கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை அறிந்த இளைஞர்கள் வீதியில் வெடி கொழுத்தி ஆராவாரம் செய்தனர்.
வியாழக்கிழமை(11) இரவு 9 மணியளவில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் ஒன்று கூடிய இளைஞர்கள் குழு கல்முனை தரவை பிள்ளையார் கோயில் முன்றல்,கல்முனை ஐக்கிய சதுக்க முன்றல், கல்முனை வாடி வீட்டு சுற்றுவட்டம், உள்ளிட்ட பகுதியில் வெடிகள் கொளுத்தி ஆரவாரம் செய்தனர்.
இதன் போது அங்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்த்து வாக்களித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளில் ஒன்றான கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நிரந்தர கணக்காளர் ஒருவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.இத் தகவலை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்தகவலை அறிந்த எமது கல்முனை வாழ் தமிழர்கள் நகரமெங்கும் பட்டாசுகளை கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எமது இளைஞர்களுடன் இணைந்த வெற்றி கொண்டாட்டம் எந்தவொரு இனத்தையும் வெறுப்பேற்றும் நோக்கம் அல்ல என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.
எமக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியானது எந்த இனத்திற்கோ மதத்திற்கோ எதிரானது அல்ல . எமக்கு இந்த வெற்றி கிடைப்பதற்கு முழு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பே தவிர வேற எந்த கட்சியுமல்ல. எனவே எமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய தேரர்கள்,மதகுருமார்கள் ,பொது அமைப்பினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றி என கூறினார்.
அத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டதற்கு உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவரான மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனை அங்கிருந்த இளைஞர்கள் தமது தோள்களில் தூக்கிச் சென்று அவரை வாழ்த்தியதை காண முடிந்தது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன.இதே வேளை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நிதி அதிகாரம் வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதியை தப்பவிட்டு மிகுதி அரசின் மீது பிழை கண்டுபிடிக்க முயன்றதால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம் என சுமந்திரன் எம்பி தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டதக்கது.
மேலும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு நீதி கோரி அண்மையில் உண்ணாவிரதப்போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் கல்முனை பிரதேச மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் அரசிடமும் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தொடர் அழுத்தத்தையும் பிரயோகித்து வந்திருந்தனர்.
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment