ஒரு தலைiமுறையைக் காணும் போது இதன் விபரீதம் சமூகத்தின் அடி மட்டத்தில் உணரப்பட்டு விட்டதா? எனும் கேள்வியெழுவது தவிர்க்கமுடியாதுள்ளது.

எது எவ்வாறாயினும், மாற்றங்காணப் புறப்பட வேண்டியது பாதிக்கப்படும் சமூகமேயன்றி வேறு யாருமில்லை. தம்மைச்சுற்றி நடப்பவை தம்மைத்தாக்கும் வரை அதன் பாதிப்பை உணர மறுப்பதால் உணர்வு மேலோங்க எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோமே தவிர, இன்று நமக்குள் இருக்கும் பிரிவினைகள் களைய ஆக்கபூர்வமாக என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அதற்கான முன்னெடுப்புகள் அவரவர் வாழும் தெருவிலிருந்து, ஊரிலிருந்து, மாவட்டத்திலிருந்து, மாகாணத்திலிருந்து கூட தலைநகரையும், தலைவர்களையும் வந்தடையலாம்!

2ld3lJX
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

1 comment:

Ghouse said...

Masha Allah. Excellent article. We should make changes to many of our religious and educational activities.

Post a Comment